இலக்கியவாதிகளும் அமைப்புகளும்

பொதுவாக இலக்கியவிவாதங்களில் இத்தகைய கூற்றுக்களை அடிக்கடி கேட்கலாம். இதைச்சொல்பவர்கள் வருடத்திற்கு ஒரு கதை எழுதுபவர்களாக இருப்பார்கள். ஆகவே வருடத்திற்கு ஒரு கதை எழுதுபவனே நல்ல இலக்கியவாதி என்பார்கள். அவர்கள் சாயங்காலமானால் குடிப்பவர்களாக இருப்பார்கள். ஆகவே குடிகாரனே நல்ல கவிஞன் என்பார்கள். அவர்களால் நூறுபக்க நாவல் எழுதத்தான் முடியும்.ஆகவே நூறுபக்கத்துக்குமேல் நல்ல நாவலை எழுதமுடியாது என்பார்கள்

இவர்கள் இப்படிப் பேசும்போது சரி, அப்படியென்றால் உலக இலக்கியத்தில் வருடம் நூறு கதை எழுதிய எழுத்தாளர்கள் அனைவரையும் நிராகரிக்கிறாயா, குடிக்காதவர்களை எல்லாம் மறுக்கிறாயா, பெரியநாவல்களை எல்லாம் நிராகரிக்கிறாயா என்று மடக்கிக் கேட்டு அவ்வாறான இலக்கியமேதைகளின் ஒரு பட்டியலைக் கொடுக்கும் ஆற்றல் கொண்ட ஒருவர் அருகே இருந்தால் இவர்களால் பேசமுடியாது. ஆனால் நம்சூழலில் அது மிக அபூர்வம். ஆகவேதான் இத்தகைய குரல்கள் எழுகின்றன.

இலக்கியத்தில் இப்படி எந்த நிபந்தனைகளும் எப்போதும் செல்லுபடியாகாது என உணர கொஞ்சம் வாசித்தாலே போதும். அவ்வப்போது எழுதியமேதைகள் உண்டு. எழுதிக்குவித்தமேதைகளும் உண்டு. அரசியலற்ற மேதைகள் உண்டு, முழுக்கமுழுக்க அரசியலையே பேசிய இலக்கியமேதைகளும் உண்டு. அமைப்புகளை உருவாக்கி நடத்திய இலக்கியவாதிகள் உண்டு. அமைப்புகளுக்கு வெளியே நின்றவர்களும் உண்டு. எவரும் ஒருவரை விட ஒருவர் இக்காரணங்களால் மேல் அல்ல. அவர்களின் புனைவுலகு என்பது அவர்களின் ஆளுமையின் வெளிப்பாடு மட்டுமே.

மேலேசொன்ன கூற்று தமிழிலக்கியவரலாற்றை அறிந்தவர்களால் லேசான கிண்டல்புன்னகையுடன் கடந்துசெல்லத்தக்கது மட்டுமே. நவீனத் தமிழிலக்கிய முன்னோடியான பாரதி இலக்கியத்திற்கான பெரிய அமைப்புகளை உருவாக்கும் கனவை திரும்பத்திரும்ப எழுதினார். தன் நூல்களை கொண்டுசென்று மக்களிடம் சேர்க்கும் அமைப்பை உருவாக்க நிதிகோரி வேண்டுகோள் விடுத்தார். அவரது முயற்சிகள் பயனளிக்கவில்லை.

புதுமைப்பித்தன் வாழ்நாள் முழுக்க இலக்கிய அமைப்புகளை மட்டுமல்ல இலக்கியத்திற்கு அப்பால் சென்று அரசியல் -பண்பாட்டு அமைப்புகளையும் உருவாக்கும் கனவுகொண்டவராகவே இருந்தார். ரகுநாதனின் புதுமைப்பித்தன் வரலாற்றை வாசித்தாலே தெரியும்

அன்று சற்றும் சாதகமான சூழல் இல்லாமலிருந்தபோதும்கூட புதுமைப்பித்தன் தினமணியிலிருந்து வெளியேறி நண்பர்களுடன் இணைந்து தினசரி என்ற நாளிதழை [ஆம் இலக்கிய இதழைக்கூட அல்ல, நாளிதழை ]உருவாக்க முயன்றார். அதில் பெரும்பொருளை இழந்தார். அந்நாளிதழின் பகுதியாக அவர்கள் தொடங்கிய பிரசுரத்திலிருந்து வந்தவையே ஃபாஸிஸ்ட் ஜடாமுனி, ஸ்டாலினுக்குத்தெரியும் போன்ற நூல்கள். அது உலகப்போர்க்காலகட்டம். சிறிய அரசியல் நூல்கள் அதிகம் விற்றன அன்று. அந்நூல்கள் மூலம் தங்கள் அமைப்பு வலுவாக வேரூன்றும் என அவர் எண்ணினார்.

அந்த எண்ணங்கள் ஈடேறவில்லை. உண்மையில் அத்திட்டம் சிறந்ததுதான், அது மிகச்சிறந்த காலகட்டம். இந்தியாவின் முக்கியமான பல ஊடகங்கள் உருவாகி ஆழவேரூன்றியது அப்போதுதான்.ஆனால் அவர்களால் ஓர் அமைப்பை வெற்றிகரமாக நிர்வாகம்செய்ய முடியவில்லை. குறிப்பாக நிதி நினைத்தபடி கிடைக்கவில்லை.

ரகுநாதன், மீ.ப.சோமு, போன்றவர்கள் அப்போது புதுமைப்பித்தனின் ‘அல்லக்கைகள்’ என்று பிறரால் கேலிசெய்யப்பட்டனர் . அவர்களெல்லாருமே பின்னர் சாதனையாளர்களாக மாறினார்கள்.ஆனால் ரகுநாதனே பின்னர் புதுமைப்பித்தன் பர்வதவர்த்தினி சினி புரடக்‌ஷன்ஸ் என்னும் திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்தபோது உடன் கூடியவர்களை சில்லுண்டிகள் என தன் நூலில் கேலிசெய்கிறார்.

கையில் ஒரு பைசா இல்லாத நிலையில் சினிமாத்தயாரிப்பாளர் மூன்றாம் வகுப்பில் செல்லக்கூடாது என்பதற்காக புதுமைப்பித்தனுக்கு அவரது அணுக்கர்கள் அங்கே இங்கே கடன்வாங்கி முதல்வகுப்பில் திருவனந்தபுரத்திற்கு டிக்கெட் போட்ட வேடிக்கையை ரகுநாதன் விரிவாக எழுதுகிறார். தந்தைவழிச் சொத்தை அதில் முழுமையாகவே இழந்தார் புதுமைப்பித்தன். ஆனால் ஒரு கலைப்பட இயக்கத்தைத் தொடங்கிவைக்கும் கனவு அவருக்கிருந்தது. அது அழிந்தது

க.நா.சு ‘இலக்கியத்திற்கு ஓர் இயக்கம்’ என்னும் நூலுக்காகவே சாகித்ய அக்காதமி விருது பெற்றார். ஓர் அமைப்பை அல்ல ஊருக்கு ஊர் கிளைகள் கொண்ட ஒரு பெரிய அமைப்பை உருவாக்கவே அவர் கனவுகண்டார். அவர் உருவாக்கிய இலக்கியவட்டம் என்னும் அமைப்பின் நோக்கம் அதுவே. இலக்கியவட்டம் என்னும் இதழும் அதற்காகவே தொடங்கப்பட்டது. அதில் க.நா.சு தன் தந்தைவழிச் சொத்தை இழந்தார். கடைசிவரை அந்த கனவு அவருக்கிருந்தது.

