புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை

கேரள சாகித்ய பிரவர்த்தக சஹஹரண சங்கம் [எஸ்.பி.சி.எஸ்] கேரள பண்பாட்டில் நிகழ்ந்த ஒரு அற்புதம். ஒருகட்டத்தில் ஆசியாவிலேயே பெரிய பதிப்பகம் அதுதான். எழுபதுகளில் நாள் ஒன்றுக்கு ஒரு நூல் என அது வெளியிட்டது. கேரளம் முழுக்க அது விற்பனை மையங்களை நிறுவியது. வாசிப்பை பேரியக்கமாக ஆக்கியது. எழுத்தாளர்களை வருமானவரி கட்டுபவர்களாக ஆக்கியது. இந்தியாவில் அதற்கிணையான ஓர் இயக்கம் வேறில்லை.

1945 மார்ச் 15 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது இது. பின்னர் நேஷனல் புக் ஸ்டால் இதனுடன் இணைக்கப்பட்டது. பிரபல விமர்சகர் எம்.பி.பால், சிறுகதையாசிரியர் காரூர் நீலகண்டபிள்ளை ஆகியோர் இதன் நிறுவனர்கள். இதன் முதன்மைச்செயலாளர் டி.சி.கிழக்கேமுறி. 1945ல் ’தகழியின் கதைகள்’ என்னும் நூல் முதலில் வெளிவந்தது.ஒரு காலத்தில் வாசகனாகிய எனக்கு எஸ்பிசிஎஸின் அன்னப்பறவை முத்திரையே உள்ளக்கிளர்ச்சியை உருவாக்குவதாக இருந்திருக்கிறது. அந்த முத்திரையே நூலின் தரத்திற்கான சான்றொப்பமாக திகழ்ந்திருக்கிறது.

மிகவெற்றிகரமாக நடந்த இந்த அமைப்பின்மேல் இடதுசாரிகள் விலக்கம் கொண்டனர். அவர்களுக்கு எஸ்பிசிஎஸ் மேல் பலவகையான குற்றச்சாட்டுக்கள் இருந்தன. குறிப்பாக அவர்களுடைய இடதுசாரிப் பிரச்சார நூல்களை அவர்கள் தாமதப்படுத்துகிறார்கள் என்ற எண்ணம்.ஆகவே அவர்கள் பிரபாத் புக்ஹவுஸ் என்னும் இன்னொரு நிறுவனத்தை தொடங்கினர். ஆனால் அது வெற்றிகரமாக நடைபெறவில்லை.

எஸ்.பி.சி.எஸ் ஒரு கூட்டுறவு அமைப்பு. அதை கைப்பற்ற இடதுசாரிகள் முற்பட்டனர். ஒரு நூல் வெளியிட்ட எவரும் எழுத்தாளராக எஸ்பிசிஎஸில் உறுப்பினராகலாம் என்பது அதன் நெறி. அதை பயன்படுத்திக்கொண்டனர். ஒரே வாரத்தில் பலநூறு நூல்கள் வெளியிடப்பட்டன. பல ‘எழுத்தாளர்கள்’ உருவாகி எஸ்பிசிஎஸில் உறுப்பினர் ஆயினர். நிர்வாகத்தைக் கைப்பற்றினர்.

எஸ்பிசிஎஸின் நிறுவனத் தலைவரும் அதை மாபெரும் இயக்கமாக வளர்த்தெடுத்தவருமான காரூர் அவமதிக்கப்பட்டார். அவர் விலகி உயிர்துறந்தார். அதன் மிகத்திறமை வாய்ந்த செயலரான டி.சி.கிழக்கே முறி வெளியேற்றப்பட்டார். ஒரு பதிப்பகம் மிகச்சிறந்த வாசகர்களால் மட்டுமே நடத்தப்பட முடியும். காரூரும் டிஸியும் வெளியேறியதுமே எஸ்பிசிஎஸ் அழியத்தொடங்கியது.

டி.ஸி.கிழக்கேமுறி வெளியேறி டி.ஸி.புக்ஸ் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். மிகவிரைவிலேயே அது வளர்ந்து இன்று ஆசியாவிலேயே பெரிய வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. எஸ்பிசிஎஸ் இடதுசாரி அரசியலுக்கான கருவியாக ஆகியது. இடதுசாரி நூல்கள் முதன்மையாக வெளியிடப்பட்டன. அன்றைய இலக்கியநட்சத்திரங்களான தகழி, பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றவர்களின் நூல்கள் வரிசையில் நிறுத்தப்பட்டன. அவர்கள் வெளியேறி டி.ஸி புக்ஸை நோக்கிச் சென்றனர். எஸ்பிசிஎஸ் அழிந்தது.

இன்று எஸ்பிசிஎஸ் ஒரு பெயரளவு பதிப்பகம். அதற்கு நகரங்கள் அனைத்திலும் கடைகள் உள்ளன. அவை ஒப்புக்கு நடத்தப்படுகின்றன. அது நூல்கள் வெளியிடுவது மிகக்குறைவு. அதன் ஊழியர்களின் ஊதியத்தின் பொருட்டு பாடநூல் விற்கும் அமைப்பாக நடத்தப்படுகிறது. எழுத்தாளர்களுக்கு அதனால் எந்த நன்மையும் இல்லை.

ஆச்சரியமென்ன என்றால் எஸ்பிசிஎஸ் அழிந்ததும் கேரள எழுத்தாளர்களின் வருவாயும் அழிந்தது. முன்பு தகழி, கேசவதேவ்,பஷீர், எம்.டி வாசுதேவன் நாயர் போன்றவர்களின் நூல்கள் பெருமளவில் விற்கும். அவர்கள் அடையும் உரிமைத்தொகை போக எஸ்பிசிஎஸ் பெறும் லாபம் பிற எழுத்தாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அத்தனை எழுத்தாளர்களுக்கும் உரிமைத்தொகை மாதச்சம்பளம் போல வழங்கப்பட்டது. சராசரியாக ஓர் எழுத்தாளர் அரசூழியருக்கு நிகராக வருவாய் பெற்றார். எழுத்தாளர்கள் எழுத்தை நம்பியே வாழ்ந்த காலம் அது.

பதிப்புத்தொழில் டி.ஸி புக்ஸ் போன்ற தனியார் அமைப்புக்களுக்குச் சென்றபோது அந்நிலை மறைந்தது. நட்சத்திர எழுத்தாளர்கள் மட்டும் தொடக்கத்தில் நல்ல பதிப்புரிமைத் தொகை பெற்றனர். ஆனால் மெல்ல மெல்ல அதுவும் குறைந்தது. எஸ்பிசிஎஸ் எழுத்தாளர்களுக்கு நூலின் விலையில் 20 விழுக்காடு பதிப்புரிமைத்தொகை அளித்த நிறுவனம். இன்று டிஸி புக்ஸ் போன்ற பெருநிறுவனங்கள் அளிக்கும் உரிமைத்தொகை 5 விழுக்காடுதான்.இன்று கேரளத்தில் எந்த எழுத்தாளரும் எழுத்தை நம்பி வாழமுடியாது.

கேரள எழுத்தாளர்களின் வாழ்க்கையில் இருள்விழச் செய்தது இடதுசாரி அரசியல். கேரளப் பண்பாட்டின் பெரும் இயக்கம் ஒன்றை அழித்தது. தனியாருக்கு வாசல் திறந்திட்டது. ஆனால் அதை அவர்கள் இன்றும் சரியென்றே சொல்கிறார்கள். ‘எல்லா களமும் அரசியல்களமே’ என்ற கோஷம் அவர்களிடமிருந்து எழுகிறது. உயரிய அரசியல் நோக்கத்துடன், அறச்சார்பான எதிர்ப்பின்பொருட்டு அதைச் செய்ததாக அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.

அரசியல்வாதிகளின் இயல்பு அது. அவர்களுக்கு கட்சிஅரசியலில் உடனடி எதிரிக்கு எதிரான ஆயுதமே எதுவும். அதிகாரம் நோக்கிய பயணத்தில் எதுவும் படிக்கட்டுதான்.அது இங்கு நிகழக்கூடாது. நம் இன்றைய அரசியல்சார்பால் நாம் அரைநூற்றாண்டாக உருவாகிவந்த ஓர் அமைப்பை அழியவிடலாகாது.

புத்தகக் கண்காட்சியில் முழுநேரப் பதிப்பகங்களுக்கு மட்டுமே அங்கே இடமளிக்கப்படவேண்டும்.

எழுதியவர் : ஜெ மின்னஞ்சலில் தொகுப்பு (17-Jan-20, 1:40 pm)
பார்வை : 101

மேலே