தமிழுக்காகத் தாலியைத் ஈந்த தமிழன்

கொங்கு நாட்டுத் தமிழர், தமிழ் வளர்ச்சிக்காக எத்தனையோ அரிய செயல்களைச் செய்துள்ளனர். அவற்றில் ஒரு உண்மையான சம்பவம் இது!

மதுரையை திருமலை நாயக்க மன்னன் (கி.பி 1623 முதல் 1699 முடிய) அரசாண்ட காலம் அது.

அவரது அரசில் தளவாயாக இருந்தவர் ராமசுப்பய்யர் என்பவர். கண்டிப்புக்குப் பெயர் பெற்றவர். மிகுந்த பலசாலி. புத்தி கூரமையுள்ளவர்.

அரசாங்கத்துக்கு வரியைச் செலுத்தத் தவறிய பாளையகாரர்களின் காணியாளர்களை அவர் சிறைப் பிடித்து சங்ககிரி துர்க்கக் கோட்டையில் அடைத்தார்.

ஆணூருக்குச் சென்ற தமிழ்ப் புலவர் ஒருவர் சம்பந்தச் சர்க்கரை மன்றாடியைப் பார்க்க விழைந்தார். ஆனால் அவர் சங்ககிரி துர்க்கத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பதைக் கேட்டு அங்கு சென்றார்.

வாயில் காவலரிடம் நயமாகப் பேசித் தான் புலவர் என்பதைத் தெரிவித்து சிறைக்குள் சென்றார். அங்கோ உயர்ந்த பதவியில் இருந்த பலரும் இருந்தனர்.

கவிபாடி வந்த புலவரைப் பார்த்த சம்பந்த சர்க்கரை மன்றாடியார் புன்முறுவலுடன் அவரை வரவேற்றார்.

“ஐயா, புலவரே! பாடல் பாடிப் பரிசு பெறுகின்ற இடமா, இது:” என்று கூறிச் சிரித்தார்.

உடனே புலவர்,

“எவரை என்று நாம் அறிவோம்; இரப்பவனோ இடம் அறியான்

இரவில் வானம்

கவரு மதி ஒருபுறத்தே நிலவெரிக்கும் பான்மைதனைக்

கண்டிலீரோ

அவரை பதமாகு முனம் கடுகு பொடியாகி விடும் அதனை ஓர்ந்து

துவரை முதற் கரதலனாஞ் சம்பந்தச் சர்க்கரையார் சொல்லுவீரே!”

என்று பாடினார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த சர்க்கரை மன்றாடியார் புலவரை இறுகத் தழுவினார்.

“இந்தச் சிறைக்கூடத்தில் என்னைச் சந்திக்க மிகவும் சிரமப்பட்டிருப்பீர்களே” என்று கூறிக் கண்ணீர் விடுத்தார்.

சிறைச்சாலையில் கவிஞருக்குப் பரிசாகக் கொடுக்கக் கையில் பணமில்லையே என்று வருந்தினார்.

பின்னர் கோட்டைக்கு வெளியே வந்து காவலாளி ஒருவனைத் தன மனைவியிடம் அனுப்பி புலவர் வந்திருக்கும் விவரத்தைச் சொல்லச் சொன்னார்.

விவரமறிந்த சிறந்த மதியூகியான அவரது மனைவி தம்மிடம் வேறு பொருளில்லாததை நினைத்துத் தன் திருமங்கலியத்தைக் கழட்டிக் கொடுத்தனுப்பினார்.

மனைவியார் அனுப்பிய தாலியைக் கண்ணீருட்ன கண்ணில் ஒற்றிக் கொண்ட சர்க்கரை மன்றாடியார் அதை மகிழ்ச்சியுடன் புலவரிட்ம் கொடுத்து, “என்னால் இப்போது கொடுக்க முடிவது இவ்வளவு தான். இதைப் பெரிய பரிசாக நினைத்துக் கொள்க” என்று உருக்கமாகக் கூறினார்.

அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட கவிஞர் அதை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு நேராக ராமசுப்பய்யரிடம் சென்று அதைக் காண்பித்தவாறே நடந்ததைக் கூறினார்.

அதைக் கேட்டு வியந்த ராமசுப்பையர் உடனே சர்க்கரை மன்றாடியாரைத் தம்மிடம் அழைத்து வருமாறு ஆணையிட்டார்.

அவரும் வந்தார்.

அவரைத் தழுவிக் கொண்ட ராமசுப்பய்யர், தமிழ் மீதுள்ள உமது தணியாக் காதலையும் உமது கொடைத் திறமையையும் கண்டு வியக்கிறேன். நல்ல சுபிட்ச காலம் வந்தவுடன் கொடுக்க வேண்டிய வரியைக் கொடுத்தால் போதும்; இப்போது நீங்கள் செல்லலாம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

உடனே சர்க்கரையார், “என்னைப் போலவே சிறையிலிருக்கும் மற்றவரை விட்டு விட்டு நான் மட்டும் எப்படி வெளியே போக முடியும்” என்று கூறினார்.

உடனே தள்வாய், “அனைவரையும் விடுவிக்கிறேன்” என்று கூறி அப்படியே அதற்கான ஆணையை இட்டார்.

அனைவரும் விடுதலையாகி மகிழ்ச்சியுடன் தம் இருப்பிடம் மீண்டனர்.

உடனே இன்னொரு பாடல் பிறந்தது.

“வாணன் உரைத்திட மால் ராமப்பையன் மனம் மகிழ்ந்து

வேணது கேள் எனச் சம்பந்தச் சர்க்கரை வேளினுமிவ்

வீணரைக் காவல் விடீரென்று கூறிட விட்டிடலுந்

தாணுவென்று இம்முடிக் காணிக்கை சாசனம் தந்தனரே”

தமிழுக்காக தாலியைப் பரிசாக அளித்த சம்பந்த சர்க்கரை மன்றாடியாரின் புகழும் அந்தச் செயலை உவந்து போற்றிய ராமப்பையரின் புகழும் கொங்கு நாடு முழுவதும் பரவலாயிற்று,

இந்த அரிய சம்பவத்தை கொங்கு மண்டல சதகத்தில் 46ஆம் பாடலாக அமைத்தார் சதகத்தைப் பாடிய பாவலர் ஜினேந்திரன் என்ற கவிஞர். தொட்ர்ந்து பாமழை பொழிந்ததனால் இவரை கார்மேகக் கவிஞர் என்றே உலகம் அறியும். இவர் ஜைன பிராமணரான பத்மநாப ஐயரின் புதல்வர். இவர் படிக்காசுத் தம்பிரான், தள்வாய் ராமப்பய்யர் காலமான 1699ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என்று கொள்ளலாம்.

கொங்கு மண்டலத்தின் சிறப்புக்குரிய சுவையான நூறு நிகழ்ச்சிகளை இவரது சதகம் அற்புதமாக விவரிக்கிறது.

அதில் தமிழுக்காகத் தாலி ஈந்த தமிழன் சர்க்கரை மன்றாடியாரின் கொடையும் ஒன்றாக அமைகிறது!

எழுதியவர் : by ச.நாகராஜன் (25-Jan-20, 7:13 pm)
பார்வை : 73

மேலே