245 கைக்கூலி வாங்குவோர் காணார் நடுநிலை - கைக்கூலி 1

கலி விருத்தம் 1
(விளம் விளம் மா கூவிளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

வலியினால் இலஞ்சங்கொள் மாந்தர் பாற்சென்று
மெலியவர் வழக்கினை விளம்பல் வாடிய
எலிகள்மார்ச் சாலத்தி னிடத்தும் மாக்கள்வெம்
புலியிடத் தினுஞ்சரண் புகுத லொக்குமே. 1

- கைக்கூலி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”அரசியல், பதவி போன்ற அதிகாரத்தினால் லஞ்சம் பெறும் மனிதர்களிடம் எளியவர்கள் சென்று வழக்கைச் சொல்வது, பசியால் வாடிய எலிகள் பூனையிடமும், பிற விலங்குகள் புலியினிடமும் போய் அடைக்கலம் புகுவதற்கு ஒப்பாகும்” என லஞ்சமாகிய கைக்கூலி வாங்குபவர் நடுநிலை யோடு செயல்பட மாட்டார் என்பதை இப்பாடலாசிரியர் தெரிவிக்கிறார்.

வலி - அதிகாரம். இலஞ்சம் - கைக்கூலி. மார்ச்சாலம் - பூனை. மாக்கள் – விலங்குகள்

(திரு வேதநாயகம் பிள்ளை மாயூரத்திலும், தரங்கம்பாடியிலும் முன்சீப்பாகப் பணியாற்றியவர்)

இங்கே கவிவேந்தர் கா.வேழவேந்தன் அவர்களின் பாடல் ஒன்றைப் பதிவு செய்கிறேன். பாடல் திரு வேதநாயகம் பிள்ளையைப் பற்றியது.

எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

புதியதொரு நிதிவழக்கும் அவர்முன் னாலே
…புயல்போலே வந்ததன்று; வாதி சொன்னான்:
“இதுஉண்மை; ஐயா,என் பணத்தை வாங்கி,
…இல்லையென்றார்!” இதைக்கேட்ட பிரதி வாதி
”சதி,ஐயா நம்பாதீர்! அவர்ப ணத்தைச்
…சத்தியமாய் நான்கண்ட தில்லை!” என்றான்.
புதிராக இருவருமே கற்பூ ரத்தைப்
…போய்அணைத்துச் சத்தியமும் செய்தார் மன்றில்! 1

அன்றிரவு தீர்ப்பெழுத குழப்பத் தோடே
…அமர்ந்திருந்தார் வேதநா யகரும் வீட்டில்;
முன்றிலிலே ‘ஐயா!வென் றழைத்துக் கொண்டே
…முகம்காட்டி வாதிவந்தோர் உறையை நீட்டி,
“நன்றய்யா! இதைஏற்றே தங்கள் தீர்ப்பை
…நல்குங்கள் என்பக்கம்!” என்றான்; கேட்ட
குன்றிமணி யொத்தவருந் தூய்மை யாளர்
…குணக்கேடன் யாரென்றே முடிவு செய்தார்! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-20, 3:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

சிறந்த கட்டுரைகள்

மேலே