கனவுகளின் தேவதை

கனவுகளின் தேவதை
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

அவசரகதியின்
ஜனசந்தடிகளைக்
களைந்து சுருட்டி
வீட்டுக்குள் தள்ளிய தெருக்கள்
நிர்வாணமாய்க் கிடந்தன
இரவில்

அதிகாலைப்
புத்துணர்ச்சியைச்
சூட்டிய மரங்கள்
கசக்கி உதிர்த்தன
சருகுகளை இரவில்

தெருவிளக்கின்
வெளிச்சத்தில் விரைந்த
வாகனப் பூச்சிகளைத்
துரத்திச்சென்று
தொலைவில் வைத்து
விழுங்கிய பின்
சர்ப்பமாய் வீங்கி நெளிகிறது
வெரிச்சோடிய சாலை

ஒளி வழியும்
விளக்குக் கம்பத்தின் கீழ்
ஒற்றைத் துளியாய்
துளிர்த்து நின்றவள்
தேவதையின் நிழலோ

ஐயுற்ற நான்
அருகில் சென்றேன்

என் பார்வை
சாட்டை சொடுக்கிய
அச்சத்தில்
சட்டென
வானத்தைக் கிழித்து
சேலையை
உடுத்திக்கொண்டது போல்
அவள் பாவனை

எட்டுத் திக்கினை மடித்து
கனவாக வைத்திருந்தவள்
இரவினைப் பிடித்து
கைப் பையாக
வைத்திருந்தாள்

அதனுள்ளேயிருந்து
நிலவை எடுத்து
முகம்பார்த்து
ஒப்பனை திருத்தியவள்
விண்மீனொன்றைக் கிள்ளி
நெற்றியிலிட்டாள்

வானவில் போலொரு
குப்பியெடுத்து
உதட்டுக்குச் சாயம்
பூசியவள்
இருளைத் தொட்டு
விரலால் கண்ணுக்கு
மை தீட்டினாள்

காத்திருந்து
திரும்பியவளிடம்
நீ யாரென்றேன்

கனவுகளைத்
தானமிடுபவளென்றாள்

நான் முத்த யாசகன் என்றேன்

பளிச்சென்று
புன்னகைத்தவளின்
உதடுகளுக்கிடையே
மின்னல் கிழித்தது

நான் பார்வைக் கூச்செரிந்து
கண்மூடித் திறந்த கணம்
அவள்
காணாமல் போயிருக்க
தொலைவில்
புஷ்பப் பதுமையாய்
மிதந்தவளின் தோளில்
அசைந்தன சிறகுகள்
இரண்டு .

எழுதியவர் : முகிலன் (12-Feb-20, 11:30 pm)
பார்வை : 442

மேலே