ஒள்நிதி கையுற்றால் புண்ணியங்கள் செய்து புகழ்பெறலாம் – செல்வம், தருமதீபிகை 566

நேரிசை வெண்பா

எண்ணியநல் இன்பங்கள் எய்தி மகிழலாம்
புண்ணியங்கள் செய்து புகழ்பெறலாம் – ஒண்ணிதிகை
யுற்றால் அரிய உறுதி நலமெல்லாம்
பெற்றாள லாமே பெரிது. 566

- செல்வம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஒளிபொருந்திய செல்வம் ஒருவர் கைவசம் இருந்தால் நினைத்த பல சுகபோகங்களை எளிதில் அடைந்து மகிழ்வெய்தலாம். பல புண்ணிய காரியங்கள் செய்து புகழும் பெற்றிடலாம். அரிய உறுதி நலங்கள் பெற்று பேரளவில் பெருமையும் அடைந்து மக்களின் மனதில் ஆட்சி செய்யலாம். செல்வத்தால் விளையும் நலன்களை இது உணர்த்துகின்றது.

தேக போகங்களையே சீவர்கள் யாண்டும் விரும்பியுள்ளனர். மெய், வாய் முதலிய பொறி இன்பங்களில் வெறி மண்டியுள்ளமையால் மனித வாழ்வு எவ்வழியும் வெவ்விய ஆசைகளாய் விரிந்து நிற்கின்றன. அருந்தல் பொருந்தல்களிலேயே யாவரும் அலமந்துழலுகின்றனர். தாம் விரும்பிய இன்ப நலன்கள் யாவும் பொருளால் மேவி வருதலால் எல்லாரும் அதனையே அவாவிப் போற்றி வருகின்றனர்.

பொருள் போகங்களை விளைத்துப் பல வகையான மேன்மைகளை அருளுகின்றது. அது இல்லாத இடத்தில் சோகங்களும் இழிவுகளும் தொடர்ந்து அடர்ந்திருக்கின்றன.

வறுமை சிறுமை மிகச் செய்யும்; இருமையும் கெடுக்கும் என்றதனால் பொருள் இல்லாதவரது இழிவும் துயரமும் விழி தெரிய வந்தன. இன்னாமை நீங்கின் இனிமை ஓங்கும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

வறுமை போல இன்னாது
..வறுமை அன்றி வேறில்லை;
மறுவின் மொழிகள் சோர்வுபடும்;
..வாய்த்த குடிநற் செயல்மொழிகள்
இறுதி படும்;மற் றிரப்பாதி
..எல்லாத் துயரும் உடனாகும்;
பிறனின் நோக்கும் இன்றாளும்;
..பிள்ளாய்! அதுவந் திடினிறத்தல்.

பொருளைப் போற்றி வாழும்படி தன் மகனுக்குச் சோம காந்தன் என்னும் அரசன் இன்னவாறு புத்தி போதித்திருக்கிறான்.

கட்டளைக் கலித்துறை

தாயும் பகை;கொண்ட பெண்டீர் பெரும்பகை தன்னுடைய
சேயும் பகைவுற வோரும் பகையிச் செகமு(ம்)பகை
ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கிலிங் காதலினால்
தோயுநெஞ் சேமரு தீசர்பொற் பாதஞ் சுதந்தரமே.

செல்வம் இல்லையானால் இவ்வுலகில் நேரும் இழிவுகளையும் அல்லல்களையும் சுட்டிக் காட்டித் தம் நெஞ்சை நோக்கிப் பட்டினத்தடிகள் இப்படிப் போதித்துள்ளார்.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

பெண்டிர் மதியார் பெருங்கிளை தானது
கொண்ட விரகர் குறிப்பினின் அஃகுப
வெண்டறை நின்று வெறுக்கை இலராயின்
மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார். 65 வளையாபதி

சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்
நல்லவை யாரும் நனிமதிப் பாரல்லர்
கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய
புல்லென்று போதலை மெய்யென்று கொள்நீ. 66 வளையாபதி

