ஓர்மொழியே கற்றுள்ளாய் நீசெருக்கல் எவ்வண்ணம் - கல்விச் செருக்கு, தருமதீபிகை 584

நேரிசை வெண்பா

எண்ணரிய பன்மொழிகள் இஞ்ஞாலத் துள்ளனவுன்
கண்ணிலுறும் ஓர்மொழியே கற்றுள்ளாய்; - திண்ணமுடன்
அவ்வொன்றும் நன்றாய் அறியகில்லாய்; நீசெருக்கல்
எவ்வண்ணம் சற்றே இசை. 584

- கல்விச் செருக்கு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அளவிடலரிய மொழிகள் இவ்வுலகில் பரவியுள்ளன; உன் விழி எதிரே தோன்றிய ஒரு மொழியையே நீ படித்திருக்கிறாய்; அதையும் தெளிவாக அறிந்து கொள்ளவில்லை; அவ்வாறிருக்க நீ செருக்குவது எவ்வாறு? இதனை உணர்ந்து சொல் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் செருக்கனை நெருக்கிச் சிந்திக்கச் செய்கின்றது.

பேசுகின்ற இயல்பு மனித இனத்துக்குத் தனியுரிமையாய் அமைந்துள்ளது. உள்ளத்தின் எண்ணங்களை வெளியே உணர்த்தி வருதலால் அந்த ஒலித்துணுக்குகள் மொழிகள் என வந்தன. பேச்சு, வார்த்தை, உரை, சொல் முதலியன எல்லாம் காரணப் பெயர்களாய் வெளிவந்திருக்கின்றன. மனிதர் நிலவகையால் பிரிந்து பல பிரிவுகளாய் வாழ்ந்து வருகின்றனர். அவரவர்க்குத் தனியே மொழிகள் அமைந்திருக்கின்றன. ஒரு நாட்டில் வழங்கும் மொழி மற்ற நாட்டவர்க்குத் தெரியாது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, சவுராட்டிரம், மலையாளம் முதலிய மொழிகள் இத்தென்னா ட்டில் வழங்கப்படுகின்றன. தமிழர், தெலுங்கர், கன்னடர், துளுவர், சவுராட்டிரர், மலையாளிகள் எனத் தாங்கள் பேசுகின்ற மொழிகளால் பெயர் பெற்றுள்ளனர். ஒருவருக்குக் தாய்மொழியாயுள்ளது மற்றவர்க்கு வாய்மொழிய வராது. தங்களுக்கு உரிமையான மொழிகளையே எவரும் பெருமையாகப் பேசி வருகின்றனர்.

'அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது’ என்றான் தமிழன்.

'சிவனி ஆக்ஞ லேக சீம கறவது” என்றான் தெலுங்கன். ’இறைவன் ஆணை இன்றேல் எறும்பும் கடியாது’ என்பது இத்தெலுங்கு வாக்கியத்தின் பொருள். இந்த மொழியின் பொருள் தமிழனுக்குக் தெரியாமையால் திகைத்து நின்றான். அவன் நகைத்துச் சென்றான்; இன்னவாறே ஒரு தேசத்தவர் பேசுவது வேறு தேசத்தவர்க்கு விளங்காமையால் நேரே சந்தித்த பொழுது பார்வை அளவில் பார்த்து வேறே ஊமைகளாய் ஒதுங்கிப் போகின்றனர்.

தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு' என்பது பழமொழி. பாஷைகளே மனித உலகத்தை மாண்புடன் இயக்கி வருகின்றன. இந் நிலவுலக முழுவதிலும் வழங்கிவரும் மொழிகள் எவ்வளவு? என ஒரு ஆங்கில அறிஞர் ஆராயத் தொடங்கினர். பல நாடுகளுக்கும் சென்று பலவகையிலும் ஆராய்ந்து கணக்கு எடுத்தார். எண்ணுாற்றுத் தொண்ணுாற்றாறு (896) மொழிகள் உள்ளன என்று அளவு கண்டு உளவு தெரிய எழுதி வைத்துள்ளார். காலந்தோறும் மேலும் பெருகி வரும். இங்கே வழங்கி வருவன அளந்து காணவந்தன.

கட்டளைக் கலித்துறை

சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம்வங்கம்
கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே,

பதினெட்டு நாட்டு மொழிகள் இங்ஙனம் காட்டப்பட்டுள்ளன.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
பூரியர் ஒருவழிப் புகுந்த(து) ஆம்என,
ஓர்கில கிளவிகள் ஒன்றொ(டு) ஒப்பில,
சோர்வில, விளம்புபுள் துவன்று கின்றது. 13

- பம்பை வாவிப் படலம், கிட்கிந்தா காண்டம், இராமாயணம்

பம்பைப் பொப்கையில் பறவைகள் ஒலித்தன; பதினெட்டுப் பாடை மாக்கள் ஒன்று கூடி. ஒருவருக்கு ஒருவர் பொருள் தெரியாமல் பேசியது போல் இருந்தன என்று கம்பர் இவ்வாறு கூறியிருக்கிறார், பொருள் புரியாதது மருளாய் வேறு படுகிறது.

காளமேகப்புலவர் தமிழில் பெரிய பண்டிதர், சிறந்த கவிஞர். ஒரு முறை திம்மி என்னும் தெலுங்கச்சி வீட்டுக்குப் போயிருந்தார். அவளுக்குத் தமிழ் தெரியாது; இவருக்குத் தெலுங்கு தெரியாது. இவரைப் பார்த்ததும், ’ஏண்டா அப்பா! நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?' என்று இங்ஙனம் தெலுங்கில் கேட்டாள். கவிராயர் ஒன்றும் தெரியாமல் விழித்தார். அவள் சிரித்தாள். இரவு அங்கே ஊமை போல் தங்கியிருந்து மறுநாள் வெளியே வந்தார். அங்கு நேர்ந்த நிலைமையை ஒரு கவியாகப் பாடினர். அந்தப் பாட்டு கீழே வருகின்றது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

ஏமிரா ஓரு என்றாள்
..எந்துண்டி வஸ்தி என்றாள்
தாமிராச் சொன்ன வெல்லாம்
..தலைகடை தெரிந்த தில்லை;
போமிராச் சூழும் சோலை
..பொருகொண்டைத் திம்மி கையில்
நாமிராப் பட்ட பாடு
..நமன்கையில் பாடு தானே.

தமிழில் பெரிய புலவராய் இருந்தும் தெலுங்கு பாஷை தெரியாமையால் கவிராயர் இந்தப்பாடு பட்டிருக்கிறார், இந்தப் பாட்டைப் பாடும்போது அவருக்குச் சிரிப்பு வந்திருக்கும் என்று தெரிகின்றது. மனிதனுடைய அறிவின் எல்லையையும் சிறுமையையும் இந்த நிகழ்ச்சி நன்கு காட்டியுள்ளது.

ஒருதேசத்தவன் பேசுகிற மொழி அயல் தேசத்தவன் அறியானாதலால் இயன்ற அளவே பேச்சு வழக்குகள் நடந்து வருகின்றன.

நாம் தமிழ்நாட்டில் பிறந்திருக்கிறோம்; தமிழைத் தாய் மொழியாய்ப் பேசிவருகிறோம். இம்மொழியில் அரிய பல நூல்கள் பெருகி இருக்கின்றன. காவியக் கலைகள் சீவிய நதிகளாய்ச் செழித்து வளர்ந்துள்ளன. ஒரு நூலைச் செவ்வையாகத் தெளிந்து கொள்ளவே மனிதனது வாழ்நாள் முழுவதும் காணாது; அவ்வளவு மதி நலங்கள் எவ்வழியும் மன்னி நிற்கின்றன.

எண்ணரிய பாஷைகளுள் உன் கண் எதிர்ப்பட்ட ஒரு மொழியையே நீ படித்திருக்கிறாய் என்று தன் படிப்பை அவன் எண்ணி யுணர்ந்து எளிமை தெளிய ஓர் மொழியே கற்றுள்ளாய்! எனப்பட்டது..

கற்ற கல்வியும் அரை குறையானதே. இன்னவாறு சின்ன நிலையில் இருந்து கொண்டு தன்னைப் பெரிய மதிமானாய் எண்ணிச் செருக்குவது என்ன மடமை!

ஒன்றும் நன்றாய் அறிய கில்லாய்! என்றது மனிதன் கற்றுள்ள கல்வியின் சிறுமை தெரிய வந்தது. கல்விநிலை எல்லை இல்லாதது, அதில் சிறிது அளவே ஒருவன் கற்றுக் கொள்ளுகிறான். படித்தது பிடி அளவு; படியாதது படி அளவு எனறபடி படிப்பு எங்கும் படிந்துள்ளது.

கல்வியின் பெருமையையும் தான் கற்றுள்ள சிறுமையையும் ஒருவன் உற்று உணர்ந்தால் உள்ளம் செருக்கான். அறியாமையால் அகங்காரம் விளைகிறது; அறிந்தபோது அது மறைந்து போகிறது. மெய்யறிவால் மேன்மைகள் வருகின்றன.

நீ எவ்வளவு படித்திருக்கிறாய்? உனக்கு என்ன தெரியும்? நீ படித்துள்ளது அணுவினும் சிறியது; படிக்க வேண்டியது அண்டத்திலும் பெரியது; கலைகள் அலை கடல்களிலும் விரிவாய்ப் பெருகயுள்ளன. சிறு திவலை அளவும் நீ படிக்கவில்லை; உன் நிலைமையை உணர்ந்து பார்த்தால் உள்ளம் நாணுவாய்! உண்மையை உணராமையால் புன்மையாய்ச் செருக்குகின்றாய்! எதையும் அமைதியாய் எண்ணி நோக்கிக் கண்ணியமாய் வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Feb-20, 6:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 90

மேலே