முதுமை ஓர் வரம்

கொடிது கொடிது முதுமை கொடிது
அதனிலும் கொடிது முதுமையில் வறுமை
………….. வறுமையில் தனிமை – ஆம்
வீட்டின் பெயரோ “அன்னை இல்லம”;
அன்னை இருப்பதோ “அநாதை இல்லம”;
முதுமை என்றால் ஏன் இத்துணை
பாராமுகம்…………………..

மழலைக்காய் உழைத்த கால்கள்
முதுமையில் தள்ளாடிட
அரவணைக்க ஆளின்றி
உறவினரிடையே மதிப்பின்றி
அலட்சியப் பார்வையும் - வரண்ட உள
பிரதிபிம்ப வாய் மொழிகளும்
நெருஞ்சி முள்ளாயினும் - என் மகன்(ள்)
என்றெண்ணிப் பொறுத்திருக்கையில்…..

உடல் தளர்வோடு உள்ளமும் தளர்ந்து
உழைத்த நாட்களை அசைபோட்டு
உதவிக்கரம் தேடி தவிக்கையில்
வார்த்தைகளால் வதைக்கிறார்கள்
உதிர்ந்து போன சருகுகளாக….

பணமும் பதவியுமுள்ள முதுமையில்
தங்குமிட சிரமமில்லையாயினும்
பேசிட யாருமின்றிய
பெருந்தனிமையுண்டு…
பணக்காரன் வீட்டிலும்
கல்நெஞ்சனிருந்தால்
முதியோர் ஏழைதான்…..

குறையுமா முதியோர் இல்லம்
நிறையுமா அவர் சொந்த இல்லம்
பிறவிப் பயன் என்பது
முதுமையே….. அது ஒரு
சாபமல்ல வரம்……..

அன்னையும் பிதாவும்
மழலையாய் மாறும் போது – மனசு
மற(று)க்கிறதென்றால் - நம்
வாழ்க்கைக்கு அர்த்தமில்லை – ஓ
இளையசமுதாயமே புரிந்துகொள்
இனிவரும் காலத்தில் நாமும்
முதியோர்தான்….

முதுமையின் குணநலன்களை
ஆரம்ப கல்வியில் புகுத்திட வேண்டும்
அனுபவத்தில் அன்பினால் பெற்ற அறிவு
கலியின் கொடுமையால் வற்றிடும்; போது
கல்வியறிவு கடுகளவேனும் முதுமையை
மதிக்க வழிகாட்டும்……

தாலாட்டி சீராட்டி வளர்த்து
அந்நிய தேசக் கனவுடன் - பணத்திற்காய்
படிக்கவைக்கும் இன்றைய பெற்றோரே
தயவு செய்து………
பணம் சம்பாதிக்கும் கனவுடன்
முதுமையைப் பேணும் எண்ணத்தையும்
விதையுங்கள் அவர் உள்ளங்களில்…

பணியிலிருக்கும் போதே ஓய்வுகால
சேமிப்பிட்டால் - பிற்கால
பிரச்சினையைத் தவிர்க்கலாம் - எனவே
இளமையில் முதுமைக்கு திட்டமிடும்
இன்றியமையாத் தன்மையை
இயம்பிட வேண்டும் இவ்வுலகிற்கு…..

இவர் முதுமை என்பது
குடும்பத்திற்கான உழைப்பென்பதை
ஒரு நிமிடம் சிந்தித்து
அறிவில் வல்லரசான நாம்
முதுமை பேணி – நல்
அன்பிலும் வல்லரசாவோம்.

எழுதியவர் : (22-Jan-20, 10:23 am)
சேர்த்தது : கிறிஸ்தியான்
Tanglish : muthumai or varam
பார்வை : 65

மேலே