எந்தவகை ஆனாலும் பொன்னை அடைந்து கொள்க – செல்வம், தருமதீபிகை 569

நேரிசை வெண்பா

இந்த உலகுக் கினியபொருள் தெய்வமே!
அந்த உலகுக் கறமருளே! – எந்தவகை
ஆனாலும் பொன்னை அடைந்துகொள்க! ஆருயிர்க்கு
வானாலும் இல்லைகாண் வாழ்வு. 569

- செல்வம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மறு உலக வாழ்வுக்குத் தருமமும், அருளும் போல, இந்த உலக வாழ்வுக்கு இனிமை தருவதாகிய செல்வப் பொருளே தெய்வமாகும்; அதனால் எந்த வகையிலாவது முயற்சி செய்து உழைத்து பொன்னையும் பொருளையும் விரைந்து தேடிக் கொள். பொருள் இல்லையானால் உன் வாழ்நாளில் நல்ல வகையில் அமையக்கூடிய வாழ்வு இல்லை என்பதைத் தெரிந்து கொள் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இம்மை, மறுமை என இருவகை நிலைகளை மனிதன் கருதி வருகிறான். எடுத்து வந்துள்ள இந்த உடலோடு கூடி வாழும் வரையும் இவ்வுலக வாழ்க்கை ஆகிறது. உடல் நீங்கிய பின் உயிர் தனியே அடைய அரியது அவ்வுலக வாழ்வாகின்றது.

அருள் என்பது பிறவுயிர்களுக்கு இகம் புரியும் நீர்மையாதலால் அது புண்ணியமாய்ப் பெருகி வருகிறது. அதனால் சுவர்க்கம் முதலிய புண்ணிய உலகங்களில் கண்ணியமடைந்து எண்ணிய இன்ப நலங்களை இனிதே உயிர் எய்தி மகிழ்கின்றது.

அருளுடையவர் அவ்வுலகத்தில் உயர்ந்து இன்பங்கள் அடைவது போல, பொருளுடையவர் இவ்வுலகத்தில் இனிய சுகபோகங்களை அனுபவிக்கின்றனர்.

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்(கு)
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247 அருளுடைமை

அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லாதது போலவே, பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லை என வள்ளுவர் இருவகை நிலைகளையும் உணர்த்துகிறார். அருள், பொருள் என்ற இரண்டையும் வளர்த்து மனிதன் இங்கும் அங்கும் மகிமையடைய வேண்டும்..

சந்தக் கலி விருத்தம்
(காய் காய் காய் மா)

குலம்பெரிய குணமறிவு வடிவுகுடிப் பிறப்பு
பொலங்கையுடை யவர்க்கலது புகழ்ச்சியினி தடையா
இலங்குமனை யாளும்பொரு ளில்லவிடத்(து) இகழும்
அலங்கல்வரை மார்பபொரு ளாதலினி யழியேல். - மேருமந்தர புராணம்

அறிவு, அழகு, குலம் முதலிய நலங்கள் வாய்ந்திருந்தாலும், பொருள் இல்லையென்றால் அவை மழுங்கி மறைகின்றன என்பதை மேலேயுள்ள மேருமந்தர புராணப் பாடல் உணர்த்துகிறது. பொருள் இல்லையானால் எல்லா மேன்மைகளும் இழிவுறும் என இது உணர்த்தியுள்ளது. பொலம் - பொன்.

சுரசை என்பவள் அசுர வேந்தனுடைய அருமைத் திருமகள். பல கலைகளையும் சுக்கிரனிடம் பயின்று தெளிந்தவள்; சிறந்த அழகி. காசிபரை மணந்து சில குழந்தைகளைப் பெற்றாள். அப்புதல்வர் பருவம் அடைந்த பொழுது உலகில் அவர் உயர்ந்து வாழும்படியான உறுதி நலங்களைப் போதித்தாள். தன் மக்களுக்கு உரிமையுடன் அவள் கூறிய போதனைகள் அயலே வருகின்றன.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

பிறந்தநல் லுயிர்க்கெலாம் பெருமை நல்கிய
இறந்ததோர் பொருண்மைய(து) இரண்டின் வன்மையும்
அறிந்தவர் தெரிவரேல் அரிய கல்வியில்
சிறந்தது திருவெனச் செப்பல் ஆகுமால். 8
.
சொற்றரு கலைஎலாம் தொடர்ந்து பல்பகல்
கற்றவர் ஆயினும் கழிநி ரப்பினால்
அற்றவர் ஆவரே ஆக்கம் வேண்டியே
பற்றலர் தம்மையும் பணிந்து நிற்பரால். 9
.
அளப்பரும் கல்வியும் ஆக்கம் யாவையும்
கொளப்படும் தன்மையில் குறைஉ றாதவை
வளர்த்தலின் மேதக வனப்புச் செய்தலில்
கிளத்திடின் மேலது கேடில் செல்வமே. 10
.
நூலுறு கல்வியை நுனித்து நாடியே
வாலறி வெய்திய வரத்தி னோர்களும்
மேலுறு திருவொடு மேவு றாரெனின்
ஞாலமங் கவர்தமை நவையுள் வைக்குமால். 11

- மாயையுபதேசப் படலம், அசுர காண்டம், கந்த புராணம்

செல்வமே எவ்வழியும் தேடவுரியது; அது இல்லையானால் உலக வாழ்வு பல வகையிலும் தாழ்வாம்; அது ஒன்றிருந்தால் கல்வி முதலியன எல்லாம் வந்து சேரும்; அதனை விரைந்து தேடிக் கொள்ளுங்கள் என அத்தாய் தன் சேய்களுக்கு இங்ஙனம் போதித்திருக்கிறாள். உரைகளிலுள்ள உணர்வு நலங்கள் ஒர்ந்து சிந்தித்துத் தேர்ந்து கொள்ளவுரியன.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில். 759 பொருள்செயல்வகை

தேடு பணத்தை; அது உன் பகைவருடைய செருக்கை அறுத்து உனக்கு உயர்ந்த சிறப்பைக் கொடுக்கும். நீ சீருடன் வாழ அதை விடச் சிறந்த துணை வேறு யாதும் இல்லை என வள்ளுவர் இதில் உணர்க்கியுள்ளார். எள்ளி நிற்கும் பகைவரது உள்ளச் செருக்கை வேரோடு கிள்ளி எறியும் கூரிய வேலாயுதம் எனப் பொருளை இங்கே குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கவுரியது.

பகைமையும் குரோதமும் நிறைந்த இந்த உலக வாழ்க்கையை இனிமையாக்கிப் பொருள் தனி மகிமை செய்து வருதலால் அது சீவிய சஞ்சீவியாய் மேவி நின்றது. அதனால் அதனைத் தகுதியாக ஈட்டிக் கொள்ளும்படி மேலோரும் நூலோரும் அறிவு நலங்களை ஊட்டியருளினார்.

சந்தக் கலி விருத்தம்

செய்கபொருள் யாருஞ்செறு வாரைச்செறு கிற்கும்
எஃகுபிறி தில்லையிருந் தேயுயிரும் உண்ணும்
ஐயமிலை யின்பமற னோடெவையு மாக்கும்
பொய்யில்பொரு ளேபொருண்மற் றல்லபிற பொருளே 5

- காந்தருவ தத்தையார் இலம்பகம், சீவக சிந்தாமணி

மேலே குறித்த திருக்குறளை அடியொற்றி அதற்கு ஓர் விரிவுரை போல் இது பெருகி வந்துள்ளது. ஸ்ரீதத்தன் என்னும் வணிகன் கலம் ஏறிக் கருங்கடல் கடந்து பெரும் பொருள் தேடச் செல்லும் பொழுது இவ்வாறு தேறிப் போயுள்ளான்.

எந்தவகையானாலும் பொன்னை அடைந்து கொள்க என்றது என்னபாடு பட்டாவது பொருளைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என ஈட்டத்தின் அவசியத்தைக் காட்டி வந்தது. தேட்டம் என்னும் பகத்தின் கருத்தைத் தெளிந்து கொள்க.

பொருள் மனிதனால் தேடப்படுவது. அவன் கண்ணுான்றிக் கருதித் தேடாமையால் அது கை கூடாமல் ஒதுங்கியுள்ளது. கருதிய எதையும் மனிதன் அடைந்து கொள்ளலாம்; அந்தக் கருத்து திருத்தமாய் விருத்தியடைந்திருக்க வேண்டும்.

'எண்ணிய எண்ணியாங்கு எய்துப' (குறள், 666)

என்னும் புண்ணிய வாசகம் நாளும் எண்ணியெண்ணிச் சிந்திக்க வுரியது. மனத் துணிவோடு மனிதன் முயற்சியில் மூண்ட பொழுது அவனிடம் உயர்ச்சியான ஓர் தெய்வீக சக்தி ஓங்கி எழுகின்றது.

ஆண்மையோடு முயலாதவன் கீழ்மையாய் இழிகின்றான். ஆற்றல் அவனை விட்டு விலகி விடுகின்றது. தனது அவல நிலையை அறியாமல் அவன் கவலையடைய நேர்கின்றான்.

தான் சுகமாய் வாழ வேண்டும் என்று விரும்புகின்றவன் அதற்குரிய மூல சாதனமான பொருளை ஈட்டிக் கொள்ள எவ்வழியும் கடமைப் பட்டிருக்கின்றான். ‘இன்பமான பிழைப்பு துன்பமான உழைப்பில் உள்ளது’ என்பது உறுதிமொழி.

மதிப்பு மேன்மைகளை அருளி வருதலால் உடல் வருந்தியும் கடல் கடந்தும் மனிதர் பொருளை அடைந்து வருகின்றனர்.

Get money; still get money, boy;
No matter by what means. - Jonson

'குழந்தாய்! எந்த வழியானாலும் மேலும் மேலும் பொருளைத் தேடிக் கொள்' என ஜான்ஸன் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

Get place and wealth; if possible, with grace;
If not, by any means get wealth and place. – Pope

செல்வத்தையும் பதவியையும் யாண்டும் கண்ணியமான முறையில் பெறுக அவ்வாறு அமையாவழி, எவ்வழியிலாவது அவற்றை அடைந்து கொள்க’ என போப் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்ஙனம் பாங்கோடு பாடியிருக்கிறார்.

‘The want of fortune is a crime which I can never get over’ – Nelson.

செல்வம் இல்லாதிருத்தல் எனக்கு என்றும் தொலையாத ஒரு பெரிய பழியாம் என நெல்சன் என்பவர் கூறுகிறார்.

Poverty is infamous in England – Sydney Smith,

வறுமை என்பது இங்கிலாந்து தேசத்தில் கொடிய இழிவாம் என சிட்னி ஸ்மித் என்பவர் கூறுகிறார்.

ஆங்கிலேயர் செல்வத்தை எவ்வாறு கருதிப் போற்றிச் சம்பாதித்து வந்துள்ளார் என்பதை இவற்றால் ஓரளவு அறியலாம். இவ்வுலக வாழ்வை அவர் திவ்விய நிலையில் ஆக்கியுள்ளார்.

பொருள் வருவாய்க்குரிய துறைகளை வகுத்து விரித்து அவர் செல்வங்களைப் பெருக்கி வருவது அதிசயங்களை விளைத்து வருகிறது. அவர்களுடை ய ஊக்கமும் உறுதிப்பாடும் எவ்வழியும் ஆக்கங்களையே நோக்கி வளர்ந்திருக்கின்றன.

ஆறாயிர மைல்களுக்கு அப்பாலிருந்து இங்கு வந்து இந்தியா முழுவதையும் தம் கை வசப்படுத்தி எந்த அரசும் யாதொரு வருமானமும் கண்டறியாததும், இந்நாட்டில் காட்டு மரங்களாய்த் தனியே வளர்ந்துள்ளதுமான பனை நீரிலிருந்து பதினெட்டுக் கோடி ரூபாய்களை வருடந்தோறும் வாரிக் கொண்டு போயிருக்கிறார்களே! இது எவ்வளவு பெரிய விந்தை? கொஞ்சம் சிந்தனை செய்து உணர வேண்டும்.

பல்லாண்டுகளுக்கு முன்னர் இருந்த அமெரிக்க மேதையான எமர்சன் ஆங்கிலேயருடைய செல்வ நிலையைக் குறித்து வியந்து எழுதியிருக்கிறார்.

The English are so rich, because they are constitutionally fertile and creative. The wealth of London determines prices all over the globe. - Wealth

’ஆங்கிலேயர் பெருஞ் செல்வர்; இயல்பாகவே செழிப்பும் செல்வங்களைப் படைக்கும் ஆற்றலும் உடையவர். லண்டன் நகரிலுள்ள செல்வம் உலகம் முழுவதையும் ஒருங்கே விலைக்கு வாங்கத்தக்கது என இங்ஙனம் அவர் குறித்திருக்கிறார். ஆங்கில மக்களுடைய செல்வ வளங்களையும், அவற்றை அவர் ஈட்டி வந்துள்ள நிலைகளையும் இதனால் உணர்ந்து கொள்ளுகிறோம்.

இந்நாட்டவரும் முன்னம் செல்வங்களைத் திரளாக ஈட்டியிருந்தனர். அருநிதியாளர், பெருநிதிக் கிழவர் எனப் பலர்பெயர் பெற்று நின்றனர். ஒரு ஊரின் செல்வம் உலகம் பெறும் எனச் சீரும் சிறப்பும் பெற்றிருந்தது.

முழங்குகடல் ஞால முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்த தாகி
அரும்பொருள் தரூஉம் விருந்திற் றேஎம்
ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினுங் காலினுந் தருவன ரீட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர். - சிலப்பதிகாரம்

காவிரிப்பூம் பட்டினத்தின் செல்வ நிலையையும், அதிலிருந்த செல்வர்களையும் இது குறித்துள்ளது. ஆயிரத்தறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாடு எந்நாடும் பொன்னாடு எனப் புகழ்ந்து போற்ற யாண்டும் வளங்கள் நிறைந்து உயர்ந்திருந்தது. இந்நாள் இன்னா நிலையில் இழிந்திருக்கிறது.

மக்களுக்குத் தேவையான பண்டங்களைப் புதிய புதிய முறைகளில் விளைத்து உலகம் முழுவதும் பரப்பிப் பெருவளம் படைத்து வந்த நாடு ஒரு வளமும் இல்லாமல் வறிய நிலையில் மறுகியிருப்பது பெரிய பரிதாபமாயுள்ளது.

எல்லாரும் செல்வச் சீமான்களாயிருக்கவே ஆசைப்படுகின்றனர். அதற்கு வேண்டிய ஆக்க வேலைகளில் நோக்கமின்றியுள்ளனர். வழி தெரியவில்லையே! என்று கண்ணை மூடிக் கொண்டிருப்பது பழி; விழி திறந்து நோக்கி எவ்வழியும் செவ்வையாய் ஊக்கி எழுந்து உறுதியோடு வேலை செய்ய வேண்டும்.

’வானாலும் இல்லைகாண் வாழ்வு’ தானாக முயன்று மனிதன் பொருளைத் கேடிக் கொள்ள வில்லையானால் அவனுக்கு யாரும் யாதும் உதவி செய்ய முடியாது என்பதை இது உணர்த்தி நின்றது.

வானம் மழை பொழிந்தாலும், சுவர்க்கம் சுகமாய் இருந்தாலும் தன் கையில் பொருள் இல்லாதவனுக்கு அவை யாதொரு நலனும் செய்யாது என்க. பிள்ளை அழுத பொழுதுதான் தாய் வந்து பால் கொடுக்கிறாள்; மனிதன் ஊக்கி முயன்ற போதுதான் தெய்வம் நோக்கி உதவுகின்றது. ஆக்கம் வருகின்றது.

God helps them that help themselves. - B. Franklin

'தாமாக முயல்பவருக்கே கடவுளும் துணை புரிகிறார்’ என்னும் இது ஈண்டு ஊன்றி உணர வுரியது.

Help thyself, and God will help thee. Herbert

'உனக்கு நீயே உதவி செய்; கடவுளும் உனக்குத் துணை செய்வார்’ என ஹெர்பர்ட் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

எதையும் செய்ய வல்ல சக்தி மனிதனிடம் நிறைந்திருக்கிறது. அதனை மறந்திருக்கும் வரையும் அவன் இழிந்திருக்கிறான்; உணர்ந்து எழுந்த போது தெய்வீக ஒளியோடு அவன் உயர்ந்து திகழ்கிறான். ஒளியும் உயர்வும் உள்ளத்தில் உள்ளன. உள்ளம் ஊக்கி எழின் செல்வம் உன்னை நோக்கி வரும். அந்த ஆக்கத்தை அடைந்து பாக்கியவானாகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jan-20, 10:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 95

சிறந்த கட்டுரைகள்

மேலே