மார்பிலே கொம்பு

‘பன்றிக்கு மார்பிலே கொம்பு’ என்று ஒரு செய்யுள் கூறுக’ என்றார் ஒருவர்.

ஸ்ரீ முஷ்ணம் என்ற திருநகரில் கோயில் கொண்டிருக்கும் பெருமாளுக்குப் பூவராக சுவாமி என்று பெயர். அவர் மார்பிடத்தே பூங்கொம்பு போல்வளாகிய திருமகளைக் கொண்டிருப்பவர். இந்தக் கற்பிதத்தை வெண்பாவாகச் சொல்லி அவரைத் தலைகுனியச் செய்தார் கவிஞர்.

நேரிசை வெண்பா

தெருமுட்டப் பாளை சிதறவளர் பூகத்
தருமுட்டச் செவ்வாளை தாவும் - திருமுட்டத்
தூரிலே கண்டேன் ஒருபுதுமை பன்றிக்கு
மாரிலே கொம்பான வாறு. 34

– கவி காளமேகம்

பொருளுரை:

தெருக்கள் நிறையும்படி பாளைகள் சிதறிவிழுமாறு வளர்ந்துள்ள கமுக மரங்கள் மீதெல்லாம் செவ்வாளை மீன்கள் பாய்ந்து விழுகின்ற நீர்வளத்தினைக் கொண்ட ஸ்ரீமுஷ்ணம் என்னும் ஊரிலே ஒர் அதிசயத்தினை நான் பார்த்தேன்; அது, பன்றிக்கு மார்பிலே பூங்கொம்பு திருமகளைக் கொண்டு இருக்கின்ற நன்மையே யாகும்.

பன்றி - பூவராக மூர்த்தி. அவர் மார்பில் கொம்பு உண்டாகி யிருந்த தன்மை - அவர் மார்பிடத்தே திருமகள் வீற்றிருக்கும் தன்மை; திருமகளைப் பூங்கொம்பு’ என்றனர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-20, 1:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 84

மேலே