மண்மாரி பெய்க

நேரிசை வெண்பா

கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் - நாளையே
விண்மாரி யற்று வெளுத்து மிகக்கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான். 12

- கவி காளமேகம்

எமகண்டம் பாடி வெற்றி பெற்ற பின்னரும், காளமேகத்தைத் திருமலைராயன் அலட்சியப்படுத்த, அப்போது அவர் பாடியது இது.

பொருளுரை:

கொலைகாரர்கள் இருக்கின்ற இவ்வூர் புறங்கூறவும் வஞ்சகம் செய்யவும் கற்றிருக்கின்ற இவ்வூர்; காளைகளைப் போன்று மக்கள் கட்டுப்பாடில்லாமல் நின்று கதறிக் கொண்டிருக்கும் இவ்வூர்,

இதன்கண், நாளைக்கே இந்த வானம், வான்மழை இல்லாது போய் வெளுத்துத் தோன்றி மிகவும் சினந்து மண்ணே மழையாகப் பெய்வதாக என்று இப்படி ஊருக்கே சாபம் தந்து வசைபாடுகிறார் காளமேகம் அது அப்படியே நிகழ்ந்ததெனவும் உரைப்பர்.

அரசனும் அவன் அவையும் இழைத்த தவறுக்கு ஊரே பலியான செய்தி இது. ஆட்சி செய்பவன் நல்லவனாயில்லாத போது, அவனால் அந்த ஊருக்கே அழிவுவரும் என்பதை மெய்ப்பிப்பதும் இது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jan-20, 3:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 113

சிறந்த கட்டுரைகள்

மேலே