பெரிய பெரியரான் எய்தப் படும் – நான்மணிக்கடிகை 34

இன்னிசை வெண்பா

இரும்பின் இரும்பிடை போழ்ப - பெருஞ்சிறப்பின்
நீருண்டார் நீரான்வாய் பூசுப - தேரின்
அரிய அரியவற்றாற் கொள்ப - பெரிய
பெரியரான் எய்தப் படும். 34

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

இரும்பினாற் செய்யப்பட்ட கருவிகளாலேயே இரும்பை குறுக்கே வெட்டுவர்;

மிக்க சிறப்புடைய பாயசம் முதலிய நீருணவுகளை யுண்டவர்களும் நீர்கொண்டே வாய் கழுவுவர்;

ஆராய்ந்தால் அரிய செயல்கள் அருமையான முயற்சிகளால் முடித்துக் கொள்வர்;

பெரிய பேறுகள் கல்வி கேள்விகளையுடைய தவப் பெரியோரால் அடையப்படும்.

கருத்து:

இரும்புக் கருவிகளால் இரும்பை வெட்டுவர்; சிறந்த நீருணவுகளை யுண்டார் நீரினால் வாய் கழுவுவார்; அரிய செயல்களை அரிய முயற்சிகளாற் கொள்வர்; பெரிய பேறுகளைப் பெரியோர் எய்துவர்.

விளக்கவுரை:

நீரென்றது, நீருடன் கூடிய சிறந்த உணவை யுணர்த்துகின்றமையின், ‘பெருஞ்சிறப்பின்' என்று அடைமொழி புணர்த்தார். அவ்வுணவு மிகுதி பற்றி நீரெனவே கூறப்பட்டது.

பெருஞ்சிறப்பின் நீர் என்பது பாற்சோறுமாம்.

‘வாய் பூசுப'; இன்னோரன்னவற்றை ‘இடக்கரடக்க' ரென்ப.

அரிய அரியவற்றான் எய்தப்படும் உண்மையை நிகழ்ச்சியிற் கண்டு தெளிக.

பெரிய பேறுகள் பெரியோருதவியினால் அடையப்படும் என்றும் உரைத்துக் கொள்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jan-20, 9:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 81

மேலே