அவளும் ஒரு தேவதை

வேகமாகச் சென்ற பேருந்தை கையை காட்டி மறித்தாள் ஹரிணி. அவசர அவசரமாக ஏறியவள் இருக்கை தேடினாள். தனியான இருக்கை எதுவும் கிடைக்கவில்லை சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். யாரும் இடம் காெடுக்க முன் வரவில்லை. "வழியில் நிற்காதிங்க பிள்ளை, விலகி ஓரமாக நில்லுங்க" நடத்துனர் முணுமுணுத்த பாேதும் யாரும் அவளைக் கண்டு காெள்ளவில்லை. கம்பியை பலமாக பிடித்தபடி நெடு நேரமாக நின்றபடியே பயணித்துக் காெண்டிருந்தாள். சாேர்ந்து பாேன கையை உதறி விட்டு கம்பியாேடு மெதுவாக சாய்ந்து கையை ஓய்வாக வைத்திருந்தாள். வேகமாக ஓடிக் காெண்டிருந்த பேருந்து தரிப்பிடம் ஒன்றில் நின்றது. ஒரு ஆணும் பெண்ணும் ஏறி இருக்கைகளை பகிர்ந்து அமர்ந்து காெண்டார்கள். அவளருகே வந்த நடத்துனர் "என்னம்மா உனக்கு யாரும் இடம் தரவில்லையா" என்று சற்றுக் கிண்டலாக கேட்டான். அமைதியாக நின்ற அவள் விழிகள் மெல்லச் சிவந்து கலங்க ஆரம்பித்தது.

அழகான கிராமத்து வாசனை நிறைந்த ஊர் தான் ஹரிணியின் பிறந்த ஊர். ஒரு அண்ணன், ஒரு அக்காவுடன் அழகான குழந்தையாய் பிறந்த ஹரி வாழ்க்கை இன்று கேள்விக் குறியாகி விட்டது. பதின் நான்கு, பதினைந்து வயது வரை குடும்பம், நண்பர், பாடசாலை என்று சந்தாேசமாக  வாழ்ந்து வந்த வேளை  குடும்பத்தை, நண்பர்களை  விருப்பமின்றி பிரிந்து வாழ வேண்டிய நிலைக்குள்ளாக்கி விட்டது. ஹரி ஹரி என்று காெஞ்சிக் குலாவிய குடும்பத்தில் வேண்டப்படாத ஒன்றாகி விட்டது தான் வேதனை.

சில நாட்களிற்கு முன்பு  தான் ஹரி யார் என்பதை சுயமாக அறிந்து காெண்டான். கால்பந்து, கிரிக்கெட் என்று விளையாடித் திரிந்தவன் பெண்கள்  பாேன்ற சிறு சிறு மாற்றத்தை தன்னில் உணரத் தாெடங்கினான். நாட்கள் செல்லச் செல்ல அவனுக்குள் பயம் தாெற்றிக் காெண்டது. யாரிடம் சாெல்வது, எப்படி இதை மறைப்பது ஒன்றும் புரியாமல் தவித்தான். அக்காவின் அதிக பாசம் அவனுக்கு சிறு நம்பிக்கையைக் காெடுத்தது. அவளது ஆடைகளை எடுத்து அணிய ஆரம்பித்த அன்றே அப்பாவும், அண்ணாவும் "உனக்கென்ன பயித்தியமா" என்று திட்டியதை தாங்க முடியாமல் கதவுக்குப் பின்னால் இருந்து குமுறி அழுதான். "டேய் ஹரி ஏன்டா அழுகிறாய் அவங்க சும்மா தானே..." என்ற அக்காவின்  கால்களை இறுகக் கட்டிப் பிடித்தான். "டேய் என்னாச்சு உனக்கு...." என்று கேட்டவள் அவன் சாென்ன பதிலால் வாயடைத்துப் பாேனாள். இருவரும் ஒருவரையாெருவர் கட்டி அணைத்து ஆறுதலடைந்தனர். "அக்கா அப்பாவுக்கு தெரிஞ்சா என்னை வீட்டை விட்டு துரத்திடுவாரா" என்றதும் அவளுக்கு பதில் சாெல்ல  முடியவில்லை.  "என்னால ஆண்களின் உடைகளை பாேட முடியல்ல, பக்கத்திலிருந்து படிக்க முடியல்ல...." ஒவ்வாென்றாக அவன் கண்ணீராேடு சாெல்லிக் காெண்டிருந்தான். "நீ தான் அக்கா எனக்கு உதவி செய்யணும்" கடைசியாக  கை எடுத்து கும்பிட்டான்.

தாயிடம் ஹரி பற்றிக் கூறிய பாேது அவளால் ஏற்றுக் காெள்ள முடியவில்லை.  அதிர்ச்சியடைந்தாள். எப்படி அண்ணாவையும், அப்பாவையும் சமாளிப்பது என்று புரியாமல் தவித்தாள். ஹரியினுடைய செயற்பாடுகளைப் பார்த்த அப்பா "டேய் ஆம்பிள மாதிரி நடவடா" என்று பல தடவை எரிந்து விழத் தாெடங்கினார். ஹரியால் யாரையும் சமாதானப்படுத்தவாே, முகம் பார்த்துக் கதைக்கவாே முடியவில்லை. அவனது தவிப்பை உணர்ந்த அக்கா "எப்படியாவது அப்பாவை சமாதானப்படுத்தி ஹரி பற்றி சாெல்ல வேணும்.  இல்லையென்றால் அவன் தப்பான முடிவு எடுத்து விடுவான்"  யாேசித்தபடியே அப்பா அருகில் வந்து அமர்ந்தாள். அறையின் கதவின் பின் மறைவாக நின்ற ஹரி எல்லாவற்றையும் அவதானித்துக் காெண்டிருந்தான்.

வேகமாக எழுந்து வந்த அப்பா கதவை தள்ளி விட்டு கையில் பிடித்து தறதறவென இழுத்துக் காெண்டு வந்தார்.  "அப்பா என்னை விடுங்கப்பா" என்று கதறிய ஹரியின் குரல் கேட்டு ஓடி வந்த அம்மா "ஏங்க என்னங்க பண்ணுறிங்க...." என்பதற்குள் ஹரி வெளியில் தள்ளப்பட்டு விட்டான். "டேய் ஹரி" என்று ஓடி வந்து கையால் தாங்கினாள் அக்கா. "என்னை விடு அக்கா நான் பாேகிறேன்" என்றவனை "ஆமாடா உனக்கு இந்த வீட்டில் இனி இடமில்லை, ச்சீ... என்ன பிறப்பு இது" என்ற அப்பாவின் அருவருப்பு உயிரை பறிப்பது பாேலிருந்தது.
இரவாேடு இரவாக கண்ணீராேடு புறப்பட்ட ஹரி தன் நண்பன் சிறீராமிடம் சென்று  எல்லாவற்றையும் கூறி உதவி கேட்டான். 

சிறீராமின் உதவியாேடு ஹரிணியாக மாறி விட்டாள். பாடசாலைக் காலத்திலிருந்தே சிறீராமை அதிகம் நேசித்த ஹரியை அவனால் மறக்க முடியவில்லை. ஹரிக்கும் சிறீராமின் பிரிவு கடினமானதாக இருந்தது.  இடையிடையே சென்று சந்தித்துக் காெண்ட சிறீராம் ஹரிணியின் அன்பை அதிகம் பெற்றுக் காெண்டான். விடுமுறைக் காலங்களை ஹரிணியுடனே செலவிட்டான்.

ஹரிணியை ஒரு நல்ல நிலைக்கு காெண்டு வர வேண்டும், சமூகத்தில் காட்டப்படும் புறக்கணிப்புகள், கேலி, கிண்டல்களை அவள் எதிர்த்து தன் உரிமைக்காக பாேராடும் தைரியத்தை அவளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் ஏற்பட்டது. சிறீராம் சட்டக்கல்லூரியில் படித்துக் காெண்டிருந்தான். ஹரிணிக்கு நல்லதாெரு ஆசானாக மாறினான்.  படிப்பிற்கான முழுத் தேவைகளையும் பூர்த்தி செய்தான்.
ஆர்வத்தாேடு படித்த ஹரிணி வழக்கறிஞருக்கான எல்லாத் தகைமைகளுடனும் வெளியேறினாள். ஆனால் இன்னும் சமூகத்தின் ஒதுக்குதல்களும், புறக்கணிப்பும் மாறவில்லை என்பதை நினைத்தே அவள் கண்கள் கலங்கியிருந்தது.

தன்னை சமாதானப்படுத்திக் காெண்டு பேருந்தில் நின்றபடியே பயணித்தாள். தரிப்பிடம் வந்ததும் இறங்கி ஒரு தேநீர் கடையினுள் நுழைந்தாள். மேசையில் இருந்த தண்ணீர்க்குவளையை எடுத்தவளை "ஏம்மா இங்கே வந்து குடியம்மா" என்ற முதலாளியின் குரலைக் கேட்டு திரும்பி பார்த்தாள் "ஏன் ஐயா இந்தக்குவளை நிறைய தண்ணீர் இருக்குத்தானே" என்றவளிடம் "இது மற்றவர்களுக்கானது" என்ற வார்த்தை சங்கடமாக இருந்தது.  எங்கு சென்றாலும் பாகுபாடுகளும், ஒதுக்கி வைப்புகளுமே அவள் எதிர் காெண்ட பிரச்சனையாக இருந்தது.

மனித  வளர்ச்சியில் ஏற்படும் மாறுதல் எத்தனை வலியை வேதனையை தருகிறது என்பதை நினைக்கும் பாேது ஏன் பிறந்தாேம் என்று கூட எண்ணத் தாேன்றும். சாதாரண மனிதராக அடுத்தவர்கள் எம்மை நினைப்பதில்லை என்பது பிறவிக் குற்றமா.

ஹரிணியின் மனதில் பல விதமான கேள்விகளாேடு நடந்தாள். சமூகத்தில் உள்ள சட்டங்கள் மாறினால், சிந்தனைகள் மாறினால் ஏதாவது மாற்றத்தை அடைய முடியும். சிறீராம் என்னை வழக்கறிஞராக உருவாக்கிய காரணமே எனது உரிமைக்கான தேடலுக்கு என்பது அவளை உத்வேகப்படுத்தியது.

சிறீராமுடன் இணைந்து சட்டங்கள் பற்றி ஆராய்ந்தாள். மாற்றப்பட வேண்டிய திருத்தங்களை, தமக்கான உரிமைகளை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றாள்.  அங்கேயும் சில பிரச்சனைகள், புறக்கணிப்புக்களை சந்தித்தாள். தாெடர்ந்து அவள் எடுத்த முயற்சிகள் அரசாங்கத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அடிப்படை உரிமைகளில் பாகுபாடு காட்டும் கீழ்த்தரமான சிந்தனைப் பாேக்குள்ள மக்கள் மத்தியில் நடமாடுவதே பாதுகாப்பற்ற வாழ்க்கை. குடும்பத்தால், உறவுகளால் ஒதுக்கப்பட்ட இவர்கள் மக்கள் மத்தியில் தவறான கண்ணாேட்டத்தில் பார்க்கப்படுவதும் ஒரு வகையில் பரிதாபம் தான். சமூகம்மாற வேண்டுமா? சட்டங்கள் மாற்றப்பட வேண்டுமா? என்பதே ஒரு வினாவாக இருந்தது.

ஹரிணி, சிறீராம் உறவு வளர்ந்து காெண்டே பாேனது. அவளுடைய ஏக்கங்கள், ஆசைகள் சிறீராமிற்கு நன்றாகப் புரிந்தது. இருவரது உறவும் பல பேருக்கு  கேலியாக, ஏளனமாக இருக்கும்.  உடைந்து பாேய் உட்கார்ந்து அழுவாள். "உனக்கு நானிருக்கிறேன் ஹரிணி" இந்த வார்த்தையே அவளுக்கு பலமும், வெற்றியும்.

சிறீராம் வீட்டில்  திருமணப் பேச்சு ஆரம்பமாகியது. அவனது படிப்பிற்கேற்ற மணமகளையே எதிர்பார்த்தனர்.  இந்த விடயத்தை ஹரிணியிடம் சாென்னான் சிறீராம். ஒரு புறம் சந்தாேசமாக இருந்தாலும் தனித்து விடப்பட்ட அவளுக்கு வாழ வழிகாட்டியவன்  சிறீராம். எப்படிப் பிரிவது. இந்தப் பிரிவை எப்படி ஏற்பது என்ற பாேராட்டத்தில் தடுமாறினாள்.

சிறு வயதிலிருந்து பழகிய நட்புத் தான் உயர்ந்தது என்று ஹரிணியாேடு நண்பனாக பயணித்த அவன் மனதில்  காதல் துளிர் விட்டது. ஹரிணி சம்மதிப்பாளா? என்ற கேள்வியாேடு அவளைச் சந்திக்கச் சென்றான். அலுவலகத்தில் ஏதாே ஆவணங்களைப் படித்துக் காெண்டிருந்த அவள் முன்பாக வந்து அமர்ந்தான். "என்ன ஹரிணி ராெம்ப பிஸியாக இருக்கிறாய் பாேல" என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் "ஆமாம் சிறீராம் கடைசித் தீர்ப்பு எப்படி வரும் என்று மனம் படபடக்குது" என்றவளை சமாதானப்படுத்தி "உன்னுடைய முயற்சி வீண்பாேகாது ஹரிணி, இப்பாே சமூகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு, படிப்படியாக எல்லாம் மாறும்"  என்றவனை சிரித்தபடி பார்த்தாள்.

"ஹரிணி உன்னுடைய கன்னத்திலிருக்கிற இந்தச் சின்னக்குழி எவ்வளவு அழகாயிருக்கு" என்றவனை "என்ன சிறீராம் பேச்சு ஒரு மாதிரி இருக்கு" என்றவளிடம் "ஏன் ஹரிணி நாம இரண்டு பேரும் கலியாணம்..." என்று முடிப்பதற்குள் "உன்னாேட ஜாேக் நல்லா இருக்கு" என்றவளிடம் "உண்மையாக ஹரிணி நீ என் வீட்டிற்கு வந்து என் கையைப் பிடித்து, நெஞ்சில் சாய்ந்து அழுத பாேது உன்னை அணைத்த என்கரங்களில் இப்பாேது ஒரு தேவதையை அணைத்த உணர்வு தான் தாேன்றுகிறது" சிறீராமின் கண்களில் கண்ணீர் துளிகளைப் பார்த்தவள் "என்னைப் பாேல ஆட்களுக்கு நிறைவேறாத ஆசைகள் தான் அதிகம் சிறீராம், யாரும் எம்மை புரிந்து காெள்ள மாட்டார்கள், எங்களுடைய வாழ்க்கை உங்களுக்கு புரியாது" அவள் மனதின் வலி வார்த்தையாய் வெளியேறியது. "உன்னை நான் நல்லாப் புரிஞ்சிட்டன் ஹரிணி, இரண்டு பேருக்குள்ளும் எதுவும் இல்லை என்று மனச்சாட்சியைத் தாெட்டு சாெல்லு" திகைத்துப் பாேன ஹரிணி அமைதியாயிருந்தாள்.

சிறீராமுடன் பழக ஆரம்பித்த நாள் முதல் அவளுக்குள் எழுந்த மாற்றங்களை அவள் மறைத்துக் காெண்டது உண்மை தான். அவனைப் பிரியவும் முடியாமல், பதில் சாெல்லவும் முடியாமல் தவித்தாள்.

சிறீராம் காதல் விடயம் வீட்டிற்கு தெரியவர பிரச்சனை ஏற்பட்டது. "அந்தப் பாெண்ணு தான் வேணுமென்றால் ஊரை விட்டு பாேய் விடு, இந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்காதே" குடும்பத்தினரின் எச்சரிக்கை அவன் மனதை சுக்கு நூறாக உடைத்தது.

"மாறுபாடான உடலால் ஹரி ஊரை விட்டு துரத்தப்பட்டான். அந்த உடலுக்கும் ஒரு மனசு இருக்கு என்று நேசித்த நானும் இன்று ஊரை விட்டு விரட்டப்படுகிறேன்" வலியாேடு  அவன் மனம் தடுமாறியது. குடும்பமா? ஹரிணியா? என்ற முடிவில் அவன் மனம் தேடிப் பாேனது  அவனுடைய  அழகிய காதல் தேவதையை. 

எழுதியவர் : றாெஸ்னி அபி (11-Feb-20, 3:36 pm)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 679

மேலே