ரத்த வேட்டை-3

நான் மேற்கொண்டு பக்கங்களை புரட்ட ஆரம்பித்தேன். ஒவ்வொரு பக்கங்களும் எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஜூலி தன்னுடைய டைரியில் எழுதியதை அப்படியே தங்களுக்கு தருகிறேன். இனி ஜூலி உங்களிடம் பேசுவாள்.

“ என் பெயர் ஜூலி விக்டர். 21 வயது. சிறுவயது முதலே தாவரங்களிடம் அதீத ஆர்வம் எனக்கு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகிலேயே இருக்கும் காட்டுக்கு போய் விடுவேன். செடிகள் பூக்களிடம் மணிக்கணக்காக பேசுவேன். தாவரங்களிடம் ஏற்பட்ட அதீத ஈடுபாடு காரணமாகவே கல்லூரியில் தாவரவியல் பிரிவில் சேர்ந்தேன். ஒருநாள் விடுமுறையில் இந்தக் கிராமத்திற்கு வரும் போதே ஒரு முடிவுடன் தான் வந்தேன். கிராமத்திற்கு அருகிலேயே இருக்கும் காட்டை முழுக்க சுற்றிப் பார்த்து தாவரண்கலப் பற்றிக் குறிப்பு எடுத்துக் கொள்வதென. நான் செய்த அந்த முடிவே எனக்கு வினையாகுமென அப்போது எனக்கு தெரியவில்லை.

இங்கு என் தந்தையப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். பிற அப்பாக்களைப் போல கட்டுப்பாடுகள் விதிப்பவர் அல்ல என் தந்தை. எனக்கு போதிய சுதந்திரம் தந்தவர். நான் எனது திட்டத்தைச் சொன்ன போது. சந்தோசத்துடன் சம்மதித்தார். அதே நேரம் கவனமாய் இருக்கும்படியும் என்னை எச்சரித்தார். நான் காட்டுக்குப் பயணமானேன்.

பல இடங்களைச் சுற்றிப் பார்த்தேன். தாவரங்களைக் குறிப்பு எடுத்துக் கொண்டேன். அப்போதுதான் அதைக் கண்டேன். அது மாபெரும் ஆலமரம். அதன் வேர்கள் மேலிருந்து கீழாக இறங்கி பல இடங்களில் திருமலை நாயக்கர் மஹால் தூண் போல இருந்தது. அப்படி ஒன்றை நான் இதுவரைக் கண்டதில்லை. அந்த மரத்தின் மறுபுற வெளிகள் கூட சுத்தமாக தெரியவில்லை என்றால் நீங்கள் அதன் பிரம்மாண்டத்தை உணர்ந்து கொள்ளல்லாம். எனக்கு மரத்தில் ஏற வேண்டும் போலத் தோன்றியது. நான் மேலே ஏறினேன். இவ்வளவு பெரிய மரத்தில் ஒரு பறவைக் கூடு கூட இல்லாதது என்னை ஆச்சரியப்படுத்தியது. நான் மேல் நோக்கி தொடர்ந்து ஏறினேன். மேலே எனக்கொரு வியப்புக் காத்திருந்தது. அது ஒரு பெரிய பொந்து. சுரங்கப் பாதைப் போல கீழ் நோக்கிச் சென்றது. எனக்கு ஆர்வம் அதிகரித்தது. நான் உள்ளே இறங்கத் தொடங்கினேன்.

உள்ளே இறங்க வசதியாக தண்டுகள் இருந்தன. நான் மெதுவாக உள்ளே இறங்கினேன். உள்ளே இறங்க இறங்க எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. உள்ளே கட்டிடப் பகுதிகள் தெரிய ஆரம்பித்தன. நான் வியப்பில் ஆழ்ந்தேன். மரத்தின் தண்டுப் பகுதி முடிந்து படிக்கட்டுகள் தெரிந்தன. உள்ளே சிதிலமடைந்த பழைய அரண்மனைப் பகுதி தென்பட ஆரம்பித்து. ஒரு பெரிதான காரியத்தைச் சாதிக்கப் போவதான மகிழ்வில் உள்ளம் நிறைந்தது. ஆலமரத்திற்கு சில அடிகளில் ஒரு அரண்மனை மண்ணில் புதையுண்டு போய்க் கிடக்கிறது. ஆலமரத்தின் வேர்கள் சிரமமின்றி நடக்க எனக்கு இடையுறாக இருந்தது. நான் எப்படியோ சமாளித்துக் கொண்டு தொடர்ந்து நடந்தேன்.

உள்ளேப் பல அறைகள் இருந்தன. நான் ஒவ்வொன்றாகப் பார்வையிட்டுக் கொண்டு நடந்தேன். நேரம் மாலை 5 மணி என்றது எனது கைக்கடிகாரம். போதும் திரும்பிவிடலாம் நாளை எனது தந்தையைக் கூட்டிக் கொண்டு வந்து முழுக்க சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு திரும்பினேன் அப்பொழுது நாய்ககளின் “ஊ....” என்ற ஊளைச் சத்தம் கேட்டது. இதென்ன இந்த இடத்தில் நாய்களா.? யாரோ என்னை நோக்கி நடந்து வரும் காலடிச் சத்தம் கேட்டது. நான் சுற்றிலும் பார்வையை ஓட விட்டேன். அதிர்ந்தேன் அவன் என்னை நோக்கி மெதுவாக நடந்து வந்தான். ஆறடிக்கும் மேலான உயரத்தில் இருந்தான். அவன் உடல் முழுக்க உரோமங்களாக இருக்க கண்கள் சிகப்புத் துண்டங்களாக மிளிர்ந்துக் கொண்டிருந்தன. அவன் கை நகங்கள் மிகக் கூரியதாக வளைந்திருந்தன. இரண்டு கூர்மையான பற்கள் உதட்டுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. எனக்கு பயமாக இருந்தது. நான் “வீல்லென” கத்தினேன்.

“யா...யார் நீ.?”

அவன் பதில் கூறாமல் பயங்கரமாக சிரித்தான். “ஹா... ஹா...ஹா..”

“நீ யார்.?” என்றான். வார்த்தைகளா அவை? என்னைச் சில்லிடச் செய்தன. அவனின் பயங்கரச் சிரிப்பு என்னை நொறுங்கச் செய்தது. இவ்வளவு நேரம் மயங்கிப் போகாமல் இருந்ததே பெரிய விஷயம். அவன் என்னை நோக்கி மெதுவாக பேய்த்தனமாக சிரித்துக் கொண்டே வந்தான். நான் கத்தினேன்.

“ஹெல்ப்.. ஹெல்ப்.. யாரவது என்ன காப்பாத்துங்க.” நான் கத்தியது வீண் என்று எனக்கே உரைத்தது. ஆட்கள் நடமாற்றம் அற்ற இவ்விடத்தில் எனக்கு யார் வந்து உதவி செய்யப் போகிறார்கள் என்று நினைத்தேன்.

அவன் இன்னும் பயங்கரமாகச் சிரித்தான். அவன் சிரிக்கச் சிரிக்க சடைப்பிடித்து கரடுமுரடாக வளர்ந்து கிடந்த அவனது தலைமுடியில் இருந்து புகை எழுந்தது. அந்த புகை அவனின் முகம் போலவே இருந்தது. அவை அவன் தலைக்கு மேலே வட்டமடித்து திடீரென அந்த புகை வவ்வாலாக மாறியது. அவை “கீச்சென” கத்திக் கொண்டு என் மீது பாய்ந்தது.

“ஓ மை ஜீசஸ்..” அந்த வவ்வால்கள் சூறாவளிக் காற்றாக என்னைச் சுற்றிச் சுழன்றன. எங்கிருந்து தான் அவ்வளவு தைரியம் வந்ததென தெரியாது. நான் ஓடினேன். வேர் தடுக்கி கீழே உருண்டு புரண்டு எழுந்து ஓடினேன். எப்படியாவது இங்கிருந்து தப்பித்து விடவே விரும்பினேன். அவனின் சிரிப்புச் சத்தம் என்னை துரத்திக் கொண்டே இருந்தது. கீழே விழுந்ததில் காயங்கள் ஏற்பட்டன. கவலையில்லை. எப்படியோ வெளியே வந்தேன். படபடவென கீழே இறங்கி தலைதெறிக்க ஓடினேன்.

அந்த பாழடைந்த அரண்மனைப் பிசாசிடமிருந்து தப்பித்து விட கண்மண் பாராமல் ஓடினேன்.

-திகில் கூடும்

எழுதியவர் : அருள் ஜெ (30-Jan-20, 12:27 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 66

மேலே