389 உற்றிடத்து உதவி உலகினும் பெரிது - கைம்மாறு கருதா உதவி 7

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

மக்கடம் பொறையைத் தாங்கு
..மகிக்குமன் னாரைக் காக்க
மிக்கநீர் பொழியா நின்ற
..விண்முகி லினுக்குஞ் செய்யத்
தக்கவோ ரெதிர்நன் றுண்டோ
..சமயத்தோர் பயனும் வேண்டா(து)
ஒக்கவே செய்த நன்றி
..யுலகினும் பெரிதா மாதோ. 7

- கைம்மாறு கருதா உதவி
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மக்கள் முதலிய உயிர்களின் சுமையைத் தாங்கிச் சுமக்கும் நிலத்திற்கும், அவ்வுயிர்களைக் காக்க, மிகுந்த நீரை வழங்கும் மழைக்கும் செய்வதற்குத் தகுந்த கைம்மாறு நம்மிடம் என்ன இருக்கின்றது?

உற்றகாலத்தில் எவ்விதப் பயனையும் எதிர்பாராது மனமொத்துச் செய்த நன்மை ஞாலத்தினும் மிகப் பெரியதல்லவா” என்கிறார் இப்பாடலாசிரியர்.

பொறை - சுமை. மகி - நிலம். முகில் - மழை.
சமயம் - உற்ற காலம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-20, 5:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே