உள்ளம் புலைமிகுந்து நெஞ்சம் செருக்கல் நெடுந்தீமை – செல்வத் திமிர், தருமதீபிகை 594

நேரிசை வெண்பா

உலக நிலையை உணராமல் உள்ளம்
கலக நிலையமாய்க் காட்டிப் – புலைமிகுந்து
நெஞ்சம் செருக்கல் நெடுந்தீமை யாகுமே
கொஞ்சம் நினைந்து கொளல்.594

- செல்வத் திமிர், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உலகத்தின் உண்மை நிலையை உணர்ந்து பாராமல் கலகமும் தீமையும் புரிந்து உள்ளம் செருக்குதல் மிகவும் தீமையாகும். உண்மை நிலையை உணர்ந்து தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

சிருஷ்டியில் விண்ணும் மண்ணும் விரிகடல்களும் எண்ணிடல் அரியன; இந்தப் பூமண்டலம் போல் பல்லாயிரம் மடங்கு பெரியனவாய்ச் சூரியன், சந்திரன் முதலிய கோளங்கள் உள்ளன. இவை யாவும் சேர்ந்து ஒர் அண்டமாம். இத்தகைய அண்டகோடிகள் அளவிடலரியன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

மண்டலத்தின் மிசைஒருவன் செய்தவித்தை அகோஎனவும்
வார ணாதி
அண்டமவை அடுக்கடுக்காய் அந்தரத்தில் நிறுத்துமவ
தானம் போல
எண்தரும்நல் அகிலாண்ட கோடியைத்தன் அருள்வெளியில்
இலக வைத்துக்
கொண்டுநின்ற அற்புதத்தை எவராலும் நிச்சயிக்கக்
கூடா ஒன்றை. - தாயுமானவர்

கோழி முட்டைகளை அந்தரத்தில் அடுக்கு அடுக்காய் நிறுத்தி வைத்திருத்தல் போல் அண்ட கோடிகளை அகில வெளிகளில் விளங்க வைத்துள்ள பரமனது அதிசயநிலை யாரும் அறியமுடியாத அற்புதமுடையது என்னும் இது இங்கே ஆராய்ந்து சிந்திக்க வுரியது. வாரணம் - கோழி. அண்டம் - முட்டை..

பல்லாயிரம் அண்டங்கள் எல்லையில்லாத நிலையில் எங்கும் பரவி யாரும் யாண்டும் நிலை காணாதபடி நிலவியிருக்கின்றன.

பூகோள ககோளங்களின் நிலைகளை விஞ்ஞான அறிவால் எவ்வளவு துருவி அறிந்தாலும் தினையளவும் முடிவு அறியாதபடி அவை நெடிது நிலவி நிற்கின்றன. இவ்வாறு பரந்துள்ள அண்ட கோடிகளுள் நிலவுலகம் முழுவதும் ஒரு சிறு மண்டலமாய் நிலவியுளது. இந்த மண்டலத்தில் மனித இனம் கண்டுள்ள கண்டங்கள் மிகவும் சிறிய துண்டங்களே.

எல்லையிலா அண்டத்தில் இவ்வுலகம் ஓரணுவே
எல்லை தெரிக எதிர். (1)
அண்டங்கள் கோடி அவற்றுள்ளே ஓரணுவாய்க்
கண்டங்கள் உள்ளன. காண். (2)

இந்தக் காட்சிகளைக் கண்ணுான்றிக் கருதிக் காணுக.

ஒரு கண்டத்தில் பல தேசங்கள் இருக்கின்றன. குமரி முனை முதல் இமயமலை வரையுள்ள நிலப்பரப்பு இந்தியா என வந்தது. இந்தப் பெயர் முந்திய காலத்தில் இல்லை. இடையே புகுந்தது. முன்னம் பரதகண்டம் என்றே இந்நில மண்டலம் நிலவியிருந்தது. ஆசியாக் கண்டத்தின் தென் பகுதியில் உள்ளது. பதினாறு லட்சம் சதுர மைல் அளவுடையது. அரிய பல நதிகளும், பெரிய மலை வனங்களும் சிறந்த பொருள் வளங்களுமுடைய இந்நில மண்டலம் உலக உருண்டையில் ஓரணுவாய் துணுகியுளது.

ஒரு சின்ன ஊரில் உள்ள ஒருவன் ஆயிரம் ஏக்கர் நிலம் தனக்கு உரிமையாயிருந்தால் தன்னைப் பெரிய செல்வனாக அவன் எண்ணிக் கொள்ளுகின்றான். தன்னுடைய ஊரைப் போல் பல்லாயிரம் ஊர்கள் அந்த ஜில்லாவில் அடங்கியிருக்கின்றன. அத்தகைய நில வட்டங்கள் பல சேர்ந்தது ஒரு மாகாணம்; அவ்வகை மாகாணங்கள் பல கொண்டது ஒரு தேசம். அவ்வாறான தேசங்கள் பல கூடியது ஒரு கண்டம்; அந்தக் கண்டங்கள் பல திரண்டது நிலவுலகம். அப்படி உலகங்கள் பல கொண்டது அண்டம். அந்த நிலையில் உள்ள அண்டங்கள் அளவிடலரியன. இந்த அதிசய நிலையைச் சிறிது சிந்தனை செய்து பார்த்தால் எவனும் தன்னை ஒரு செல்வன் என்று எண்ணிச் செருக்கான். எண்ணிப் பாராமையால் யாண்டும் மதி மருண்டு மண்ணாயிழிகின்றான்.

நேரிசை வெண்பா

எல்லையிலா அண்டத்துள் இவ்வுலகம் ஓர்தூசி;
சொல்லியவத் தூசியிலோர் தூசியாய்ப் - புல்லியுள்ள
உன்னாடும் உன்னூரும் உன்னிலையும் உன்னினால்
என்னாம் அதனைநீ எண்.

உலகப் பரப்பில் உன்னுடைய தேசம் ஒரு தூசி. அந்தத் தூசியுள்ளே உன் நாடு கண்ணுக்குத் தெரியாத சின்னத் தூசியாயுள்ளது; அந்தச் சிறு தூசியுள் உன் ஊர் உளது; அவ்வூருள் உனக்கு நிலம் இருக்கிறது; அதனை நினைந்து நீ தலை செருக்கினால் அது எவ்வளவு மடமை! எத்துணை மதியீனம்! உண்மை நிலைகளை ஓர்ந்து உள்ளம் திருந்துக.

ஒரு பெரிய அரசன், வாருசி என்னும் தவசியைக் கண்டு ஒரு நாள் உரையாடிக் கொண்டிருந்தான். தன்னை மிகுந்த செல்வ வளங்கள் நிறைந்த உயர்க்க திருவுடையவன் என்று அம் மன்னன் எண்ணிக் களித்திருப்பதை உரையால் அத் துறவி உணர்ந்து கொண்டார். உடனே தமது அடர்ந்த தாடியிலிருந்து ஒரு முடியைப் பிடுங்கி எடுத்து :இதன் நுனியைப் பார்!’ என்று அவன் எதிரே நீட்டினார். அவன் பார்த்தான்; யாதும் தெரியாமல் திகைத்தான்.

என் தாடியில் எவ்வளவு மயிர்கள் உள்ளன?” என்று இவர் கேட்டார். எண்ணி அறிய முடியா’’ என்று அம்மன்னன் சொன்னான். இந்த மயிர்கள் போல் எண்ண முடியாத பொருள்கள் உலகில் உள்ளன; உன்னிடம் இருப்பது இந்த ஒரு மயிரின் நுனி அளவினும் சிறியது; இதனை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்’ என்று குறுமுறுவலோடு கூறினார். அரசன் நாணினான். தன் உள்ளச் செருக்கை ஒழித்து ஒழுகும்படி அப்பெரியவர் பரிவோடு விநயமாய்க் கூறியருளினார் என உணர்ந்து வணங்கி உரிமையோடு தொழுது போயினான்.

’கொஞ்சம் நினைந்து கொளல்’ என்றது நெஞ்சம் செருக்கிய பொழுது நினைந்து சிந்திக்க வேண்டிய நிலைகளை உணர்த்தியது. அளவிடலரிய பொருள்கள் உலகில் பரவியிருக்கின்றன. உன்னிடம் உள்ளதைப் பெரிதாக எண்ணி உள்ளம் செருக்காதே. உணர்த்து திருந்துக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Feb-20, 9:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 107

மேலே