காரியங்கள் விதியாகச் செய்யுமளவே தேசம் சீர்மை எய்தும் - பதவி, தருமதீபிகை 572

நேரிசை வெண்பா

அதிகாரம் செய்வோர் அதிகா ரிகளாய்ப்
பதிகா ரியங்கள் படிந்து - விதியாகச்
செய்து வருமளவே தேசங்கள் சீர்மைமேல்
எய்தி வருமால் இனிது. 572

- பதவி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கருமங்களைச் செய்கிற கருமத் தலைவர் தம் கடமைகளை உணர்ந்து விதிமுறையாய்க் காரியங்களைச் செய்து வருமளவே ஒரு தேசம் சீரும் சிறப்பும் அடைந்து சிறந்த நிலையில் உயர்ந்து விளங்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இது கருமத் தலைமையின் நிலைமையைக் கூறுகின்றது.

அதிகாரம் என்னும் சொல் வினையாண்மை மேல் விளைந்து வந்தது. சிறந்த காரியங்களைக் தலைமையாகச் செய்யும் நிலைமை அதிகாரம் என நேர்ந்தது.

அதிகாரம் - உத்தியோகம், ஒழுங்கு, உரிமை. அதிகாரத்தை உடையவன் அதிகாரி என வந்தான்.

தான் செய்யவுரிய கருமங்களை உரிமையோடு ஊன்றிச் செய்த பொழுதுதான் கருமத் தலைவன் பெருமை மிகப் பெறுகிறான். ஒருவன் செய்யுங் கருமங்களிலேயே அவனுடைய பெருமைகளெல்லாம் மருமமாய் மருவியுள்ளன.

உரிய வினையைச் செய்தவன் அரிய வினையாளனாய் ஆண்மையும் மேன்மையும் அடைகின்றான்; அங்ஙனம் செய்யாதவன் இழிந்து கீழ்மையுறுகின்றான். கடமையான கருமத்தைக் கைவிட்ட பொழுதே மடமையான சிறுமைகள் அவனை மருவிக் கொள்கின்றன. சிறுமையடைந்து சீரழியாமல் உரிமையான கருமங்களை ஓர்ந்து செய்து பெருமைகள் பெற வேண்டும்.

தமக்கு உரிமையாகப் பதிந்துள்ள கருமங்களைப் பதி காரியங்கள் என்றது. தன்னுடைய தலைவனுக்கும் நாட்டுக்கும் உறுதி நலங்கள் பெருகி வரும்படி கருமங்களை உணர்ந்து செய்பவனே உயர்ந்த அதிகாரியாய்ச் சிறந்து வருகிறான்.

அரிய பதவியை அடைந்த போதே அவன் உரிய கடமைகளைக் கருதிச் செய்யும் பெரிய கடனாளி ஆகின்றான். பதவி .உயர உயரப் பாடும் பொறுப்பும் கூடவே உயர்கின்றன. .

Men in great place are thrice servants; servants of the Sovereign, servants of fame, and servants of business. (Bacon)

'உயர்ந்த பதவியில் உள்ளவர் மூன்று வகையில் ஊழியர்களாயுள்ளனர்; தம் அரசுக்கும், கீர்த்திக்கும் தொழிலுக்கும் அவர் அடிமைகள்’ என்று பேக்கன் என்பவர் இங்ஙனம் கூறியிருக்கிறார்

தலைமையான பதவியிலிருப்பவருடைய நிலைமைகளை இதனால் இனிது உணர்ந்து கொள்கிறோம். வெளியே பிறரை அதட்டி அதிகாரங்கள் செய்து வந்தாலும் உள்ளே பலருக்கும் ஊழியராகவே அவர் வாழ்ந்து வருகிறார்.

தன் தொழிலில் பிழைகள் நேராதபடி பார்த்து, உலகம் பழியாதவாறு ஒழுகி, தனக்கு மேலேயுள்ள தலைவன் பணிக்குத் தலைசாய்த்து எவ்வழியும் அஞ்சி நடந்து வரும் நிலையில் இருத்தலால் அதிகாரியினுடைய நெஞ்சக் கவலைகள் நெடிது நீண்டுள்ளன. அவனுடைய வாழ்வு கூர்மையான வாள்முனையில் நடப்பது போல நாளும் சூழ்நிலைகள் வாய்ந்து நிற்றலால் அந்த அதிகார வாழ்வின் நீர்மையும் நிலைமையும் நிலை தெரியலாகும்.

பிறருடைய பார்வையில் உயர்ந்த பதவியில் இருப்பதுபோல் சிறந்து தோன்றினாலும் தன்னுடைய உள்ளத்தில் கவலையும் பொறுப்பும் அதிகாரிக்கு நிறைந்திருக்கின்றன. பிறரை அடக்கியாள நேர்ந்தவன் யாண்டும் அடங்கி ஒடுங்கி நெறியே நடக்க வேண்டியவனாகின்றான். நெறியோடு நடந்து வரும் அளவே பதவி நிலைத்து வருகிறது. நடை பிறழ்ந்தால் இடைமுறிந்து இழிந்து வீழ்கின்றான்.

“The standing is slippery, and the regress is either a downfall or at least an eclipse, which is a melancholy thing.” - Great place

'நிலை தவறினால் அதிகாரி அதோகதியில் வீழ்கிறான்; துன்பஇருள் அவனைச் சூழ்ந்து கொள்கின்றது' என்னும் இது இங்கே அறிய வுரியது.

உடலுக்குக் கண், வாய், கைகால்களைப் போல், நாட்டுக்கு வினையாளர்கள் அமைந்திருக்கின்றனர். அந்த அதிகாரிகள் தத்தமக்குரிய கருமங்களைச் செம்மையாகச் செய்துவரின் தேசம் நன்மைகள் பல சுரந்து ஒளி மிகப் பெற்று உயர்ந்து விளங்கும்.

தம் கடமைகளை ஓர்ந்து அவர் வினை செய்யாதொழியின் அங்கே மடமையிருள் மண்டிக் கொடுமைகள் பல நேரும்.

உறுப்புகள் சரியாகத் தொழில் செய்யவில்லையானால் உடல் இழிந்து படுகின்றது; வினையாளர்கள் தம் கருமங்களைக் கருதிச் செய்யாதொழியின் நாடு பீடழிந்து கேடுறுகின்றது.

விதியாகச் செய்துவரும் அளவே சீர்மை. என்றது அதிகாரிகளுடைய நீர்மைகளை நினைந்துணர வந்தது.

நெறி முறையே அவர் கருமங்களைச் செய்யின் தேசம் தேசு மிகப் பெறுகின்றது. அவரும் சீர்மையுடையராய்ச் சிறந்து விளங்குகின்றார். ஆட்சியளவு மாட்சி விளைகின்றது.

நேரே சரியாய்க் காணாத கண் குருடாய் இழிகின்றது. கேளாத காது செவிடு எனப்படுகின்றது. நடவாத கால்கள் முடமாகின்றன. அதுபோல் தம் கடமைகளைக் கருதிச் செய்யாதவரும் கடையராயிழிகின்றனர்.

உரிய பொறுப்புகளை உணர்ந்து அதிகாரிகள் உண்மையாய் உழைத்து வர வேண்டும்; உழைப்பில் பிழை நேரலாகாது. கருமத் தலைமையைக் கருதிச் செய்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-19, 9:10 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 162

மேலே