நா நீ நூ நே

"நா நீ நூ நே' என்பவற்றை ஒரு வெண்பாவில் அமைத்துச் சுவைபடப் பொருட்செறிவுடன் பாடுக என்றார் ஒருவர்.

நேரிசை வெண்பா

அரையின் முடியில் அணிமார்பின் நெஞ்சில்
தெரிவை யிடத்தமர்ந்தான் சேர்வை - புரையறவே
மானார் விழியீர் மலரணவொற் றீறாகும்
ஆனாலா நாநீநூ நே. 20

– கவி காளமேகம்

என்று பாடினார் காளமேகம்.

பொருளுரை:

மானினது மருட்சி நிறைந்த கண்களைப் போன்ற கண்களை உடையவர்களான பெண்களே! மலரண என்பவற்றின் ஒற்றுக் களான ம் ல் ர் ண் என்பவைகன் நா நீ நூ நே என்பவற்றின் இறுதியாகித் தலைகீழாக நேம், நூல், நீர், நாண் என்றாற்போல ஆகியவருமானால் உமாதேவி யானவள் தன் இடப்பக்கமாக வீற்றிருக்க விரும்பியவனாகிய பெருமானின் அரையிலும் முடியிலும் அழகிய திருமார்பிலும் நெஞ்சிலும் குற்றமறச் சேர்க்கப்படுவதற்கு உரியனவாகும்.

நேம் விஷமும் ஆம்; அப்பொழுது நெஞ்சு என்றதைக் 'கண்டம்' எனப் பொருள் கொள்வர். நே எனில், அன்பு, நேயம்: அது நேம் என மருவியும் வரும்; அப்பொழுது அவன் நெஞ்சிலே உயிர்களிடத்து அன்புடையவன் என்பதாகும் என்கிறார் கவி காளமேகம்.

அரையில் நாணும், முடியில் நீரும், மார்பில் நூலும் நெஞ்சில் அன்பும் உடையவன் மாதொரு பாகன் என்பது இச்செய்யுளின் பொருள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Feb-20, 1:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 78

சிறந்த கட்டுரைகள்

மேலே