கல்விக்கும் ஓதிற் புகழ்சால் உணர்வு – நான்மணிக்கடிகை 103

இன்னிசை வெண்பா

மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய
காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்
ஓதிற் புகழ்சால் உணர்வு. 103

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

வீட்டுக்கு ஒளி பெண்கள் ஆகும்;

பெண்களுக்கு நல்லியல்புகள் நிறைந்த புதல்வர்கள் ஒளியாகும்;

பெற்றோர் மனத்திற்கு இனிமை தரும் அன்பிற்குரிய புதல்வர்க்கு கல்வியறிவே ஒளியாகும்;

அக் கல்வியறிவிற்கும் சொல்லுமிடத்து கழ் நிறைந்த மெய்யுணர்வே ஒளியாகும்.

கருத்து:

மனைக்கு விளக்கம் நன் மனைவி; நன் மனைவிக்கு விளக்கம் அறிவறிந்த மக்கள்; அம் மக்கட்கு விளக்கம் கல்வி; கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு.

விளக்கம்:

மனக்கு அத்துச் சாரியை தொக்கது - மனத்திற்கு,
புகழ்சாலுணர்வு – மெய்யுணர்வு.

முதலில் நின்ற விளக்கம் என்னும் சொல் மற்ற மூன்றிடத்தும் கூட்டப்படுதலால் முதல் நிலைத் தீவக அணியாகும். இச்செய்யுள் மாலா தீவகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Dec-19, 6:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 290

மேலே