248 கனலுறும் வெண்ணெய் போல் கைக்கூலி அழியும் – கைக்கூலி 4

கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)

கலி விருத்தம்

பயிரினை வேலிதான் மேய்ந்த பான்மைபோற்
செயிருற நீதியைச் சிதைத்தோர் தீயன்சாண்
வயிறினை வளர்த்திட வாங்கு மாநிதி
வெயிலுறு வெண்ணெய்போல் விளியும் உண்மையே. 4

- கைக்கூலி
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”வேலியே பயிரை அழிக்கும் தன்மை போல், செய்தற்கு உற்ற நீதியைச் சிதைத்து ஒரு தீய முறைமன்றத் தலைவன், தனது சாண்வயிறு வளர்ப்பதற்கு வாங்கக்கூடிய பெரும் கைக்கூலி வெயிலில் பட்ட வெண்ணெய் போலக் கெட்டு அழியும் என்பது உண்மையாகும்” என்று முறையற்றுப் பெற்ற பெரும் கைக்கூலியும் அழியும் என்று இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

மாநிதி - பெரும்பொருள். விளியும் - கெடும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jan-20, 6:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே