யாராவாகிப் போனாள்

பாா்த்து - பேசி - பழகிய முகமொன்று -
என்னை நோக்கி என்னருகே வந்தது..
நீங்கள்.. யாரென்று நான் யோசித்தபோதே
அவள் பேசத் தொடங்கினாள் - நான்
உன் தோழனாய் இருந்தவன் - இன்று
உன்முன் தோழியாய் நிற்கிறேன் என்றாள்..
ஏன் இந்த திருநங்கை கோலமென்றேன்..?
இது இறைவன் தந்த கோலம்
நாளாக.. நாளாக.. மாற்றம் கண்டன
என் உணர்வுகள் பெண்தன்மை கொண்டன;
ஆண்-பெண் சமத்துவத்தை - இறைவன்
அகிலத்தில் வைப்பதற்கு பதில் - மறந்தாற்போல
எங்கள் தேகத்துக்குள்ளே வைத்துவிட்டாா்போல;
எல்லோரும் கடவுளின் படைப்பு என்றுரைத்துவிட்டு
எங்களைப் பாவத்தின் படைப்பாய் பாா்ப்பதேனோ..?
எங்கள் குடும்பமும்  உறவும் - ஏன்
எங்கள் உயிரான சில நட்பும்கூட
அருவருப்பாய் பாா்த்தன ; வெறுத்தன- 
நாங்கள் தொட்டு ஆசிர்வதித்தால்
நலம்பெருகும் என்றுரைக்கும் சமூகம் -
எங்களை ஒருபோதும் ஆசிர்வதிப்பதில்லை-
நாங்கள் வேண்டுமென்றே - யாருக்கும்
தொல்லைகளை கொடுப்பதில்லை - எங்களுக்கு
தோள் கொடுக்கும் உறவுகள் இல்லை -
தேள்போல் கொட்டும் உறவுகளே அதிகமுண்டு -
இறுதியாய் கண்ணிர்மல்க  என்னிடம் கேட்டாள்
என் குடும்பம் நலமா என்று...?
நலம்தான் என்றுரைத்து - அவளுக்கு
நம்பிக்கையான வாா்த்தைகளையும் கூறிவிட்டு -
அவ்விடமிருந்து  அவளிடத்தே விடைப்பெற்றேன்;
இன்றும் அவளது  வாழ்க்கையொரு....
விடையறியா வினாத்தாள் தான்.....?
இன்று  - அவள் குடும்பத்திற்கே
அவள் யாராவாகிப் போனாள்...!

- கவிஞர். நளினி விநாயகமூர்த்தி

( தினமணி - கவிதைமணியில் "யாராவாகிப் போனாள்" எனும் தலைப்பில் வெளியான என்னுடைய படைப்பு இது )

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (24-Feb-20, 10:01 am)
பார்வை : 132

மேலே