பட்டமரமாய் காயும் மனது

பட்டமரமாய் காயும் பாழ்மனது
பட்டவுடன் உன்பெயர் கண்ணில் துளிர்க்கிறது....
வெட்டவெளி ஏகாந்தத் தனிமையில் உன்முகம் தோன்றி
திட்ட மிட்டு சதிசெய்தே எனை கொல்கிறது
சொட்டச் சொட்ட நனைந்தயென் நினைவுகள் நீ
விட்ட இடத்திலேயே நிற்கிறது...

சட்டென எங்கிருந்தோ வரும் உன் குரல்வளை அதிர்வால்
கட்டவிழ்ந்த கன்றாய் துள்ளி ஓடி மனம்
நட்டநடு வீதியில் உன்மத்தமாய் திரிய
எட்ட நின்று கைகட்டி வேடிக்கை. பார்க்கிறாய்....

வட்டமிட்டு அங்கும் இங்குமாய் மோதி
விட்டத்தில் தொங்கிடும் வௌவாலாய்
ஒட்டவரும் சமிஞ்சைக்காய் காத்திருக்கிறேன்
விட்டகுறை தொட்ட குறை யாவும் தீர்த்திட
சுட்டுவிரல் காட்டி ஆணையிட்டே அழைத்திடு
மொட்டவிழ்ந்த மலராய் கட்டியெனை அணைத்திடு !

எழுதியவர் : வை.அமுதா (24-Feb-20, 8:52 pm)
பார்வை : 58

மேலே