தம் கையிற் பொருள் குறைந்து இல்லையான நல்குரவாளர் செயற்கரிய செய்து புகழுடையராயினும் அப்புகழை யாரும் அவையில் பாராட்டிப் பேசார்; பொருளியல்பினை ஆராய்ந்து அறியுமியல்பு உடைய நல்ல அவையகத்தார் தாமும் மிகவும் மதிப்பாரல்லர்; அந் நல்குரவாளர் பலகாலும் பயின்ற கல்விதானும் சிறப்புறாமற் பொலிவற்றுப் போமென்பதனை நீ வாய்மை யென்றே அறிந்து கொள் என்று செல்வம் சேர்த்துக் கொள்வதைப் பற்றியும், செல்வம் இல்லையென்றால் ஏற்படும் இழிவு பற்றியும் சொல்லப்பட்டது.

ஏழை, வறியன், எளியன், சோம்பேறி என்று பொருள் இல்லாதவன் இழிந்து நிற்கிறான். செல்வம் இல்லாத பொழுது பலவகையான அவமானங்களும் அல்லல்களும் நேரும்; ஆதலால் பொருளை எல்லோரும் விரும்பித் தொகுத்துப் பெருமையோடு வாழவேண்டும் என்று விரும்புகின்றனர். இனிய பொருள் கைவர இன்னாத மருளெல்லாம் மறைந்து போகிறது.

நேரிசை வெண்பா

இல்லான் வறியன் எளியன் மிடியனெனப்
பொல்லாத சொல்லால் புலையாடி – எல்லாரும்
எள்ளி இகழும் இழிபழியை நீக்கியுயர்
வள்ளியன் ஆக்கும் வளம்.

என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பொருள் இல்லாத பொழுது மனிதன் இருக்கும் வகையும், அது வந்த போது அவன் நின்று நிலவும் நிலையும் இதனால் நன்கு அறியலாகும். புண்ணியங்கள் செய்து புகழ் பெறலாம். எண்ணிய இன்ப நலன்களை இனிது எய்தி அனுபவிப்பதோடு புண்ணியத்தையும் புகழையும் பொருளால் செய்து கொள்ளலாம்; ஆதலால் அதன் கண்ணிய நிலைகளைக் கருதியுணரும்படி இது காட்டி நின்றது.

நல்ல வழியில் வந்தது என அச்செல்வத்தின் நயம் தெரிய ஒண் நிதி என்றது. நீதி நெறியோடு தழுவி வந்த பொருளே நிதி என நேர்ந்தது. சங்க நிதி, பதும நிதி என்னும் தெய்வ நிதிகளை இங்கே சிந்தனை செய்து கொள்க. நல் வழியில் வந்த செல்வமே நலம் பல செய்ய வுரியதாம். தீவினை விட்டு ஈட்டல் பொருள் என நம் ஔவை காட்டியுள்ள பொருட்காட்சி ஈண்டுக் கருதிக் காணத் தக்கது. புனிதமாய் வருவது புண்ணியமாய்ப் பெருகுகிறது.

பொருளைப் பெறுவது போகங்களை அனுபவித்தற்கு மாத்திரமன்று; மறுமைக்குரிய தருமங்களையும் செய்து கொள்ளவேயாகும். அங்ஙனம் செய்யாத பொழுது அப்பொருள் ஈட்டம் மருளீட்டமாய் மாண்பிழக்கின்றது.

கண்ணியமான வழிகளில் சம்பாதித்த பொருளே நல்ல புண்ணியமான நெறிகளில் பெருகி உயர்ந்து வருகிறது. பொருளைப் பெறுவது போகங்களை அனுபவித்தற்கு மாத்திரமன்று. மறுமைக்குரிய தருமங்களையும் செய்து கொள்ளவேயாம்.

அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉம் செய்கை போல’ – மணிமேகலை

தரும நெறியில் வந்த பொருள் தரும வழிகளில் பரவிநின்று இருபிறவிகளிலும் நிலையாய் இன்பந்தரும். பசித்தவர்க்கு உணவிடுதல், நீர்நிலைகளை உருவாக்கல், கல்விச்சாலைகளை அமைத்தல் ஆகியவை உயர்ந்த அறங்களாய் பொருளினால் ஒளி செய்யப்படுவன.

