புலமுடைய நன்மக்கள் காணார் நவை – செல்வத் திமிர், தருமதீபிகை 593

நேரிசை வெண்பா

நில்லாத செல்வ நிலையை நினையாமல்
பொல்லாச் செருக்குப் புரிதல்தான் – கல்லாத
புன்மக்கள் பூணும் புலையே புலமுடைய
நன்மக்கள் காணார் நவை. 593

- செல்வத் திமிர், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நிலையில்லாத செல்வத்தின் நிலையை உணர்ந்து தெளியாமல் உள்ளஞ் செருக்குதல் அறிவில்லாத இழிந்த மக்கள் இயல்பாம்; அறிவுடைய நன்மக்கள் அவ்வாறு செருக்கி நில்லார் என்கிறார் கவிராஜ பண்டிதர்; நிலை தெரியாமல் செருக்குவது புலை எனப்படுகிறது.

அவலமான இழிநிலைகள் யாவும் அறியாமையால் நிகழுகின்றன. முன்னும் பின்னும் எண்ணியுணராமையால் மனிதன் கழிசெருக்குடையனாய் இழிந்து படுகின்றான். வாழ்க்கைக்கு உரிய வளங்கள் செல்வங்கள் என வந்தன. அவை நிலையில்லாதன; நீர் மேல் எழுகின்ற அலைகள் போல் பார்மேல் எழுந்து மறைந்து போகின்றன.

இளமை கழிகிறது; மூப்பு நுழைகிறது; செல்வம் ஒழிகிறது. இந்த அழிவுகளை நாளும் விழி எதிரே கண்டிருந்தும் உணர்ந்து சிந்திக்காமல் ஊனமுறுகிறான். உண்மையை யுணர்வது ஞானமாகி நன்மை பல தருகிறது. அங்ஙனம் உணராதொழிவது ஈனமாய் இழிவுகளை விளைக்கிறது. தன் செல்வ நிலைமையை உண்மையாக எண்ணியுணரின் மனிதன் நன்மை அடைய நேர்கின்றான். எண்ணி நோக்காமையால் இழிவாய்க் களி மிகுத்து நிற்கிறான்.

நேரிசை வெண்பா

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும். 8

- செல்வம் நிலையாமை, நாலடியார்

மேகத்தில் தோன்றி மறைகிற மின்னலைப் போல் செல்வம் விரைந்து மறைந்து போகும்; அந்தப் போக்கை எண்ணி நோக்காமல் புல்லறிவாளர் செல்வம் உடையேம் என்று செருக்கித் திரிகின்றார் என இது இளித்திருக்கிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா காய் காய் / காய் மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

முல்லை முகைசொரிந்தால் போன்றினிய
..பாலடிசில் மகளிர் ஏந்த
நல்ல கருணையால் நாள்வாயும்
..பொன்கலத்து நயந்துண் டார்கள்
அல்லல் அடையவட(கு) இடுமின்ஓட்(டு)
..அகத்தென்ற யில்வார்க் கண்டும்
செல்வம் நமரங்காள் நினையன்மின்
..செய்தவமே நினைமின் கண்டீர் 2623

- விசயமா தேவியார் துறவு, முத்தி இலம்பகம்,
- சீவக சிந்தாமணி

முல்லை அரும்பு போன்ற நல்ல நெல் அன்னத்தை இனிய சுவைக்கறிகளுடன் நெய்யும் பாலும் கலந்து பொன்கலத்தில் உண்ட செல்வச் சீமான்களும் பின்பு கையில் ஓடு ஏந்திப் பிச்சை எடுத்துள்ளனர்; ஆகவே செல்வம் நிலையில்லாதது; அதனை நினைந்து செருக்காமல் நல்ல தருமநெறியை நாடிக் கொள்ளுங்கள் என இது உணர்த்தியுள்ளது.

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. 332 நிலையாமை

கூத்தாடும் இடத்தில் சனங்கள் வந்து கூடியிருந்து பின்பு ஒருங்கே பிரிந்து போதல் போல் செல்வம் விரைந்து சிதைந்து போகும்; அது உள்ளபோதே நல்லதைச் செய்து கொள்; வீணே செருக்கி நில்லாதே என வள்ளுவர் இங்ஙனம் போதித்திருக்கிறார்.

மனைத்திற வாழ்க்கையை மாயமென் றுணர்ந்து
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்
நிலையா வென்றே நிலைபெற உணர்ந்தே
மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன். - மணிமேகலை, 28

உண்மை நிலையை உணர்ந்து செய்தவம் மருவி மாசாத்துவான் உய்தி பெற்றுள்ளதை இவ்வாறு உரைத்திருக்கிறான்.

இன்னிசை வெண்பா

துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும். 2

- செல்வம் நிலையாமை, நாலடியார்

செல்வம் எவரிடமும் நிலைத்து நில்லாது; சகடக்கால் போல் மாறி மாறிச் சுழன்று வரும்; அது கிடைத்த போதே பலர்க்கும் பகிர்ந்து கொடுத்து அறத்தை ஆக்கிக் கொள்ளுக என இது குறித்துள்ளது. தருமம் தலை காக்கும் என்பது தனி மொழி.

பொருள் வாய்த்த பொழுதே புண்ணியங்களை விளைத்துக் கொள்க; அவ்வாறு செய்யாமல் செருக்கி நின்றால் சின்ன மனிதனாய்ச் சிறுமையடைவாய் என மேலோர்கள் பல வழிகளிலும் தெளிவாக உரைத்திருக்கின்றனர்.

புன்மக்கள் பூணும் புலை. செருக்கை விழைந்து கொள்ளும் மக்களுடைய இழி நிலையை இது விளக்கியது. சின்னத்தனத்தின் சின்னமாகச் செருக்கு மன்னியுளது; அதனை மருவி இழியாதே; ஒருவி உயர்ந்து பெரிய மனிதனாகுக. .

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

வணக்கமில் லார்கள் எல்லாம்
..வண்பயன் என்னும் பாரம்
இணக்கமில் லார்கள் என்போல்
..எனத்தலை நிவந்த சாலி:
வணக்கமுள் ளார்கள் எல்லாம்
..வண்பயன் என்னும் பாரம்
இணக்கமுள் ளார்கள் என்போல்
..எனத்தலை இறைஞ்சிற் றம்மா. - திருவானைக்காப் புராணம்

உள்ளே அறிவாகிய சாரமுடையவர் அமைதியாய் வணங்கி அமர்வார்; சாரமாகிய அப்பாரம் இல்லாதவர் செருக்காய் நிமிர்ந்து நிற்பார் என்பதைச் சாலி கோலிக் காட்டியது என இது கூறியிருத்தலைக் கூர்ந்து நோக்குக. சாலி - நெற்பயிர்.

செருக்கி நிற்பவர் சிறியவராயிழிகின்றனர்; அது செய்யாதவர் பெரியவராய் உயர் மதிப்படைகின்றனர். நல்ல பான்மைகளை மருவி எல்லா வகைகளிலும் மேன்மை பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-20, 12:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 73

சிறந்த கட்டுரைகள்

மேலே