நெறியே செறிவோடு கற்றவன் செருக்குற்றவன் ஆகான் - கல்விச் செருக்கு, தருமதீபிகை 585

நேரிசை வெண்பா

அறிய அறிய அறியாமை தோன்றும்;
நெறியே ஒருவன் நிறையச் - செறிவோடு
கற்றவனே யானால் கடுகளவும் ஓர்செருக்(கு)
உற்றவனே யாகான் உணர். 585

- கல்விச் செருக்கு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கலைகளின் நிலைகளை அறியுந்தோறும் மனிதனுடைய அறிவின் சிறுமை பெருகிக் தோன்றும்; உண்மைகளை நுண்மையாக ஓர்ந்து ஒருவன் நன்கு கற்பானேயானால் கடுகின் அளவு கூடச் செருக்கு அடையமாட்டான், உருக்கமாய் நெடிது வியந்து நிற்பான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அறிவு என்பது உண்மையை உணர்வது ஆகும். மனிதன் இயல்பாகவே அறிவுடையவன். அந்த இயற்கையறிவோடு செயற்கை அறிவு சேர்ந்தபோது அவன் உயர்ச்சி மிகப் பெறுகிறான் கல்வி கேள்விகளாகிய பயிற்சிகளால் வரும் அறிவு முயற்சியாய் ஈட்டிய பொருள் போல் மருவியுள்ளமையால் அது எவ்வழியும் பெருமையாய் இன்பமும் மகிமையும் தருகிறது.

கல்வியறிவு ஊற்று நீர்போல் எல்லையின்றிப் பெருகி வருகிறது. நூல்களை ஆராய்ந்து அறியுந்தோறும். மேலும் மேலும் புதிய புதிய அறிவுகள் அதிசயமாய்த் தோன்றி முன்னைய அறிவு சின்னதாய்க் காணப்படுகின்றது. இன்னவாறே பின்னால் பெருகி வருந்தோறும் முன்னால் மருவியது அறியாமையாய் முடிகிறது.

அறிதோ(று) அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. 1110 புணர்ச்சி மகிழ்தல்

கல்விப் பொருளை அறியுந்தோறும் அறியாமை காணப்படுவது போல் அன்புடைய காதலியைத் தோயும்தோறும் இன்பமும் ஆசையும் புதிது புதிதாய்ப் பொங்கி எழுகின்றன என ஒர் காதலன் இங்ஙனம் ஆராமை மீதூர்ந்து தனது அனுபோக அனுபவத்தை இனிது வெளியிட்டிருக்கிறான். கல்வி அறிவைக் கலவி இன்பத்திற்கு உவமை கூறியிருக்கும்.அழகு உவகை சுரந்து திகழ்கின்றது. போகமும் போதமும் ஏகமாய் அறிய வந்தன. அனுபவ நிலைகள் துணுகி உணர வுரியன.

செறிவோடு கற்றலாவது சாரமான கல்வியை ஆழமாய் ஆராய்ந்து தெளிந்து கொள்ளுதல். அரிய கல்வி ஈட்டம் உரிய நாட்டமாய் ஓர்ந்து கொள்ள வந்தது.

இன்னிசை வெண்பா

கல்வி கரையில! கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்
ஆராய்ந்(து) அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. 135 கல்வி, நாலடியார்

மனிதனுடைய வாழ்நாள் மிகவும் குறுகியது; கல்வி எல்லையின்றி விரிந்துள்ளது. ஆதலால் அன்னப்பறவை நீரை நீக்கிப் பாலைப் பருகுதல் போல் நல்ல நூல்களைச் சாரமாக அவன் விரைந்து கற்றுக் கொள்ள வேண்டும் என இது உணர்த்தியுள்ளது. கலை பயில் இயல்பை இதில் கருதிக் காணுக.

இவ்வாறு கற்ற கல்வியை உயிர்க்கு ஊதியமாய்ச் செய்து கொள்பவர் உத்தமராய் உய்தி பெறுகின்றனர். கல்வியால் பெற்ற அறிவை நல்லவகையில் பண்படுத்தாமல் உலக ஆடம்பரங்களில் செலுத்தி வீண் பெருமை கொண்டு திரியின் அவர் மாண்பயன் இழந்தவராய் மடிந்து படுகின்றார்,

ஆன்ம நலனை அடைவதே அறிவின் மேன்மையான பலனாம். தாயுமானவர் சிறந்த மேதை; வடமொழியிலும் வல்லவர். அவரது கல்வி நிலையும் கருதியுணர்ந்துள்ள உறுதி நலங்களும் உயர்ந்த பண்பாடுகளை உணர்த்தியுள்ளன.

