ஒற்றைக் கால் தவம்

ஒற்றைக் கால் தவம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நீலத்தைக் கரைத்து
அழுத துயரில்
விழவில்லை
வானின்று துளி நிலவும்

கிளையில் விடுபட்டு
வனத்திலிருந்தும்
வனதிற்கும் மேலேயும்
வானத்தின் மேலே
சிறகை வளைக்கும்
பறவையம்புக்கு
முறியவில்லை எந்த
வானவில்லும்

நதியோர மரங்கள்
மண்ணை ஊடுருவி
வேர் நீட்டிய தூண்டிலில்
சிக்குமா துளி மீன்களாவது ?...

கரையைக் கைகோர்த்த நதி
கடல் சேர
வழிகாட்டியென
நடிக்கலாம் நாணல்கள்

வெறுமையைப் பிழிந்து
தனிமையில் நிறப்பி
காலத்தின் விளிம்பில்
துயர் வழிய வழிய
மழையை யாசித்தே
கொண்டையில்
வானத்தைச் சுமந்த
ஒற்றைக்கால் தவத்தை
யார் சொன்னது
மரமென்று ?

எழுதியவர் : முகிலன் (13-Feb-20, 8:59 pm)
சேர்த்தது : முகிலன்
Tanglish : otraik kaal thavam
பார்வை : 141

மேலே