குடிசனங்கள் நன்மையுறப் பணிபுரியின் மண்பேணி நிற்கும் - பதவி, தருமதீபிகை 573

நேரிசை வெண்பா

நாட்டில் குடிசனங்கள் நன்மையுற நன்காய்ந்து
வீட்டில் குடும்பமென மேலோர்ந்து - ஈட்டிநின்ற
பண்போ(டு) இதமாய்ப் பணிபுரியின் அன்னவனை
மண்பேணி நிற்கும் மகிழ்ந்து. 573

- பதவி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தம் குடும்பத்தை உரிமை அன்போடு கருதிப் பேணுவது போல் நாட்டிலுள்ள குடிசனங்களையும் ஆதரவோடு அதிகாரிகள் பேணிவரின் அவரை உலகம் புகழ்ந்து போற்றி மகிழ்ந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர். அதிகார நிலையில் அமர்ந்திருப்பவன் குறியோடு கூர்ந்து ஓர்ந்து செய்யவுரிய கடமையை இப்பாடல் குறித்துள்ளது. கருமங்கள் புரிவதில் பல மருமங்கள் மருவியிருக்கின்றன.

தன்னுடைய உறவு முறைகளுக்கே மனிதன் மனம் உவந்து உரிமையுடன் உதவி செய்ய நேர்கின்றான். தன் சாதி, தன் மதம், தன் இனம் என இன்னவாறான வேறுபாடுகளால் மனிதன் கூறுபட்டு நிற்கிறான். உடலளவில் தோன்றியுள்ள இந்தச் சின்ன வேற்றுமைகளையெல்லாம் அறவே மறந்து விட்டு எல்லாரிடமும் பரந்த அன்பு செலுத்தி நேர்மையோடு நீர்மை புரிந்து வரின் அவன் சிறந்த மனிதனாய் உயர்ந்து விளங்குகின்றான்,

உள்ளம் சுருங்க உயர்வு சுருங்குகிறது. அது பெருந்தன்மையாய் விரிந்து உயர்ந்த போது பெரியோர், மேலோர், உயர்ந்தோர் என வெளியே ஒளிபெற்று நிற்கின்றார். மனம் உயர மதிப்புகள் உயர்கின்றன.

மனத்தின் அளவே மனிதன் மாண்படைந்து வருகிறான். அரச மன்றில் அங்கங்களாய் அமர்ந்து தேசப் பணிகளைச் செய்ய நேர்ந்தவர் எவ்வழியும் செவ்வியராய்த் திருந்தியிருப்பின் அவர் திவ்விய நிலையில் சிறந்து திகழ்வார். கருமத் தலைவர் தரும நெறிகளைக் தழுவி ஒழுகின் உலக மக்கள் வாழ்வு உயர் நிலைகளைத் தழுவி எழும். அங்கே இன்ப நலங்களும் பொங்கி விளங்கும்.

பண்போடு இதம் புரியின். என்றது பதவியாளருடைய பான்மை தெரிய வந்தது.

இனிய நீர்மை பண்பு என இசைந்தது. அதனையுடையவர் இனியராய் வருதலால் மனிதருள் அவர் மாண்பினராயினர்.

தலைமையான அதிகாரப் பதவியில் அமர்பவர் பண்புடையராயிருத்தல் வேண்டும். இலரேல் அவரால் நாட்டுக்குக் துன்பமே நேரும். தேச காரியங்கள் இராச காரியங்களாய்ச் சிறந்திருத்தலால் அவற்றைச் செய்ய நேர்ந்தவர் செவ்வியராய் உயர்ந்திருத்தலை வையம் எவ்வழியும் எதிர்பார்த்து நிற்கின்றது.

உரிமையாக வாய்த்த பதவியை அருமையாகப் போற்றிவரின் பெருமைகள் பெருகி வருகின்றன. பலரும் வணங்கி வழிபடும் மாட்சிமையுடைமையால் அதிகாரம் அழகிய காட்சியாய் ஒளி புரிகின்றது. உத்தியோகம் புருட லட்சணம் என்பது பழமொழி. தொழிலின் அளவே எழில் எழுகின்றது.

மனிதனை மாண்புறுத்தி வருதலால் அதிகாரம் ஒரு மாய மோகமாய் மருவி நிற்கிறது. இத்தகைய விழுமிய பதவியைப் பெற்றவர் எத்தகைய நிலைகளிலும் வழுவாமல் ஒழுகி வர வேண்டும். வழுவின் பழியும் இழிவும் ஒழியாமல் பற்றிக் கொள்ளும்.

அதிகாரி செய்யும் பிழைபாடுகளுள் மிகவும் கொடியது பரிதானம் வாங்குதல். நடுவு நிலைமையுடன் நின்று காரியங்களை யாண்டும் நேர்மையாகச் செய்யவுரியவன் நெஞ்சம் திரிந்து இலஞ்சம் கொள்ளின் அது படு வஞ்சகமாய்ப் பழிபடுகின்றது.

கொடியவர்களையும் திருடர்களையும் வஞ்சகர்களையும் இலஞ்சம் வளர்த்து வருதலால் அது பஞ்ச மாபாதகம் என மேலோரால் அஞ்ச நேர்ந்தது. இலஞ்ச ஒழிப்பு என இக்காலத்தில் ஒரு சட்டமும் இங்கே செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த ஈனத் தீமை இந்த நாட்டில் எவ்வளவு பரவியிருக்கிறது என்பதைச் செவ்வையாகத் தெரிந்து கொள்ளலாம்.