சி.சு.செல்லப்பாவின் எழுத்து என்பது ஒரு சிற்றிதழ் மட்டும் அல்ல. அது ஓர் இயக்கம்.ஓர் அமைப்பு. அவர் இலக்கியக்கூட்டங்களை நடத்தினார்.பதிப்பகம் அமைத்தார். நண்பர்களைத் திரட்டி கருத்தரங்குகளைக்கூட ஒருங்கிணைத்தார். இலக்கியத்திற்கு வலுவான மாற்றுஅமைப்புகள் உருவாகவேண்டியதன் தேவைபற்றி செல்லப்பா மீண்டும் மீண்டும் பேசுவதை நாம் எழுத்தில் காண்கிறோம்

ஜெயகாந்தன் இடதுசாரித்தோழர்களுடன் இணைந்து உருவாக்கிய அமைப்புதான் ஒரளவாவது வெற்றியை ஈட்டியது. அவரது உன்னைப்போல் ஒருவன் தமிழின் முதல்கலைப்படம். அன்றைய ஊடகச்சூழல் அப்படத்தை மறைத்திருக்காவிட்டால் மலையாளம் போலவே இங்கும் ஒரு மாற்றுசினிமா இயக்கம் தொடங்கியிருக்கும். நிமாய் கோஷ், ஜித்தன் பானர்ஜி, எம்.பி.ஸ்ரீனிவாசன்,விஜயன் போன்ற பலர் அடங்கிய அவ்வமைப்பு ஐந்தாண்டுக்காலம் சிறப்பாகவே செயல்பட்டது

தமிழின் தனியர்கள், கலகக்காரர்கள் என்றெல்லாம் பின்னாளில் அறியப்பட்ட ஜி.நாகராஜனும் பிரமிளும்கூட அமைப்புகளை உருவாக்கிச் செயல்பட திட்டமிட்டு முயன்றவர்களே. ஜி.நாகராஜன் பித்தன்பட்டறை என்றபேரில் ஒரு மாற்றுப்பிரசுர இயக்கத்தைத் தொடங்கத் திட்டமிட்டு பலரிடம் நிதிவசூல் செய்தார். தன் கைப்பணத்தையும் செலவழித்தார். ஐரோப்பிய மார்க்ஸிய சிந்தனையாளர்கள் அன்று தமிழில் பெரிதும் அறிமுகமற்றவர்கள். அவர்களை தமிழில் அறிமுகம் செய்வதே அவரது எண்ணம்.

அந்த அமைப்புக்காக அவர் கார்ல்மார்க்ஸ் பற்றி ஒரு ஆங்கிலநூலையும் தமிழ் நூலையும் எழுதினார்.யூகோஸ்லாவாகிய மார்க்ஸியவாதியான மிலான் ஜிலாஸ் [ Milovan Đilas ] எழுதிய நூல் ஒன்றை மொழியாக்கம் செய்தார். மேலும் சில ஆங்கிலநூல்களையும் ஒருசிலபகுதிகள் எழுதினார். நினைத்தது எதுவும் கைகூடாமல் அம்முயற்சி மறைந்தது. அந்தக் கைப்பிரதிகள் நிதியளித்த நண்பர்களிடம் எஞ்சியிருந்தன. சுந்தர ராமசாமி அம்முயற்சிகளைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரமிள் Inner Image Workshop என்ற பேரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். அதற்கு பலரிடம் நிதியுதவிபெற்றார். ராஜமார்த்தாண்டனின் ஊரான சந்தையடியில் அது முதலில் தொடங்கப்பட்டது. ஓவியம், சிற்பம், இலக்கியம்,நவீனஆன்மிகம், சோதிடம் ஆகியவற்றை ஒன்றாக பயிலவும் முன்னிறுத்தவும் செயலாற்றும் ஓர் அமைப்பு அது என்பது அவரது திட்ட்டம். அதற்கான விரிவான திட்டங்களைப் போட்டு கடிதங்களை அனுப்பியிருக்கிறார்.

பிரமிள் பலமுறை இந்த அமைப்பை மீண்டும் தொடங்கியிருக்கிறார். பலரை உள்ளே இழுத்து நிறுவன அமைப்பை உருவாக்கியிருக்கிறார். அன்றைய சூழலில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. குறிப்பாக பணம் இல்லை. தொடர்புகளே மிகவும் குறைவு.

