பொன்னாவரை இலை காய் பூ

'பொன்னாவரை இலை காய் பூ என்னும் சொற்கள் வருமாறு வெண்பா ஒன்று சொல்லுக' என்று கேட்டார் ஒருவர்.

'பொன் ஆ வரை இலை காய் பூ என்று அவற்றைக் கொண்டு திருமாலினோடு அவற்றைப் பொருத்திப் பாடினார் காளமேகம்.

நேரிசை வெண்பா
(ந். ன் மெல்லின எதுகை)

உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர்கோன் தன்னால்
எடுத்ததுவும் பள்ளிக் கியையப் - படுத்ததுவும்
அந்நாள் எறிந்ததுவும் அன்பின் இரந்ததுவும்
பொன்னா வரையிலைகாய் பூ. 30

– கவி காளமேகம்

பொருளுரை:

திருமாலானவர் தாம் ஆடையாக உடுத்திக் கொண்டதும், தேவர் கோமனாகிய இந்திரனின் மழை பெய்வித்த செயலினாலே எடுத்துத் தாங்கிக் கொண்டதும், மகா பிரளய காலத்திலேதான் கண் வளருவதற்கு ஏற்றதாகக் கொண்டு படுத்திருந்ததும், அந்த நாளிலே கன்றைக் குனிலாகக் கொண்டு எறிந்ததுவும், தான் விரும்பிச் சென்று மாவலியினிடத்தே யாசித்ததுவும் பொன்னும், பசுக்களும் கோவர்த்தன மலையும், ஆலிலையும், விளங்காயும், நிலமும் ஆகும்

பூ - நிலவுலகம், குணில் - குறுந்தடி, இலை - ஆலிலை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Feb-20, 3:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 98

மேலே