பச்சைவடம் பாகு சேலை சோமன்

'பச்சைவடம், பாகு, சேலை, சோமன் என்னும் சொற்கள் அமைய ஒரு வெண்பாவைச் சொல்லுக' என்றார் மற்றொரு புலவர்.

நேரிசை வெண்பா

மாயன் துயின்றதுவும் மாமலராள் சொல்லதுவும்
ஏய குருந்திற்கொண் டேறியதும் - தூயை
இடப்பாகன் சென்னியின்மேல் ஏறியதும் பச்சை
வடப்பாகு சேலைசோ மன். 38

– கவி காளமேகம்

என்று காளமேகம் பாடினார்.

பொருளுரை:

மாயையால் பற்றப்படாதவனாகிய திருமால் மகா பிரளய காலத்திலே கண் வளர்ந்ததுவும், சிறந்த தாமரை மலரிலே இருப்பவளான திருமகளின் சொல்லாகிய அதுவும், கண்ணன் கோபியரிடத்தில் கவர்ந்து கொண்டு குருந்த மரத்தின் மேல் ஏறிக்கொண்ட அதுவும், பரிசுத்த சக்தியாகிய உமையை இடப்பாகத்தே கொண்டிருப்பவனான சிவபெருமானின் திருமுடியின் மேலாக ஏறிக் கொண்டிருப்பதுவும் முறையே பச்சை நிறமுள்ள ஆலிலையும், வெல்லப்பாகும், சேலையும், சந்திரனும் ஆகும்.

தூயை - சக்தி; உமையம்மை. வடம் - ஆலிலை. பாகு - வெல்லப்பாகு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Feb-20, 3:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

மேலே