ஞானம் தெளிந்த முனிவோரும் விழைவர் நெகிழ்ந்து – செல்வம், தருமதீபிகை 567

நேரிசை வெண்பா

வானும் நிலனும் வரையும் கடலுமெலாம்
நானும்நீ என்று நகையாடி – ஞானம்
தெளிந்த முனிவோரும் செய்பொருளைக் கண்டால்
நெளிந்து விழைவர் நெகிழ்ந்து. 567

- செல்வம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மண், விண், மலை, கடல் முதலிய உலகத் தோற்றங்கள் எல்லாம் கடவுள் நிலை என்று கருதி உரையாடுகிற பெரிய ஞானிகளும் பொருளைக் கண்டால் உள்ளம் நெகிழ்ந்து விரைந்து விழைந்து கொள்ளுவர்.

பொருளில் யாரும் மருள் கொண்டுள்ளனர். அரிய துறவிகளும் பெரிய ஞானிகளும் அதில் மயங்கி யிருக்கின்றனர். அந்த மயக்கம் அதிசய விசித்திரமாயுள்ளது.

உலகப் பொருள்கள் யாவும் நிலையில்லாதன; பரம்பொருள் ஒன்றே என்றும் நித்தியமானது; நித்த முத்த புத்த சுத்த பரிபூரணமான அந்தப் பரம்பொருளை உறுதியாகக் கருதி நிற்பவரே பிறவி தீர்ந்து பேரின்பம் அடைவர் என இங்ஙனம் தெரிந்து கொண்ட உயர்ந்த ஞானிகளும் பொருளைக் கண்டபோது இழிந்து அதனை விழைந்து கொள்ளுகின்றனர்.

பரம்பரையாய்ப் பழகி வந்துள்ள வாசனை உரம் பெற்றுள்ளமையால் ஈசனையும் மறந்து பொருள் மேல் ஆசை கொள்ள நேர்கின்றனர். பொன், பெண், மண் என்னும் மூவகை இச்சை களிலும் பொன் ஆசை முன்னாக மன்னியுள்ளது.

பொருளை மனிதன் இவ்வளவு ஆவலோடு விரும்புவகற்குக் காரணம் என்ன? உலக போகங்கள் பலவும் பொருளால் இனிது அமைகின்றன; சீவிய நிலைகள் செழித்து வருகின்றன ஆதலால் அதனை மக்கள் பேராவலோடு விரும்புகின்றனர்.

உயிர் வாழ்வின் சுகங்கள் அதனால் உளவாம் என அனுபவங்களால் உறுதி பூண்டுள்ளமையால் யாவரும் அதன்பால் ஆசை கொண்டு யாண்டும் அவாவி நிற்கின்றனர்.

’பணத்தைக் கண்டால் பிணமும் வாயைப் பிளக்கும்’ என்பது பழமொழி. பொருளின் அதிசய நிலையை இது விசித்திரமாய் விளக்கியிருக்கிறது. செத்த சவத்தையும் பிழைக்க வைக்கின்ற அற்புத சக்தி பணத்திற்கு உண்டு என்பதை இது உணர்த்துகின்றது. பணம் எதுவும் செய்யும் என உன்னி ஊக்கும்படி அது மன்னியுள்ளது.

இன்னவாறு பொருள் அரிய இசைகளைப் பெற்றிருத்தலால் பெரிய சன்னியாசிகளும் நசையாய் அதனை எண்ணி ஏங்கி இழிந்து படலாயினர்.

கலிநிலைத்துறை
(மா விளம் விளம் விளம் மா)

குருளை மான்பிணித்(து) இளம்சிறார் ஊர்ந்திடும் கொடித்தேர்
உருளை ஒண்பொனை மணித்தலம் கவர்ந்துகொண் டுறுவ
வெருளின் மாக்களை வெறுப்பதென் முனிவரும் விழைவார்
பொருளின் ஆசையை நீங்கினர் யாவரே புவியில்? 53 நகர் புகு படலம், மகேந்திர காண்டம், கந்த புராணம்

சூரபன்மனுடைய இராசதானி ஆகிய வீர மகேந்திரபுரியில் நிகழ்ந்த ஒரு காட்சியை இது காட்டியுள்ளது. அந் நகரின் பெரிய இராச வீதிகள் பளிங்கு முதலிய மணிகளால் தளவரிசைகள் செய்யப் பெற்றுள்ளன. பொன்னால் செய்த அழகிய இரதங்களை அரசிளங் குமரர்கள் அவ்வீதிகளில் ஊர்ந்து செல்லுகின்றனர். மான் குட்டிகள் பூட்டிய அத்தேர்கள் ஓடும் பொழுது பொன் உருளைகள் பளிங்குத் தளங்களில் உருண்டு போகின்றன. அங்ஙனம் போங்கால் அப்பொன்னின் ஒளி அயலெங்கும் வீசுகின்றது. அந்த மணித்தளம் பொன்னை ஆசையோடு கவர்ந்து கொள்வது போல் அக்காட்சி கனிந்து நின்றது. சடமான தளமே இவ்வாறு பொருள் ஆசை மண்டியிருத்தலால் மக்கள் ஆசை கொண்டு உழல்கின்றார் எனப் பிழை சொல்வது பிழை. பெரிய ஞான முனிவரும் பொருளின் ஆசையை நீங்க முடியாமல் ஏங்கியுள்ளனர் என வீரவாகுதேவர் இவ்வாறு வியந்து போயுள்ளார்.

முனிவரும் விழைவார் என்றது விழைவு நீங்கிய அவர் விழைந்து வீழ்ந்துள்ள இழிவு தெரிய வந்தது. உம்மை உணர்த்தி நிற்கும் பொருண்மையை நுண்மையாக ஓர்ந்து கொள்ள வேண்டும்.

புவியில் பொருளின் ஆசையை யாவரே நீங்கினர்? எனக் கவி இதில் வினவி விளக்கியிருக்கும் நிலை வியந்து காணவுரியது. பொருள் யாரையும் மயக்கித் தன் வசப்படுத்தும் என அதன் அதிசய வசியம் துதி செய்ய வந்தது.

கலிநிலைத்துறை
(மா விளம் விளம் விளம் மா)

தெருண்ட மேலவர், சிறியவர்ச் சேரினும் அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவர் எனுமிது வழக்கே:
உருண்ட வாய்தொறும், பொன்உருள் உரைத்துரைத்(து) ஓடி,
இருண்ட கல்லையும் தன்நிறம் ஆக்கிய இரதம். 8 வரைக்காட்சிப் படலம், பால காண்டம், இராமாயணம்

தசரதன் மிதிலைக்கு எழுந்தருளி வரும்பொழுது இடையே சந்திர சைலம் என்னும் மலையில் தங்கி யிருந்தான். அந்த மலைச் சாரலில் ஓடி உலாவிய தேர்சளின் நிலைகளைக் குறித்து இது உரைத்துள்ளது. மேலே வந்துள்ள கவியோடு இது இணைத்து எண்ணத் தக்கது. பொருள் நிலையில் ஒரு முகமாய் மருவியிருப்பினும் கவிகளுடைய கற்பனைக் காட்சிகளையும் உணர்ச்சிகளையும் உள்ளப் பண்புகளையும் அனுபவங்களையும் தனித்தனியே வெளிப்படுத்தியிருக்கின்றன.

வழியில் கிடந்த கற்களில் பொன் உருளைகள் தோய்ந்தன; அந்த இருண்ட கற்களும் உயர்ந்த பொன்னாய் ஒளி வீசலாயின. தெளிந்த மேலோர் இழிந்த கீழோரைச் சேர்ந்தால் அவரையும் உயர்ந்தவராக்கி அருளுவர் என்னும் உண்மையை அது உணர்த்தி நின்றது எனக் கம்பர் இங்ஙனம் இன்பம் ததும்ப இசைந்திருக்கிறார். இரண்டு கவிகளும் இரண்டு உண்மைகளை இரண்டு நோக்கில் இனிது வெளியிட்டுள்ளனர்.

உலக அனுபவங்கள் கலையறிவோடு கலந்து வெளி வரும் பொழுது தலைமையின்பம் சுரந்து வருகின்றன. மனித வாழ்வின் நிலைமைகள் இனிய சார்புகளால் இசைந்து திகழ்கின்றன. எவ்வழியும் மாய மயக்கங்கள் தொடர்ந்து வருதலால் வைய மையல்கள் வெய்யனவாய் விரிந்து நிற்கின்றன.

அவரது அறிவு தெளிவு அனுபவங்களைக் கருதி யுணர ஞானம் தெளிந்த முனிவோர் என்றது. பொருளில் உள்ளம் நெளிந்த பொழுது தெளிந்த அறிவு ஒளிந்து போகிறது. நெளிதல் - குழைதல், சலித்தல். தெளிந்த உள்ளத்தையும் நெளிந்துபடச் செய்தலால் பொருளின் உயர்ந்த வன்மை உணர்ந்து கொள்ள வந்தது.

வெறும்பொருளை விட்ட பொழுதுதான் பரம்பொருள்
உறும்பொருள் ஆகி உறவாம்.

என உறுதி பூண்டு உலகைத் துறந்து போன துறவிகளும் இடையே பெரும் பொருளைக் கண்டால் பரம் பொருளை மறந்து விட்டுப் பெரிய மடாதிபதிகளாய் மருவி விடுகின்றனர்.

பொருள் இவ்வாறு அதிசய மகிமை வாய்ந்திருத்தலால் அது சாமி, ஈசன் எனப் பேச நேர்ந்தது.

ஈசனுனக்(கு) ஒப்பென்பார் ஈசனைஉண் டாக்கியவன்
பூசனைநீ செய்விப்பாய் புண்ணியா! - பேசுங்கால்
மூவர் கடவுளர்கள் மூவரிலொன் றானதனித்
தேவன் மகிமைதனைச் சென்றேத்தற் - காவதுபோல்
சின்மயமாம் உன்னுடனே செம்புவெள்ளி சேர்ந்தாலும்
உன்மயமே எங்கும் உயர்ச்சிகாண் - பொன்மகளை
மார்புதனில் மாயோன் வரிசையா வைத்ததுநின்
பேர்மகிமை கண்டாய் பெரியோனே - பாருலகில்
ஆன்ற பலகோடி ஆத்மவர்க்கம் அத்தனையும்
ஈன்ற பிரமனும்நீ ஈன்றமகன் - தோன்றுமொரு
நற்பொருளுண் டாங்கவன்றன் நாமம் இரணிய
கெற்பனென்று சொல்வதுநான் கேட்டிலனோ - கற்பனையால்
ஆங்கவன் உண்டாக்கும் அகிலாண்ட கோடியெல்லாம்
தாங்குமக மேருவுநீ தானன்றோ - தீங்கின்றி
எண்ணான் கறம்வளர்த்(து) இரட்சிக்கும் காந்திமதிப்
பெண்ணா ரமுது பிறந்ததலம் - அண்ணலே
முந்தி மபமான முழுச்சிமய வெற்பென்பார்
அந்தமலை உன்றன்மயம் அல்லவோ - எங்தையார் .
முந்தப் பதஞ்சலிக்கு முன்னின்று கூத்தாடும்
அந்தக் கனகசபை யார் வடிவம்? - நிந்தையிலா
உன்மரபு சொல்ல ஒருகோடி நாள்செல்லும்
என்மனதில் வந்ததி யம்புவேன். - பணவிடுதூது


பொருளின் பெருமைகளைக் குறித்து வந்துள்ள இப்பகுதியைப் படித்து நோக்கிப் பொருள்களைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும்.

அரிய பல காரியங்களைச் செய்து அருளுதலால் அதன் செயலும், இயலும் தெரிய ’பொருள் செய்பொருள்’ எனப்பட்டது. எல்லா நலங்களையும் இனிது உதவ வல்ல செல்வத்தை அன்புரிமையோடு தழுவி இன்பமடைந்து அறமும் செய்து இசைபட வாழுங்கள் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jan-20, 3:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே