ரா ம ரா மா கோவிந்தா

'ஒரு விகடன் அழகான ஒரு பெண்ணைப் பார்த்தான்; வியப்புடன் நிற்கின்றான். "ராம ராமா! கோவிந்தா வேங்கடவா! நாராயணா' என்று இடையிடையே கூறிய வண்ணம் அவள் அழகை வியந்தும் கூறுகின்றான். அவன் கூற்றாக, மேற்கண்ட குறிப்புப் பொருந்த ஒரு வெண்பாச் சொல்லுக என்றார் ஒரு புலவர்.

நேரிசை வெண்பா

இந்தோ திலகநுதல் ராமரா மாவனசக்
கொந்தோ களபமுலை கோவிந்தா – சந்தமுறும்
வேலோ இணைவிழிகள் வேங்கடவா நல்லவயி
றாலோகா ணாரா யணா. 39

– கவி காளமேகம்

பொருளுரை:

ராமராமா! இந்தப் பெண்ணுக்கு இந்தத் திலகம் விளங்கும் நெற்றிதான் பிறைச்சந்திரனோ? கோவிந்தா! இந்தப் பெண்ணுக்கு கலவைச் சாந்தம் அணிந்த தனங்கள் தாம் தாமரை முகைகளோ? வேங்கடவா! இந்தப் பெண்ணுக்கு இரு விழிகளும் அழகு மிகுந்த வேல்கள் தாமோ? நாராயணா! இந்தப் பெண்ணுக்கு நல்ல வயிறு ஆலிலைதானோ?

காண், அசை, இந்து நிலவு நெற்றிக்கு உவமை கூறப் பெற்றதனாலே 'பிறை நிலவு என்று பொருள் உரைக்கப் பெற்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Feb-20, 8:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே