387 ஈவோர்க்கு இன்பும் ஈயார்க்குத் துன்பும் இரப்போர் ஈவர் - கைம்மாறு கருதா உதவி 5

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

இரவலர் தம்மை யெள்ளும்
..ஏழைகாள் இயம்பக் கேளீர்
நரகைமோக் கத்தை விற்க
..நண்ணிய வணிகர் அன்னார்
பரகதி அவரைத் தாங்கும்
..பண்பினார்க் கீவர் அள்ளல்
கரவுளார்க் கீவர் என்னின்
..அவர்கதை கழற லென்னே. 5

- கைம்மாறு கருதா உதவி
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”இரந்துண்போரை இகழும் அறிவிற் குறைந்தவர்களே! நான் சொல்வதைக் கேளுங்கள்.

அவர்கள் நரகம், மோட்சம் என்னும் பெரும் பொருள்களை விற்கும் வியாபாரிகளாவர்.

அவர்க்கு வேண்டுவன கொடுத்துப் பாதுகாக்கும் நல்ல தன்மையுடையார்க்கு மோட்சமாகிய வீட்டினை நல்குவர்.

கொடுப்பதை ஒளிக்கும் தன்மையுடையார்க்கு நரகத்தைக் கொடுக்கின்றனர்.

அதனால், அவர் நிலைமையைப் பற்றி என்ன சொல்லுவது?

அவர்கள் மிகப் பெரியவர்கள் ஆகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

இரவலர் - பிச்சையெடுப்போர். எள்ளும் - இகழும். ஏழை - அறிவிற் குறைந்தார். மோக்கம் - வீடு. வணிகர் - வியாபாரி. பரகதி - வீடு. அள்ளல் - நரகம். கரவு - ஒளிப்பு. கதை - நிலைமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Feb-20, 8:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே