தசையழகில் மதிமயங்கும்

அஞ்சாதீர் யார் எவரும் எதைக் கண்டும் இவ்வுலகில்
பதைபதைக்கும் எச்சூழலும் பலங்குன்றச் செய்துவிடும்
எதை ஒன்றையும் அதன் நிலையில் ஒன்றி கவனிப்பின்
பளிங்குப் போன்ற பாதை ஒன்று பாங்குடனே வெளிவருமே

கதை அளக்கும் மானிடரால் களம் காண்பது அரிதே
தசையழகில் மதிமயங்கும் யாவரும் வெறும் பதரே
திசை தோறும் பயணித்தோர் கூறும் சொற்கள் கூரியது
தினந்தினமும் தேடி கண்டு உண்மை அறிவது சிறப்பு

தீயைப் போல தீயச் சொற்கள் தீவிரமாய் பரவும்
தேகத்தினவுக்கு மோகங்கொண்டால் ஆயுளும் குறையும்
ஆளுகின்ற அரசனுக்கு அகில அறிவு வேண்டும்
அறிஞர்கள் கூறும் ஆலோசனைகள் அனுபவத்தால் மாறும்

பணத்தை மட்டும் பயன்படுத்தி பயணப்பட வேண்டாம்
மரணம் என்னும் மாய நிலையை பணமா நின்று மாற்றும்
உணர்வு உள்ள உயிருக்கெல்லாம் ஊறு இன்றி வாழ்ந்தால்
உருளுகின்ற உலகத்தின் உயிர்கள் உன்னை போற்றும்

புணர்ந்ததனால் பிறந்துவிட்ட மடமை மிகுந்தோர் மனிதர்
புவனத்தின் புனிதம் அறியாமல் மரித்து சிதைந்து போவர்
அழகு வாழ்வை மதப்பிரிவால் அவித்து வாழ துணிவர்
ஆறறிவு உள்ளதாக அலம்பல் செய்து துள்ளுவர்

போதைப் பொருளை புகுத்தி உடலில் புதுவுலகு காண்பர்
பொது ஒழுங்குக்கு புதிய ஊறை புயலைப் போல தருவர்
சலித்து எடுத்து சரி செய்யவே எவருக்கும் திராணி இல்லை
சமூகம் என்ற கோர்வையினுள் மனிதம் கோர்க்கப்பட்ட மாலை .
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Feb-20, 9:09 pm)
பார்வை : 64

மேலே