கல்லாத பேர்களே நல்லவர்கள்! நல்லவர்கள்!
கற்றும் அறிவில்லாத என்
கர்மத்தை என் சொல்கேன்! மதியை என் சொல்லுகேன்!
கைவல்ய ஞானநீதி
நல்லோர் உரைக்கிலோ, ‘கர்மம் முக்கியம்’ என்று
நாட்டுவேன்! கர்மம் ஒருவன்
நாட்டினாலோ, பழைய ஞானம் முக்கியம் என்று
நவிலுவேன்! வடமொழியிலே
வல்லான் ஒருத்தன் வரவும், திராவிடத்திலே
வந்ததாக விவகரிப்பேன்!
வல்ல தமிழறிஞர் வரின், அங்ஙனே வடமொழியில்
வசனங்கள் சிறிது புகல்வேன்!
வெல்லாமல் எவரையும் மருட்டிவிட, வகைவந்த
வித்தை என் முத்தி தருமோ?
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர் கணமே, - தாயுமானவர்

இந்த வாக்கு மூலத்தால் அடிகளுடைய புலமை நிலையும் வாழ்க்கை வகையும் ஞான சீலங்களும் நன்கு தெரிய வந்தன. பலகலைகளிலும் தலைமையான புலமை வாய்ந்து அதிசய வாக்கு வன்மையோடு வாழ்ந்து வந்தவர் முடிவில் உலக நிலைகளை வெறுத்து உயர் ஞான சீலராய் உறுதி நலனை அடைந்திருக்கிறார்.

கற்றவன் கல்வியின் பயனை அடையவில்லையானால் கல்லாதவனிலும் அவன் கடையனாவான் என்பதை இங்கே காட்டியருளினார்.

வித்தை முத்தி தருமோ? என்னும் வினா உய்த்துணரத்தக்கது. வித்தை என்பது வெறும் புலமை அறிவு. அது தலைமையான ஞானநிலையை மருவிய பொழுதுதான் அரிய கதிநிலையைக் காணவுரிய தகுதியை அடைகிறது. ஞானம் காணாத வரையும் ஊனம் காணுகிறது.

'ஓதலும் உணர்த்தலும் உணவு சுட்டியே
சாதலும் பிறத்தலும் தவிர்க்க அல்லவே.’ - அஞ்ஞவதை

‘படித்தலும் போதித்தலும் வயிற்றை வளர்க்கவே; பிறவியை நீக்க அல்ல’ என்.று வித்தையாளரை நோக்கித் தத்துவ ராயர் இங்ஙனம் இடித்து உணர்த்தியிருக்கிறார்.

படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய் நீயே
படிப்பித்தாய் அன்றியும் அப்படிப்பில் இச்சை ஒடித்தேன் நான். - அருட்பா

உலகப் படிப்பின் நிலையைக் குறித்து இராமலிங்க சுவாமிகள் இவ்வாறு விளக்கியுள்ளார். உயிர்க்கு உறுதியான உண்மைப் படிப்பே படிக்கவேண்டும் என வடித்துக் காட்டியிருப் பது நுனித்து நோக்கத் தக்கது.

நேரிசை வெண்பா

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா(து)
உலகநூல் ஓதுவ(து) எல்லாங் - கலகல
கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்
போஒந் துணையறிவார் இல். 140 கல்வி, நாலடியார்

பிறவித்துயரம் நீங்கக் கற்பதே கல்வி எனச் சங்கப்புலவர் இங்ஙனம் குறித்திருக்கிறார். உற்ற துன்பங்களை ஒழித்து உயர்ந்த இன்பங்களை அருளுவதே சிறந்த கல்வி எனப்படுகிறது.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

கற்ற கல்வியைக் கதிதரு நெறிகளில் செலுத்தி
உற்ற பேரின்ப உறுதியை அடைந்தவன் உய்ந்தான்;
பெற்ற இப்பெரும் பிறவியின் அறிவுக்குப் பிறவி
அற்று நிற்றலே அல்லதொன்(று) இல்லைகாண் அறியின். - வீரபாண்டியம்

இதன் கருத்தைக் கருத்தில் இருத்தி,. செருக்கு முதலிய சிறுமைகளின்றிச் சிறந்த குறிக்கோளோடு கற்று நிறைந்த நீர்மைகள் புரிந்து விரைந்து உயர்ந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-20, 10:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 72

சிறந்த கட்டுரைகள்

மேலே