அன்னையின் பாச உணர்வும் பாச உணவும்

தாய்மையின் மேன்மை !

அன்னையின் பாச உணர்வும் பாச உணவும்.

அதிகாலையில் சமையலறையில் அம்மாவும் தங்கையும் வேலை செய்கிறார்கள்.

"கலா! இங்க வா! சட்டுனு எல்லாருக்குமாக் காப்பி போடு தங்கம்!"

"கலா; அண்ணனோட காப்பியக் கொஞ்ச நேரம் ஓரமா வையி; கொஞ்சம் ஆரட்டும்"
"அவன் சுட்டாத் தொடக்கூட மாட்டான்!"

"அப்பாவுக்கு இப்பவே சுடசுடக் குடு"
"அவரு ஆருனா ரகளை பண்ணுவார்; தொட மாட்டார்!"

இதுதான் அம்மா!

அந்தக் காப்பியில் கொஞ்சம் காப்பிப் பொடி ("டீ! மறக்காதே! அப்பாவுக்குக் கம்மியாப் பொடிப் போடு!");

கொஞ்சம் சர்க்கரை (“அண்ணனுக்கு ரண்டு கரண்டி அதிகமாப் போடு;
அவனுக்குப் பத்தாது”);

கொஞ்சம் பால் (“அப்பாவுக்குக் கொஞ்சம் கூட ஊத்து;
அவருக்கு வெள்ள வெளேர்னு இருக்கணும் காப்பி”);

கொஞ்சம் தண்ணீர்;
அப்புறம் அவரவர்க்கேற்ற சூடு;
இவைகளுடன்
நிறையவே அம்மாவின் அன்பும் இருக்கும்!!

அதனால்தான்,
அதில் அவ்வளவு ருசி!
அம்மாவின் தெர்மா மீட்டர் அவளுடைய சுட்டு விரல்தான்!
மிகச் சரியாக "ஆயுளுக்கும்" அவரவர் தேவைக்கேற்ப எந்நாளும் மாறாது இருக்கும்!!
அதுதான் அம்மா!!

இந்தக் காப்பிக்கு முன்னால் "கும்பகோணம் டிக்ரி காப்பியாவது மண்ணாங்கட்டியாவது!"

குடும்பத்தின் உறுப்பினர்களுடைய தனிப்பட்ட குணம் அறிந்து செய்யும் சமையல்!

கூடவே பழக்குவது தெரியாத வண்ணம் மகளுக்கும் சமையல் பயிற்சி!!
அதுதான் அம்மா!!

----------------- செல்வப் ப்ரியா - சந்திர மௌலீஸ்வரன் மகி,
12 ஜனவரி 2020-ஞாயிற்றுக் கிழமை.

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (12-Jan-20, 12:55 pm)
பார்வை : 163

மேலே