அகம்செருக்கி மேலோங்க தீவினையே மண்டிப் பழியாகும் – செல்வத் திமிர், தருமதீபிகை 595

நேரிசை வெண்பா

ஆங்காரத் தீமை அகம்செருக்கி மேலோங்கி
ஈங்கார் எமக்குநிகர் என்னுமால் – பாங்கு
தெரிந்து தெளியாமல் தீவினையே மண்டிப்
பரிந்து சுழலல் பழி. 595

- செல்வத் திமிர், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஆங்காரமாகிய தீமையால் உள்ளம் செருக்கி எமக்கு இங்கு எவரும் நிகரில்லை என்று கர்வம் மீதூர்ந்து, மற்றவரின் அருமை தெரிந்து தெளியாமல் தீய செயல்கள் புரிந்து இழிமடமையாய்க் களிமிகுந்து அலைதல் பழியாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

செல்வச் செருக்கினால் உள்ளத்தில் கிளைத்தெளுகின்ற துடுக்கும், மிடுக்கும், திமிர்வும், நிமிர்வும், தான் பெரியவன் என்று முனைந்து வரும் நெடிய முனைப்பும் ஆங்காரம் என வந்தது.

மனத்தடிப்பு மருள் மண்டி எழுந்த பொழுது மனிதன் இழிந்தவனாய் வளர்ந்து நிற்கிறான். புறத்தில் ஒருவன் விரிந்து தோன்றுகிற தோற்றங்களுக்கெல்லாம் மூலகாரணங்கள் அகத்தில் உறைந்திருக்கின்றன. நினைப்பின் வண்ணமே நிலைகள் நிலவி வருகின்றன. நல்ல எண்ணங்களை உடையவர் நல்லவராகவும், தீய எண்ணங்களை உடையவர் தீயவராகவும் விரிகின்றனர். மேலோர் கீழோர் என்பன குண நீர்மைகளின் மேன்மை கீழ்மைகளாலாயின.

இழி குணங்களோடு பழகினவன் எவ்வழியும் இழிந்து படுகின்றான். செல்வம் கல்வி முதலிய உயர் நலங்களை எய்தியிருந்தாலும் அவன் நிலை யாண்டும் பரிதாபமாய் முடிகின்றது.

மனச்செருக்கு மருண்ட நிலையில் விளைதலால் அதனையுடையவன் இருண்ட பழி வழிகளில் வெருண்டு திரிய நேர்கின்றான். அமைதியும் இன்பமும் அவனை விட்டு விலகி விடுகின்றன. அவலத் துன்பங்கள் அடர்ந்து சூழ்ந்து கொள்ளுகின்றன. செருக்கு என்னும் பேய் வாய்ப்பட்டவன் கொடிய நோய் வாய்ப்பட்டவனாய் நொந்து தவிக்கின்றான்.

ஆங்காரம் என்னுமத யானைவாயில் கரும்பாய்
ஏங்காமல் எந்தையருள் எய்துநாள் எந்நாளோ?

இந்தவாறு தாயுமானவர் கவன்று இறைவனை நோக்கி நொந்து கூறியுள்ளார். யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல் ஆங்காரத்தின் வசப்பட்டு மனிதன் அழிந்து படுகிறான் என்பது இதனால் தெளிந்து கொள்ள வந்தது.

செல்வம் கல்வி முதலிய வசதிகள் வாய்த்தால் உள்ளம் கனிந்து அவற்றை நல்ல வழிகளில் நன்கு பயன்படுத்த வேண்டும்; அவ்வாறு செய்யின் அந்த மனிதன் உயர்ந்த திருவாளனாய்ச் சிறந்த மதிமானாய்ச் சீர் பல பெறுகிறான். அங்ஙனம் செய்யாமல் செருக்கி நின்றால் மதிப்பும் மாண்பும் இழந்து இழிந்து கழிகின்றான்.

தன்னையுடையானைச் சின்னவனாக்கிச் சிறுமை பல செய்யும் அதன் கொடுமை தெரிய ஆங்காரத்தைத் தீமை என்றது. நெஞ்சத் திமிரால் மனிதன் நிலை குலைந்து போகின்றான். புலைப் புன்மைகள் புடை குழ்ந்து மூடிக் கொள்வதால் அவன் கடையனாய் அதோ கதியடைகிறான்.

யான் என்னும் செருக்கு அகங்காரம் ஆகிறது.
எனது என்னும் தருக்கு மமதையாய் வருகிறது.
இந்தத் தொடர்புகளின் வழியே இடர்கள் பெருகுகின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

அகந்தையை அகங்கா ரன்சேர்ந்(து)
..அருமகள் மமதை யோடும்
இகந்தலோ பனையும் பெற்றான்;
..இச்சையை அவனும் வேட்டுத்
தகுந்திறல் இடம்பன் தன்னைத்
..தந்தனன்; இடம்பன் தானும்
மிகுந்தவஞ் சனையைப் புல்லி
..மிகும்அசத் தியனை ஈன்றான். - மெய்ஞ்ஞான விளக்கம்

அமைதி இதம் முதலிய இனிய நீர்மைகள் மனிதனை உயர்த்தி உயர்ந்த இன்ப நலங்களை உதவுகின்றன. ஆங்காரம் முதலியன கொடுமைகளாய் வளர்ந்து நெடிய துயரங்களை விளைக்கின்றன. துன்ப விளைவுகளான தீய தொடர்புகளை ஒழித்துத் தூய நீர்மைகளை அன்புரிமையுடன் வளர்த்துவரின் இருமையும் மகிமைகளாய் இன்ப நலங்கள் பெருகி வருகின்றன.

அகங்காரனுக்கு அகந்தை மனைவி; மமதை மகள், உலோபன் மகன், இச்சை மருமகள், இடம்பன் பேரன்; வஞ்சனை அசத்தியம் முதலிய தீமைகள் எல்லாம் இந்த மரபில் வந்துள்ளன. உருவகங்களாய் மருவியெழுந்துள்ள தீய வருக்கங்களைக் கூர்ந்து நோக்கி நேய நிலைகளை ஓர்ந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Feb-20, 10:21 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே