கடல்ஞாலம் செல்வனிடஞ் செய்யுமே சீர் – செல்வம், தருமதீபிகை 568

நேரிசை வெண்பா

அறிவு சிறிதில்லான் ஆண்மையறம் இல்லான்
செறிவுயர்வு யாதுமே சேரான் – உறுதிதரு
கல்வியொன்றும் இல்லான்; எனினும் கடல்ஞாலம்
செல்வனிடஞ் செய்யுமே சீர். 568

- செல்வம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இயற்கை அறிவு சிறிதும் இல்லாதவன், ஆண்மகன் என்று சொல்வதற்குத் தக்க அறமும் நேர்மையும் இல்லாதவன், செழுமையான உயர்ந்த கொள்கை எதுவுமே இல்லாதவன், வாழ்க்கையில் உயர்வினை நல்கும் கல்வி சிறிதளவும் இல்லாதவன் ஆனாலும் செல்வம் உள்ளவனை எல்லா வகையிலும் கடல் போன்ற உலகில் உள்ள மக்கள் யாவரும் போற்றிச் சிறப்புச் செய்வர்.

மனிதனுடைய உயர் நிலைக்குக் காரணங்கள் பல உள்ளன. அவற்றுள் எல்லாம் மிகவும் தலை சிறந்தது அறிவு. அறிவுடையவனது பெருமையும், அஃது இல்லாதவனுடைய சிறுமையும் கீழேயுள்ள திருக்குறளில் சொல்லப்படுகிறது.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர். 430 அறிவுடைமை

அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர். கையில் உள்ள பொருளைத் தூர ஒதுக்கி வைத்து விட்டு ஆளைத் தனியே நிறுத்துப் பார்த்தால் கடுகளவு சிறப்பும் இல்லாதவனும் செல்வத்தால் சிறப்பு மிகுந்து நிற்கிறான்.

பெரிய அறிவாளிகளும், அரிய ஆண்மையாளர்களும் வறிய நிலையை மருவிய பொழுது சிறுமை அடைகின்றனர். செல்வமுடையவர் குணநலன்களில் இழிந்தவர் என்று தெரிந்திருந்தாலும், அவரை பணமுடைமையால் எவரும் புகழ்ந்து போற்றுகின்றனர். யாரும் அவரிடம் விழைந்து செல்லுகின்றனர்.

'அறிவிலாப் பித்தர் உன்றன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர் பேய்க் கத்தர் நன்றி அறியாத
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக்கிப் புகழ்ந்து
அவரை வாழ்த்தித் திரிந்து பொருள்தேடி.' – திருப்புகழ்

மகா மேதையான அருணகிரிநாதர் பொருளை நாடிப் போய் அலைந்திருக்கும் உருப்படிகளை இதில் உணர்த்தியிருக்கிறார்.

எவ்வளவு இழிந்த நிலையினராயினும் பொருளிருந்தால் அவர் உயர்ந்தவராக உலவுகின்றார். பணம் எவ்வழியும் யாரையும் மணம் பெறச் செய்கிறது.

பணம் பந்தியிலே; குலம் குப்பையிலே என்பது பழமொழி. ஒரு செல்வன் வீட்டுக் கலியாணத்தில் விளைந்து வந்த முதுமொழி இது. ஒத்த குலத்தில் பிறந்தவன் ஆயினும் பணம் இல்லையாயின் அவனை ஒதுக்கி விடுகின்றனர், பணம் இருந்தால் அவன் எவனாயினும் உவந்து அழைத்துப் போய், உயர்ந்த விருந்துகள் மற்றும் விருதுகள் தந்து உபசரித்தலைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

பொன்னொடு மணியுண் டானால்
..புலைஞனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு
..சாதியில் மணமும் செய்வார்!
மன்னராய் இருந்த பேர்கள்
..வகைகெட்டுப் போவார் ஆகில்
பின்னையும் யாரோ என்று
பேசுவார் ஏசு வாரே! 25

- விவேக சிந்தாமணி

இன்னவாறு பொன்னின் பெருமைகள் மன்னியுள்ளன.

‘Wealth maketh many friends;
but the poor is separated from his neighbour’ – Bible

’செல்வம் நண்பர் பலரைச் சேர்க்கும்; வறியவனை உறவினரும் வெறுத்து விலகி விடுவர்’ எனச் சாலமன் என்பவர் கூறியிருக்கிறார்.

பொருள் இல்லையானால் அந்த மனிதன் இந்த உலகில் எந்த வகையிலும் சிறுமைகளையே அடைகிறான்.

இல்லான் இருமையும் இல்லான் என்றதனால் எல்லாவழிகளிலும் அல்லலுடையனாய் அவன் அலமரலுறுவதை அறிந்து கொள்ளலாம்.

பணம் இல்லாதவன் பிணம் என்ற பழமொழி பொருளின் மாட்சியைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. உயிர் இருந்தாலும் பொருள் இல்லையானால் அவன் ஒரு மருளனாய் மருண்டு திரிகிறான்.

உடற்குயிர்போல் செல்வம் உ யிர்க்குயிராம் இன்றேல்
நடைப்பிணமே யாவர் நவை.

இந்த உவமை நிலையை ஊன்றியுணர்ந்து பொருள் நலங்களை ஓர்ந்து கொள்ள வேண்டும். எவ்வளவு குண நலங்கள் நிறைந்திருந்தாலும் பொருள் இல்லையானால் அவனை உலகம் மதியாது ஒழிகிறது. அது இருந்தால் உவந்து போற்றுகிறது.

நேரிசை வெண்பா

இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினுமொன் றில்லானேல்
வன்சொல்லி னல்லது வாய்திறவா - என்சொலினும்
கைத்துடையான் காற்கீழ் ஒதுக்குங் கடன்ஞாலம்
பித்துடைய வல்ல பிற. 11 - நீதிநெறி விளக்கம்

இனிய சொற்களையுடையவனும், அடங்கிய ஒழுக்கமுடையவனும் ஆனாலும் அவன் சிறிதும் பொருள் இல்லாத வறியவனானால் கடலாற் சூழப்பட்ட உலகம் கடுஞ்சொற் கொண்டு பேசுதலல்லாது இன்சொற்கொண்டு வாய் திறந்து பேசாவாம்; யாதுதான் சொன்னாலும் பொருட் செல்வமுடையவன் காலின் கீழே அடங்கும். ஆதலால் இவ்வுலகம் மடமையான பைத்திய உலகமன்றி வேறல்ல என்று குமரகுருபரர் இகழ்ந்திருக்கிறார்.

பொறி புலன்களில் வெறி மண்டியுள்ளமையால் பொருளில் மனித இனம் மருள் மண்டியுள்ளது. தெருளுடையார்க்கு இது மருளாயிருந்தாலும் பொருளுடைமையிலேயே எல்லாம் நடந்து வருகிறது. யாவும் சிறந்து திகழ்கிறது.

இவ்வுலகம் பொருளையே தலைமையாக மதித்துள்ளதை உணர்ந்து பொருளை இளமையிலேயே நல்ல வழியில் ஈட்டிக் கொள் என்று அறிவுறுத்துகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jan-20, 6:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 114

சிறந்த கட்டுரைகள்

மேலே