சிவபிரான் – உமா தேவி – ஒரு சூடான விவாதம்

சிவபெருமானுக்கும் உமா தேவிக்கும் இடையே நடந்த ஒரு சூடான விவாதத்தை அருகிலிருந்து கேட்டவர் போல் சொல்லி அருள்பவர் சிவப்பிரகாச சுவாமிகள்.

அவரது பாடல் இதோ:

அம்பிகையரன் றன்னை நோக்கி யுன்னா பரணமரவமென வுமையை நோக்கி

அரியரவ சயனத்தை யரவுருவமானத்தை யறியாய் சொல் சிறிதுமென்ன

நம்பிமனை தொறுமிரந் துணுமாண்டிநீ யென்னநான் றாதனறிவேனென

நவையுறும் பொய்புகன் றீ ரெனப்பாரத நடந்ததே கரியாமென

வெம்பியொருவன் பிரம்பாலடித்தானென விளங்கிழை யொருத்திதாம்பால்

வீசினது சொல்லென்ன வெண்ணாயிரம்பெண்கள் மிகுகற்பை நீக்கியெனப்

பம்புகற்பினிலோ ரிரட்டிப்பு நீக்கினது பதறாம னீகேளெனப்

பரமனருட் னிவ்வாறு விளையாடு பச்சைப் பசுங்கொடி யுமைக்காக்கவே!


பாடலின் பொருளைக் காண்போம்:

அம்பிகை – உமா தேவியானவள்

அரன் தனை நோக்கி – சிவபெருமானைப் பார்த்து

உன் ஆபரணம் அரவம் என – உனது ஆபரணமாக இருப்பது பாம்பு என்று சொல்ல

நம்பி – (அதற்கு) சிவ பெருமான்

உமையை நோக்கி – உமா தேவியைப் பார்த்து

அரி – திருமால்

அரவ சயனத்தை – சர்ப்ப சயனம் உடையதாகவும்

அரவுரும் ஆனத்தை – சர்ப்ப ரூபமாகவும் ஆனதை

சிறிதும் அறியாய் கொல் என்ன – சிறிதும் அறியாயோ என்று சொல்ல

மனைதொறும் இரந்து உண்ணும் ஆண்டி என்ன – நீ வீடுகள் தோறும் பிச்சை கேட்டு உண்ணுகின்ற ஆண்டி என்று சொல்ல

நான் தாதன் அறிவேன் என – தாதனை நான் அறிவேன் என்று சொல்ல

நவை உறும் பொய் புகன்றீர் என – குற்றம் மிகுந்த பொய்யைச் சொன்னீர்கள் என்று சொல்ல

பாரதம் நடந்ததே கரி ஆம் என – மஹாபாரதம் நடந்ததே சாட்சி என்று சொல்ல

வெம்பி ஒருவன் பிரம்பால் அடித்தான் என – கோபித்து ஒருவன் பிரம்பால் அடித்தான் என்று சொல்ல

விளங்கிழை ஒருத்தி – பெண் ஒருத்தி

தாம்பால் வீசினது சொல் என்ன – தாம்புக் கயிற்றால் அடித்ததைச் சொல் என்று சொல்ல

எண்ணாயிரம் பெண்கள் – எண்ணாயிரம் பெண்களுடைய

மிகு கற்பை நீக்கின என – மிகுந்த கற்பினை நீக்கினாய் என்று சொல்ல

பம்பு கற்பினில் – மிகுந்த கற்பினில்

ஓர் இரட்டிப்பு நீக்கினது – ஓர் இரட்டிப்புக்காக நீக்கினதை

பதறாமல் நீ கேள் என – பதற்றம் கொள்ளாமல் நீ கேட்பாயாக என்று சொல்ல

பரமருடன் – பரமசிவனோடு

இவ்வாறு – இந்தப் பிரகாரம்

விளையாடு – விளையாடுகின்ற

பச்சைப் பசுங்கொடி – உமாதேவி ஆனவள்

உமைக் காக்க – உம்மைக் காக்கக் கடவன்

பல திருவிளையாடல்களை உள்ளடக்கிய பாடல் இது. ஒவ்வொன்றையும் மாற்றி மாற்றி சிவனும் உமையும் பேசுவது போல அமைக்கப்பட்ட இந்தப் பாடலின் சுவையே தனி தான்.

திருமால் அரவம் ஆனது எப்படி? ஒரு சமயம் பார்வதியும் பரமசிவனும் சூதாடி விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் பார்வதி ஜெயித்தாள். ஆனால் பரமசிவனோ நான் தான் ஜெயித்தேன் என்று சொன்னார்.அருகிலிருந்த திருமாலைச் சாட்சிக்கு அழைத்தார்.

அவரும் சிவபிரானே ஜெயித்தான் என்று சொல்ல, கோபம் கொண்ட உமா தேவி திருமாலை நோக்கி, “நீ பொய் சாட் சொன்னதால் அரவமாகக் கடவாய்” என்று சாபமிட்டாள்.

இந்த வரலாறு கந்த புராணத்தில் உள்ளது. சிவபெருமான் பொய் கூறியதும் இதே சந்தர்ப்பத்தில் தான்.

பிரம்பால் அடி பட்டது பிட்டுக்கு மண் சுமந்த போது.

இப்படி ஒவ்வொரு விளையாடலையும் சுட்டிக் காட்டும் இந்தப் பாடல் மனமுருகி சிவன் மற்றும் உமையின் திருவிளையாடல்களை நினைக்க வைத்து அருள் வேண்டித் துதிக்கச் செய்கிறது!

எழுதியவர் : ஸ். நாகராஜன் (25-Jan-20, 6:48 pm)
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே