இரு தோழிகள் வேறு வேறு எண்ணங்கள்
இரு தோழிகள் வேறு வேறு எண்ணங்கள்-
கார் வந்து நின்றவுடன் ஒரு அதிகாரி வந்து கார் கதவை திறந்து விட இறங்கிய கல்பனாவிற்கு மீண்டும் ஒரு வணக்கத்தை வைத்த அந்த அதிகாரி உள்ளே வாங்க மேடம் என்று அழைத்து சென்றார். அலுவலகத்தின் ஒவ்வொரு நாற்காலியில் உட்காந்து இருப்பவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வந்தார் அந்த அதிகாரி. ஒவ்வொருவரும் எழுந்து வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தனர். கடைசியாக அமர்ந்திருந்த பெண் எழுந்து நின்று வணக்கம் சொன்னாள். பதிலுக்கு வணக்கம் சொன்னவள் இந்த பெண்ணை எங்கோ பார்த்த்து போல மனதுக்கு பட சற்று உற்று நோக்கியவள் ஞாப்கம் வர குரலை உயர்த்த போனவளுக்கு தான் இவர்களுக்கு மேல் அதிகாரி என்ற எண்ணம் வர சற்று நிதானித்தாள். அதற்குள் அந்த பெண்ணும் அவளை அடையாளம் கண்டு கொண்டாலும் சூழ்நிலை கருதி தலை குனிந்து உட்கார்ந்து விட்டாள்.
பெருமூச்சுடன் தன் நாற்காலியில் உட்கார்ந்திருந்த கல்பனாவிற்கு அந்த பெண்ணை உள்ளே கூப்பிட்டு பேசலாமா என்று நினைத்தவள் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து மேலதிகாரியை வரச்சொல்லி அலுவலக விசயங்களை பற்றி விவாதிக்க ஆரம்பித்தாள். அதற்கு பின் வேலைகள் அதிகமாகி அந்த பெண்ணை பற்றிய நினைவுகள் மனதின் பின்னால் போய் விட்டன.
கிளை அலுவலகங்களும், தலைமை அலுவலகமும் ஒரே இடத்தில் அமைந்துள்ள
காம்பவுண்டுக்குள் எல்லா அலுவலகங்களுக்கும் உயர்ந்த அதிகாரியாய் தலைமை அலுவலகத்தில் தன் அறையில் உட்கார்ந்து பரபரப்பாய் வேலை செய்து கொண்டிருக்கும் கல்பனாவை பற்றி கடை கோடியில் உள்ள கிளை அலுவலகத்தின் ஒரு மூலையில் உட்காந்திருந்த பாவனா சற்று முன் தனக்கு வணக்கம் சொல்லிவிட்டு என்னை அடையாளம் கண்டு கொண்டதாக ஒரு புன்முறுவலை காட்டி சென்ற “கல்பனா” வை பற்றிய நினைவலைகளில் மூழ்கினாள்.
இருவரும் பக்க்கத்து பக்கத்து தெருவிலிருந்தாலும் அருகில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு முதலாவது வகுப்ப்பில் சேர்த்த பொழுது அறிமுகமான அவர்களின் அம்மாமார்கள் அதன் பின் இவர்கள் ஒன்றாக சேர்ந்து போக ஆரம்பித்த பின் தங்களுடைய நட்பை இறுக்கிக்கொண்டார்கள். “காக்காய் கடியில்” ஆரம்பித்து பல கதைகள் பேசி இருவரும் ஒன்றாக நடு நிலைப் பள்ளியிலும், தன் படிப்பை தொடர்ந்து பத்தாவது சேரும் பொழுது கல்பனாவின் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் ஆகி விட்டபடியால் பிரிய நேரிட்டது. அப்பொழுது இவர்கள் அழுத அழுகை அவர்களின் பெற்றோர்களுக்கே அழுகையை வரவழைத்து விட்டது.
அதன் பின் வருடங்கள் ஓட இவள் மேல் நிலை தேறி கலைக் கல்லூரியில் ஒரு பட்டத்தையும் வாங்கி விட்டாள். அதன் பின் ஒரு சிறிய கம்பெனியில் எழுத்தராய் சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்த பொழுது தகுந்த வரன் வர அவளுக்கு மணம் முடித்து விட்டனர். கல்யாணம் ஆன பின்னால் தான், அவள் கணவன் உற்சாக மூட்டி அரசாங்க பரீட்சை எழுத வைத்து ஒரு அரசாங்க அலுவலகத்தில் கிளார்க் பணியில் சேர்ந்து விட்டாள். பெரிய சம்பளம் இல்லாவிட்டாலும் நிரந்தர சம்பளம் என்பதில் நிம்மதி. அவள் கனவனுக்கு தனியார் கம்பெனியில் வேலை. பெரிய சம்பளத்தை எதிர்பார்க்க முடியாது என்றாலும் இரண்டு குழந்தைகள் பெற்று விட்டபடியால் குடும்பம் பொருளாதார ரீதியாய் தடுமாறி ஓடிக்கொண்டிருக்கிறது. மற்றபடி அவளின் நலன் அறிந்த கணவன், குழந்தைகளுடன் வாழ்க்கை ரம்யமாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. கல்பனாவை பார்க்கும் வரை.
இன்னும் கொஞ்சம் அதிகமாக படித்திருக்கலாம், கல்பனாவைப்போல “ஐ.ஏ.ஏஸ்” என்ற பட்டம் எனக்கு கிடைத்திருக்கா விட்டாலும், அதற்கு கீழே உள்ள “ஏ” கிரேடு ஆபிசர் வரைக்குமாவது வந்திருக்கலாம். ம்..பதினைந்து வருடங்கள் இந்த டேபிளிலேயே உட்கார்ந்தாகி விட்டது. இப்படியே ஓய்வும் பெற்று விடுவோம். எல்லாம் என் தலையெழுத்து பெருமூச்சுடன் தன் மனதுக்குள் புலம்பினாள்.
ஏதேச்சையாக அன்று காரில் சென்று கொண்டிருந்த கல்பனா கடை வீதியில் பாவனா நின்று கொண்டிருப்பதை பார்த்தாள். “வெயிலில் வேர்த்து விறு விறுத்து” நின்று கொண்டிருக்க அருகில் அவள் கணவராய் இருக்க வேண்டும், அவளுக்கு பொருத்தமானவனாகத்தான் இருக்கிறார். எனக்கே நாற்பது ஆகப்போகிறது, இவளுக்கும் இருக்கும். இவள் கணவர் இன்னும் இளமையாகத்தான் தெரிகிறார். இவர்களுக்கு அருகில் ஒரு பையனும் பெண்ணும் தோளுக்கு மேல் வளர்ந்து நின்று கொண்டிருக்கிறார்கள். பஸ்ஸுக்கு நிற்கிறார்களா தெரியவில்லை?
நிறுத்தி ஏற்றிக்கொள்வோமா என நினைத்தவள் இது அலுவலக கார், ஏதாவது பிரச்சினை வரும் என நினைத்தவள் குற்ற உணர்வுடன் அவர்களை கடந்தே சென்றாள். நினைவுகள் பாவனாவை சுற்றி வட்டமிட்டன. கண்ணுக்கு நிறைந்த கணவன், குழந்தைகள், முகத்தை பார்க்க மகிழ்ச்சியாகத்தான் தெரிகிறாள், இருக்காதா பின்னே ? கணவனும் குழந்தைகளுமாய் இருக்கும் எந்த பெண்ணுக்குத்தான் மகிழ்ச்சி இருக்காது. நான் மட்டும் ஏன் இப்படி ? கல்யாணம் என்று பெயர்தான், அவர் எங்கோ ஒரு மாநிலத்தில் “ பெரிய அரசாங்க அதிகாரியாய் “ பிறந்த குழந்தை எங்கோ “ ஒரு கல்லூரியில் “ ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருக்க, தான் இங்கு தனி மரமாய் ஒரு தலைவலிக்கு கூட மருந்து தானே தேடி தடவிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் ! காரில் போய்க்கொண்டிருந்த கல்பனாவின் மன நிலை தன்னையே கழிவிரக்கம் கொண்டு வருத்தத்தில் பெருமூச்சுடன் சென்று கொண்டிருந்தாள்.
அந்த வெயிலில் பஸ்ஸுக்காக காத்திருந்த பாவனா “கல்பனா” காரில் சென்று கொண்டிருப்பதை பார்த்து அவளது வாழ்க்கையை நினைத்து பெருமூச்சு விட்டு நின்றாள்.