ஏன் இதை இவ்வெழுத்தாளர்கள் செய்தார்கள்? ஏனென்றால் இன்று வரலாறு தெரியாமல் சிலர் புரிந்துகொள்வதுபோல தன் சொந்தவாழ்க்கையை ஒட்டி சில எளிய அறிதல்களையோ உணர்ச்சிகளையோ எழுதி எங்காவது வெளியிட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் சோனி எழுத்தாளர்கள் அல்ல இவர்கள். இவ்வளவுபோதும் என்றோ நமக்கு இவ்வளவுதான் முடியும் என்றோ ஒதுங்கிக்கொண்டவர்கள் அல்ல.

அவர்கள் சிற்றிதழ்களை உருவாக்கியதும் அவற்றில் எழுதியதும் அவை போதும் என்பதற்காக அல்ல, அவையே அன்று உச்சகட்ட சாத்தியம் என்பதனால்தான். அவர்கள் அறியப்படாமலிருந்தது அவர்கள் ஒதுங்கி வாழ்ந்ததனால் அல்ல, அவர்கள் ஒதுக்கப்பட்டதனால்தான்.முற்றிலும் தனித்தவர் என்று அறியப்பட்ட நகுலன் கூட தொகைநூல்கள், கருத்தரங்குகள் என பலவகையிலும் தீவிரமாகச் செயல்பட்டவர்தான்.

இவர்கள் அனைவருமே தங்கள் சூழலை நோக்கிப் பேசியவர்கள், அதன்மேல் வலுவான செல்வாக்கை நிகழ்த்த, அதை மாற்றியமைக்க விழைந்தவர்கள். அவர்களின் படைப்புவேகம் என்பது அந்த விழைவிலிருந்து வந்ததுதான். ஆகவே முழுமூச்சாக தங்கள் படைப்புகளையும் எண்ணங்களையும் கொண்டுசென்று சேர்க்க முனைந்தனர். அதற்காகவே இணைமனங்களின் கூட்டுகளை, அமைப்புகளை உருவாக்க முற்பட்டனர். விமர்சனங்களை முன்வைத்தனர். விவாதங்களை எழுப்பினர்.தங்கள் தரப்பு ஒலிக்கச் சாத்தியமான அனைத்து ஊடகங்களையும் கைப்பற்றிச் செயல்பட்டனர்.

அன்றையசூழல் முற்றிலும் எதிர்மறையானது. எனவே அம்முயற்சிகளெல்லாம் பெரும்பாலும் தோல்விகளே. ஆயினும் அவர்கள் முடிந்தவரை இந்தப் பாறையில் தங்கள் தலையால் முட்டி உடைத்து நகர்த்தவே முயன்றனர். அவர்கள் உருவாக்கிய பாதிப்புகள் அந்த பெரும்முயற்சியால் விளைந்தவை. அன்றி, தன்னை தனிமனிதன் என நிறுத்திக்கொண்டு செயலின்மையை கொண்டாடியதனால் நிகழ்ந்தவை அல்ல. செயலின்மைக்கும் ஆற்றலின்மைக்கும் துணையாக அவர்களின் பெயர்களை இழுப்பது அவர்களுக்கிழைக்கப்படும் மிகப்பெரிய அவமதிப்பு.

இன்று நிலைமை மிகச்சிறிதே மாறியிருக்கிறது. அன்று இலக்கியமுன்னோடிகள் கண்ட கனவில் மிகச்சிறிய பகுதியை நடைமுறையாக்கும் வாய்ப்பு. அதற்குக் காரணம் இணையத்தொழில்நுட்பம் மூலம் உருவான தொடர்புகள். புத்தகக் கண்காட்சிகள் மற்றும் சில புதிய இதழ்கள் வழியாக உருவான சற்று மேம்பட்ட இலக்கியவாசிப்பு .

ஆயினும் தமிழ்ச்சூழலின் இன்றைய நிலையை வைத்துப்பார்த்தால் இன்று நிகழும் அமைப்புசார்ந்த முயற்சிகளுக்கும் க.நா.சுவின் இலக்கியவட்டத்திற்கும் பெரியவேறுபாடு ஏதும் இல்லை. இன்றும் இருட்டைநோக்கி அடிவயிற்றை எக்கி கூக்குரலிடுவதாகவே இது உள்ளது.

எழுதியவர் : ஜெ (20-Jan-20, 1:06 am)
பார்வை : 56

சிறந்த கட்டுரைகள்

மேலே