புத்தகக் காட்சியில் மீண்டும் சர்ச்சை பழகருப்பையா மகனின் பேச்சை நிறுத்தச் சொல்லி நிர்பந்தித்த ஏற்பாட்டாளர்கள் வாசகர்கள் வாக்குவாதம்

அரங்கைக் காலி செய்யச்சொல்லி, பத்திரிகையாளர் மீது புகார் அளித்து, கைது நடவடிக்கைகுக் காரணமாக இருந்த பபாசி நேற்றும் சர்ச்சையில் சிக்கியது. பழ.கருப்பையா மகன் மேடையில் பேசுவதை நிறுத்தச் சொல்லி நிர்பந்தித்ததால், அவர் மேடையை விட்டு இறங்கிச் சென்றார்.

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் புத்தக அரங்கு ஒன்று அகற்றப்பட்ட பிரச்சினையும் அதையொட்டி பத்திரிகையாளர் அன்பழகன் மீது புகார் தெரிவிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டதும் பிரச்சினை ஆனது. இந்நிலையில் நேற்று புத்தகக் காட்சி அரங்கில் ஏற்பாட்டாளர்களால் மீண்டும் புதிய சர்ச்சை கிளம்பியது.

புத்தகக் காட்சி அரங்கையொட்டி எப்போதும் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் பேச அழைக்கப்படுவார்கள். அவர்கள் பேசும் கருத்தை வாசகர்கள் ஆர்வத்துடன் கேட்டுச் செல்வர்.

பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்குப் பிறகு சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளரும், எம்.பி.யுமான சு.வெங்கடேசன் இதே மேடையில் கருத்துச் சுதந்திரத்துக்கு நெருக்கடி உள்ளதாகல் கூறி , கீழடி குறித்த தனது பேச்சை பேச மறுத்து மேடையைப் புறக்கணித்தார்.

கவிஞர் சல்மாவும் கருத்துரிமை பறிக்கப்படுவதாக, மேடையை விட்டு இறங்கிச் சென்ற நிகழ்வு இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில் சிறந்த பேச்சாளரும், விமர்சகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பழ.கருப்பையாவின் மகன் சைவத் தமிழ் மெய்யியலாளர் கரு.ஆறுமுகத்தமிழன் நேற்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் பேச அழைக்கப்பட்டார்.

சிறந்த பேச்சாளரான அவரது கருத்தை வாசகர்கள் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவரது பேச்சின் இடையே புகுந்த ஏற்பாட்டாளர்களில் ஒருவர், ''பேச்சை முடித்துக்கொள்ளுங்கள்'' எனக் கூறினார். ஒரு கட்டத்தில் அவரது கையிலிருந்த மைக் வாங்கப்பட்டது. இது அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த வாசகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

''பேச்சை முடிக்கவேண்டுமானால் ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்து இதைக் குறிப்பால் உணர்த்தியிருக்கலாம். இப்படியா நடந்துகொள்வது?'' என வாசகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்த பேரா.ஆறுமுகத்தமிழன் அரஙகிலிருந்து உடனடியாக வெளியேறினார்.

இதனால் பபாசி அலுவலகத்தை முற்றுகையிட்ட சிலர், ''ஏன் இவ்வாறு செய்தீர்கள்?'' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பபாசி நிர்வாகிகளில் ஒருவர், அவர் பேச்சை நிறுத்தாவிட்டால் கல் எறிவதாக சிலர் மிரட்டியதால் தாங்கள் அவ்வாறு நடந்துக்கொண்டதாகத் தெரிவித்தார். அதையொட்டி மீண்டும் வாக்குவாதம் வளர்ந்தது. பின்னர் பபாசி நிர்வாகிகள் தலையிட்டு, வாசகர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

புத்தகக் காட்சியில் மாற்றுக் கருத்துகள், அரசை விமர்சிக்கும் கருத்துகள் பேசக்கூடாதா? என வாசகர்கள் கோபத்துடன் கேள்வி எழுப்பினர். அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கியதே அறிவு. ஒன்றைப் புறக்கணித்து, ஒன்றை ஒடுக்கி அறிவை வளர்க்க முடியாது. கருத்துச் சுதந்திரத்தின் காட்சிக்கூடம் புத்தக அரங்கு. அங்கும் இவ்வாறு நடப்பது வேதனையாக இருக்கிறது என்று வாசகர்கள் தெரிவித்தனர்.

எழுதியவர் : இந்து தமிழ் திசை (18-Jan-20, 5:41 am)
பார்வை : 49

மேலே