கெட்ட காரியங்களைச் செய்கிற துட்டர்களை அடக்கி ஒடுக்குவது அதிகாரிகளுடைய தொழில். அவரே கேடு செய்யத் துணிந்தால் நாடு எவ்வாறு பாடு பெற்று வரும்?

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

வலியினால் இலஞ்சங்கொள் மாந்தர் பாற்சென்று
மெலியவர் வழக்கினை விளம்பல் வாடிய
எலிகள்மார்ச் சாலத்தி னிடத்தும் மாக்கள்வெம்
புலியிடத் தினுஞ்சரண் புகுத லொக்குமே. 1

அல்லினிற் களவுசெய் பவரை வெஞ்சிறை
யில்லிடும் பண்பினுக் கியைந்த மாக்களே
எல்லினில் எவரையு மேய்த்து வவ்வலாற்
கொல்லினும் போதுமோ கொடியர் தம்மையே! 2

கொலைஞருஞ் சோரருங் கொடிய வஞ்சரும்
நிலைபெற வவர்கையி னிதியைக் கொண்டுதண்
அலைகட லுலகிய லழிக்குந் தீயர்பால்
மலையெனப் பாவமும் பழியு மண்டுமே. 3

பயிரினை வேலிதான் மேய்ந்த பான்மைபோற்
செயிருற நீதியைச் சிதைத்தோர் தீயன்சாண்
வயிறினை வளர்த்திட வாங்கு மாநிதி
வெயிலுறு வெண்ணெய்போல் விளியும் உண்மையே. 4 - கைக்கூலி
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல், நீதி நூல்

இலஞ்சத்தால் விளையும் தீமைகளையும், அதனை வாங்குகிற அதிகாரிகளின் இழிநிலைகளையும் இவை உணர்த்தியுள்ளன. உரைகளில் பொதிந்துள்ள உணர்வு நலங்களை ஊன்றி உணர்ந்து கொள்பவர் அதன் தீமையைத் தேர்ந்து தெளிந்து கொள்ளுவர்.

இரவில் மறைந்து திருடுகிறவனைக் கள்ளன் என்றிகழ்ந்து சிறையில் தள்ளிக் கொடிய துயரைச் செய்கின்றார், அங்ஙனம் எள்ளித் தண்டிக்கின்ற அதிகாரிகளே அந்தக் கள்ளரிடம் பகலில் பொருளைக் கவர்ந்து கொள்ளுகிறார்களே! இது எவ்வளவு பெரிய கொள்ளை; பட்டப் பகலில் துணிந்து பிறருடைய பொருளைக் கவர்ந்து கொள்ளுகிற இந்த அதிகாரத் திருடர்களைச் சிறையில் இடுவது முறையாகாது; சிரச்சேதமே செய்ய வேண்டும் என்று ஒரு பெரியவர் பறையறைந்திருக்கின்றார். தலைவன் இழிவு தலை அழிவாகிறது.

பிழைகள் புகாமல் பாதுகாத்துச் சமுதாயத்தை எவ்வழியும் செவ்வையாக நடத்தும்படி நியமிக்கப்பட்டுள்ள தலைவனே நிலை வழுவிப் பழி வினைகளைச் செய்வது படுபாதகமாதலால் அது கொடிய கொலைத் தண்டனைக்குரிய குற்றமாகக் குறிக்க நேர்ந்தது.

தன் தலைமையையும் நிலைமையையும் உணர்ந்து தலைவன் நெறியோடு ஒழுகிவரின் உலகம் அவனை உயர்வாக உவந்து வரும். அந்த மதிப்பையும் மாண்பையும் இழந்து விடாமல் மதியோடு ஒழுகி வருபவன் சிறந்த வினையாளனாய் விளங்கி நிற்கிறான்.

மண் பேணி நிற்கும் என்றது மண்ணவர் எண்ணங்களில் அவன் கண்ணியமாய் மருவி நிற்கும் நிலை தெரிய வந்தது.

வினையாளனாய் அதிகார பதவியைப் பெற்றவன் உலக மக்களுடைய உவகை மதிப்புகளை அடைந்து கொள்ள வேண்டும். அது அவனுக்குச் சிறந்த பரிசாய் விளங்கி நிற்கின்றது.

தேச மக்களுக்கு இதமாகச் சேவை செய்வதே ஈசனுக்குச் செய்கிற பெரிய பூசனையாம். பிற உயிர்கள் உவகையுறும்படி வினை புரிந்து வருபவன் உயர் நிலையை அடைந்து ஒளி மிகுந்து வருகிறான். அவ்வாறு அளி சுரந்து செய்யாதவன் இளிவடைந்து வீழ்கின்றான்.

நேரிசை வெண்பா

நாட்டு நலங்கருதி நல்லது செய்பவர்
பாட்டு நலங்கண்டு பாராள்வார் - நாட்டுநலம்
காணாமல் தன்னலமே காண்பார் கழிபழியே
பூணாகப் பூண்பர் புனைந்து. - கவிராஜ பண்டிதர்

பழியும் துன்பமும் படியாமல் புகழும் இன்பமும் பொருந்தி வரும்படி அதிகாரிகள் திருந்தி ஒழுக வேண்டும்.

நாட்டுக்கு நயன் காணாமல் தன் பாட்டுக்குப் பயன் காண்பவன் பழியே காண்கின்றான். அந்தப் பழிக்காட்சியால் அழிமதியாளனாய் இழிந்து படுகிறான். படுமோசம் தெரியாமல் பாழ்படுவது பரிதாபமாகின்றது. ஓர்ந்து வினை செய்து உயர்வு காண் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Dec-19, 6:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 99

சிறந்த கட்டுரைகள்

மேலே