இத்தகைய அறம் புகழ் இன்பம் முதலியன யாவும் பொருளால் அமைந்து வருதலால் அது புண்ணியத்தின் வித்து எனப் பொலிந்து நின்றது. பொருளுக்கு வித்தம் என்று ஒரு பெயர்.

எல்லா மேன்மைகளும் விளைந்து வருகற்குப் பொருள் மூல வித்தாய் இருத்தலால் அது வித்தம் என வந்தது.

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்(கு) எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு. 760 பொருள் செயல்வகை

பொருளுடையவர்க்கு அறமும் இன்பமும் எளிதாக அமையும் என இது அருளியுள்ளது. முதலில் கண்ணும் கருத்துமாய்ப் பொருளை ஈட்டு; பின்பு எல்லா நலங்களும் உன்னை நோக்கி ஓடி வரும் என வள்ளுவர் இதில் உணர்த்தியிருக்கும் அழகு ஊன்றி யுணரவுரியது.

அரிய பொருள் கைவரின் அறமும் இன்பமும் எளியனவாய் ஒருங்கே விரைந்து உன் மருங்கு வந்து நிற்கும்.

ஒண் பொருள் எண் பொருள் என்பதில் உறைந்துள்ள நுண் பொருளை நுனித்து நோக்குக. பொருளை நெறியே ஈட்டுபவர் புண்ணிய போகங்களை முறையே நண்ணி மகிழ்கின்றனர்.

இன்னிசை வெண்பா

வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவண தெய்த இருதலையும் எய்தும்
நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்(து)
அடுவது போலுந் துயர். 114 மெய்ம்மை, நாலடியார்

அறம், பொருள், இன்பம் என்னும் இம்மூன்றனுள் நடுவேயுள்ள பொருளை ஒருவன் அடைவானாகில் முன்னும் பின்னும் மன்னியுள்ள அறமும் இன்பமும் அவனிடம் எளிதே வந்தடையும்; அவ்வாறு நடுவில் நின்றதான ’செல்வப் பொருளை’ அடையாதவன் கொல்லன் உலையில் இட்டு இரும்பைக் காய்ச்சுவது போலும் வறுமைத் துன்பத்தை அடைந்து வருந்திப் பதைத்து அயர்வான் என உணர்த்தியுள்ளது.

இல்லாதவனது அல்லல் நிலைக்கு இதில் உவமை சொல்லியிருப்பது உள்ளத்தை நடுங்கச் செய்கிறது.

தன் உள்ளத்தில் அருளும் இரக்கமும் உடையனாயினும் கையில் பொருள் இல்லையானால் அவன் யாதொரு உதவியும் செய்ய இயலாது. பொருள் இருந்தால் அருள் வளரும்; அன்பு தழையும், அறம் விளையுமாதலால் எல்லா நன்மைகளுக்கும் அ.து. ஈன்ற தாயாய் ஆன்ற மகிமை புரியும்.

அருளென்னும் அன்பீன் குழவி பொருளெஎன்னும்
செல்வச் செவிலியால் உண்டு. 757 பொருள் செயல் வகை

அருளை வளர்க்கும் செவிலித்தாய் எனப் பொருளை இதில் போற்றியிருக்கும் அழகைப் பார்க்க வேண்டும். செல்வச் செவிவி என்னும் பேர் சீர்மை நிறைந்து நீர்மை சுரந்துள்ளது.

'இருள்படு நெஞ்சத்(து) இடும்பை தீர்க்கும்
அருள்நன் குடையர் ஆயினும் ஈதல்
பொருளில் லோர்க்கஃ(து) இயையா தாகுதல்
யானும் அறிவென் மன்னே. - அகநானூறு, 335

மதுரைத் தத்தங் கண்ணனார் என்னும் சங்கப் புலவர் பொருளின் பெருமையைக் குறித்து இங்ஙனம் உறுதி கூறியிருக்கிறார்.

பொருள் அருள் அறங்களை வளர்த்து இருமை இன்பங்களையும் இனிதருளும் என்பதறிந்து அதனை நல்ல வழியில் சம்பாதித்து உரிமையுடன் பேணி உறுதி நலங்களைக் காணுங்கள் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jan-20, 11:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

சிறந்த கட்டுரைகள்

மேலே