காது கேளாத குழந்தைகளுக்கான மொழியை கண்டுபிடித்த சார்லஸ் மிச்செல் கதை – டூடுல் வெளியிட்டு சிறப்பிக்கும் கூகுள்

அரசருக்கு இனையான வசதிகளைப் படைத்த குடும்பத்தில் பிறந்து, தன் ஆயுள் முழுவதும் காது கேளாத ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கைக்காகப் பாடுபட்டவர் Charles-Michel de l’Épée. ஐரோப்பா நாகரீகத்தின் உச்சிக்கும், தொழில்புரட்சிக்கும் தயாராகிக்கொண்டிருந்த நேரம் பிரான்சின் வேர்சயில்ஸ் நகரத்தில் சார்லஸ் (1712) பிறந்தார். உலகத்திலிருக்கும் எல்லா நாடுகளையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் அளவிற்கு ஐரோப்பா தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருமாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஏழைகளுக்காக, அவர்களது வாழ்க்கைக்காக சிந்திக்கும் மக்கள் சிலரே ஐரோப்பாவில் அன்று இருந்தனர். அவற்றும் சார்லசும் ஒருவர்.

ஏழ்மையும், பசியும் உலகத்தின் எந்த நாட்டிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஐரோப்பாவும் இதற்கு விதிவிலக்கல்ல. பணத்தைக் குவிக்கும் நுகர்வு வெறி கொண்டிருந்த செல்வந்தர்களால் ஏழைகள் உருவாக்கப்பட்டார்கள். வறுமையில் தவிக்கும் மக்களின் கூக்குரல்கள் கேட்க முடியா உயரத்தில் அவர்களுடைய மாளிகைகள் இருந்தன. இவற்றையெல்லாம் தகர்த்தெறிய வந்தவர் சார்லஸ்.

ஒரு துளி மாற்றம்

ஆரம்பத்தில் மத போதகராக வேண்டும் என கனவுகண்ட சார்லஸ் பின்னர் சட்டப்படிப்பின் மீது ஆர்வம் கொண்டார். ஐரோப்பாவிலேயே வசதி படைத்த குடும்பம் சார்லசின் குடும்பம். ஆகவே கனவுகளை எளிதாகக் கைப்பற்றினார் அவர். எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது. பிரான்சின் சேரிகளின் வழியே அவர் சென்ற அந்த நாள் வரை.

அலுவலக வேலை நிமித்தமாக அவ்வழியே சென்றவர் தன் வாழ்நாளைத் தீர்மானிக்கப்போகும் நோக்கத்தைக் கண்டுகொண்டார். அவர் மனதினை மாற்றியதாக அவர் குறிப்பிட்ட விஷயம், காது கேளாத சகோதரிகள் இருவர் தங்களுக்குள் தங்களுடைய மொழியில் பேசியதைப் பார்த்தது தான். உலகம் ஒருமுறை நின்று சுற்றியது. கண நேரத்தில் முடிவெடுத்தார் சார்லஸ்.

உலகத்தின் முதல் பள்ளி

உலகத்தின் முதல் காது கேளாதோருக்கான பள்ளி பிரான்சில் கட்டப்பட்டது. பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்களது குழைந்தைகளை இந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. Signed Language எனப்படும் சைகைகளின் வழியே பிரெஞ்ச் மொழி மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது.

முதன்முதலில் காது கேளாதோர் பேசும் சைகை மொழியினைக் (Signed Language) கண்டுபிடித்தவரும் இவரே !!


கத்தோலிக்க மதத்தைப் பற்றியும் அடிப்படை உரிமைகள் பற்றியும் போதனைகள் நடந்தன. வெகுவிரைவிலேயே ஐரோப்பா முழுவதிலும் இருந்து ஏழை சிறப்புக் குழந்தைகள் இப்பள்ளியில் சேரத் துவங்கினர். மேலும் கற்பிக்கும் முறை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.


விருட்சம்

பிரான்சில் உலகம் முழுவதும் இருந்து வந்த தன்னார்வலர்கள் சேர்ந்து மாணவர்களுக்கு கற்பிக்கத் துவங்கினார்கள். அடுத்த சில ஆண்டுகளிலேயே வட அமெரிக்காவிலும், தென்னமெரிக்காவிலும் உள்ள காது கேளாத குழந்தைகளுக்கென சிறப்புப்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. சார்லசின் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளையின் கீழ் இன்றுவரை பல பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆலமரமாய் கிளை பரப்பி நிற்கும் இந்த விருட்சத்தின் முதல் விதையை விதைத்தது சார்லஸ் தான். மனிதநேயத்திற்கு மதம், நிறம், மொழி என எதுவும் கிடையாது என்பதை உணர்த்த வந்த சார்லசை அவருடைய பிறந்தநாளில் கொண்டாடுவோம்.

எழுதியவர் : மாதவன் (24-Jan-20, 2:10 pm)
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே