கந்தனைப் பாடாமல் கண்டவனைப் பாடுவேனோ

பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் சிறந்த தமிழ்ப் புலவர். வள்ளல் சீதக்காதி காலத்தவர். சிறந்த முருக பக்தர்.

கந்தனைப் பாடுவது அவருக்குப் பிடித்த ஒன்று. கந்தனைப் பாடாமல் கண்டவனைப் பாட முடியுமா என்பது அவர் தனக்குத் தானே கேட்டுக் கொண்ட கேள்வி.

இதை அப்படியே ஒரு பாடலாகப் பாடி விட்டார்.

பாட்டு இதோ:

கல்லடிக்கு முளியிரண்டு காதடிக்கு ளடிப்பதெனக் கவிதை கேட்டுப்

பல்லடிக்குக் கிடுகிடெனப் பறையடிக்கு நெஞ்சர்தமைப் பாடுவேனோ

வில்லடிக்கும் பிரம்படிக்குங் கல்லடிக்கும் விரும்பி நின்ற மெய்ய னீன்ற

செல்லடிக்குந் தடவரையிற் சேறடிக்க வலையடிக்குஞ் செந்தி லானே

பாடலின் பொருள் :

வில் அடிக்கும் – அர்ஜுனனது வில் அடிக்கும்

பிரம்பு அடிக்கும் – பாண்டியனது பிரம்பு அடிக்கும்

கல் அடிக்கும் – சாக்கிய நாயனாரது கல் அடிக்கும்

விரும்பி நின்ற – விரும்பி இருந்த

மெய்யன் – மெய்ப்பொருளான சிவபிரான்

ஈன்ற – பெற்ற

செல் அடிக்கும் தடவரை மேல் சேறடிக்கும் – மேகங்கள் தவழ்கின்ற பெரிய மலை மீது சேறு படும்படி

அலை அடிக்கும் – அலைகள் மோதுகின்ற

செந்திலானே – திருச்செந்தூரில் உறைந்திருக்கும் முருகப் பெருமானே

கல் அடிக்கும் உளி – கல்லை வெட்டுகின்ற உளியானது

இரண்டு காது அடிக்குள் அடிப்பது என – இரண்டு காதுகளின் அடியில் அடிப்பது போல

கவிதை கேட்டு – புலவர்களின் கவிதையைக் கேட்டு

பல் கிடுகிடு என அடிக்க – பற்கள் ஒன்றோடொன்று பட்டு கிடுகிடு என அடிக்க

பறையடிக்கும் நெஞ்சர் தமை – நடுங்குகின்ற மனத்தை உடையவரை

பாடுவேனோ – நான் பாடுவேனோ

திரண்ட பொருள் :

திருச்செந்திலானே! என் கவிகளைக் கேட்டு மகிழும் உன்னப் பாடாமல் அவற்றை காதடியில் உளி வைத்து அடித்தாற் போல வெறுப்பாய்க் கேட்கும் உலோபரைப் பாடுவேனோ? மாட்டேன்

பல புலவர்களும் இப்படி மனம் நொந்து கண்டவரைப் பாடாமல் கந்தனைப் பாட விழைந்ததுண்டு.

முருகனைப் பற்றிப் பல புலவர்களும் அருளாளர்களும் தமிழில் பாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. பொருள் பொதிந்த அவற்றைப் படித்தால் முருகனின் அருள் நிச்சயம் உண்டு என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

எழுதியவர் : ச.நாகராஜன் (25-Jan-20, 6:59 pm)
பார்வை : 25

மேலே