திடீர் நாடகம்

திடீர் நாடகம்....

அப்போது (1986)நான் திருவல்லிக்கேணியிலுள்ள N.K.T. திருமலாச்சாரியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் B.ed படித்துக் கொண்டிருந்தேன் .....
இரண்டு நாளில் அரசு சார்பாக ஒரு புத்தக வெளியீட்டுவிழா.... தலைமை தாங்குவது அன்றைய கல்வி அமைச்சர் திரு.அரங்கநாயகம் அவர்கள்.... விழாவிற்கு பல வெளிநாட்டவர் , குறிப்பாக ஜப்பானைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்துக் கொள்ள இருக்கும் விழா..... பொதுமக்கள் அழைக்கப்படாத... ஒரு குறிப்பிட்ட அழைப்பாளிகள் மட்டுமே கலந்துகொள்ள இருந்த ஒரு சிறிய அரங்கத்தினுள் நடக்கவிருக்கும் விழா..... எங்கள் கல்லூரி சார்பில் ஒரு நாடகம் போட வேண்டும் என்று வேண்டுகோள் வர.... எங்கள் கல்லூரி முதல்வர் ஒருநாளைக்கு முன்பு இதைப்பற்றி எங்கள் வகுப்பறையில் அறிவித்தார்.... இடையில் ஒரு நாள் தான் உள்ளது..... அதற்குள் ஒரு சிறு நாடகம் எழுதி நடித்து ஒத்திகையும் பார்த்து ,அதற்கான ஆடைகள் எல்லாம் வாடகைக்கு எடுத்து ... அடுத்தநாள் அந்தவிழாவில் நாடகத்தை அரங்கேற்ற வேண்டும்......நாடகம் கல்வித்துறையை சார்ந்த கருத்தை கொண்டிருக்க வேண்டும்.....பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது..... அன்று மாலையே ஒரு நாடகம் எழுதினேன்.... நாடகத்திற்கு தலைப்பு “பரவட்டும் கல்விச்சுடர்”....

ஒரு சிறு குடும்பம்.... குடும்பத் தலைவன் தலைவி இருவரும் நன்றாகப் படித்து அரசாங்கத்தில் நல்ல பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் .... இரு குழந்தைகள் ... இருவரையும் நகரத்தில் உள்ள பிரபலப் பள்ளியில் கல்விப் பயின்று வருகிறார்கள் ..... அவர்கள் வீட்டுப் பணிப் பெண்( நாடகத்தின் நாயகி அவளே) பட்டிக் காட்டில் இருந்து சென்னைக்கு வந்த படிக்காத கைநாட்டு .... இவ்வளவு தான் முக்கிய கதாபாத்திரங்கள்..... குடும்பத் தலைவன் மனைவிக்கு அடங்கி ஒடுங்கி நடக்கும் பயந்த சுவாபம் .... தலைவி அடக்கி ஒடுக்கி ஆளும் பெண்மணி..... பொதுச்சேவை என்றபெயரில் சமுதாயத்தில் விளம்பரம் தேடிக் கொள்பவர்... கல்வி வளர்ச்சிக்காய் நாளும் உழைப்பதாய் மேடையில் முழங்கி கரகோசம் பெறுபவள்....

பொறுப்பற்றப் பிள்ளைகள் ..... பணிப்பெண்ணோ.....உண்மையாய் உழைக்கும் அந்தக் குடும்பத்துடன் பற்றுடன் ஒன்றிப்போனவள்......அவளுக்கென்று கிராமத்தில் இருந்த பூர்வீக நிலம் ஏலத்திற்கு வந்துள்ள செய்தியை தாங்கி வந்த மடலை.... படிக்கத் தெரியாததால் , வீட்டில் உள்ள அனைவரிடமும் வாசித்துக் காட்ட கெஞ்ச... அனைவரும் அவரவர்கள் வேலையில் அதை மறுக்க.... காலம் கடந்துவிட்டதால் நிலம் ஏலம் விடப்பட்டச் செய்தியை அவள் பின்னர் அறிய.... கடைசியாய் அவள் அழுது புலம்பும் காட்சிதான் க்ளைமேக்ஸ்.....வீட்டில் உள்ள அனைவரும் தவறை உணர்ந்து.... கல்லாத ஏழைகளுக்கு எழுதப் படிக்க கற்றுத்தர வேண்டும் என்ற சூளுரை எடுத்துக்கொள்ள , பின்னணிக் குரலாய் பாரதியின் வரிகள் ஒலிக்க..... “பரவட்டும் கல்விச்சுடர்” என்ற எதிரொலிப்போடு நாடகம் முடியும்.....(நாடகத்திற்கு என்று பிரத்யேகமாக எந்த ஆடையும் வாடகைக்கு எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது)

அடங்கி நடக்கும் கணவனாக அமைதியான என்தோழி செல்விப்பாண்டியும்.... அடக்கி ஆளும் டாம்பீக திமிர் பிடித்த மனைவியாய் நானும் , செய்யாறிலிருந்து வந்து கல்லூரி விடுதியில் தங் கிப் படித்துக் கொண்டிருந்த சகோதரி தேன்மொழி பணிப்பெண்ணாகவும் நடித்தோம்..... ஏற்கெனவே கல்லூரியில் திமிர் பிடித்தவள் என்றப் பெயர் எனக்கு நிலவியதால் ,இயல்பாகவே அந்தக் கதாப்பாத்திரத்திற்கு கனக்கச்சிதமாய் நான் பொறுந்திவிட்டேன். பணிப்பெண்ணாக நடித்த சகோதரி தேன்மொழி என்னைவிட மிகவும் வயதில் பெரியவர்.....,,இருந்தாலும் என்னிடம் தணிந்துதான் பேசுவார்..... நான் எழுதிக் கொடுத்த வசனத்திற்கு உயிரூட்டம் கொடுத்தவர் அவர்தான்..... மேடையில் தன்னை மறந்து நடித்தார் என்று சொல்வதைவிட, அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என்றே சொல்லவேண்டும் .... கடைசி காட்சியில் தனக்கு இருந்த அந்த ஒரேவொரு பூர்வீக நிலமும் பரிபோனதை உணர்வு பூர்வமாக அப்படியே உணர்ந்து நடித்து அனைவர் கண்களிலும் கண்ணீர் வரவைத்துவிட்டார்.... அவர் அடிவயிற்றில் அடித்து அழுதக் காட்சியை பார்த்து.... அதே மேடையில் ஒரு கதாபாத்திரமாக நின்று கொண்டிருந்த நானே கண்கலங்கிவிட்டேன்.... கல்வி அமைச்சர் நாடகத்தை வெகுவாகப் பாராட்டினார்.... கல்லூரி முதல்வர் என்னையும் மொத்த நாடகக் குழுவையும் மிகவும் பாராட்டினார் ......

அதன்பின் கல்லூரி ஆண்டுவிழாவானாலும் சரி.... சிறிய ஏதாவது பயிற்சியிடை விழாவாக இருந்தாலும் சரி.... அடியேனின் நாடகம் தான்.... கதை வசனம் இயக்கம் ஆடை அலங்காரம் அத்தனையும் நானே.....

எழுதியவர் : வை.அமுதா (24-Feb-20, 8:56 pm)
Tanglish : thideer naadakam
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே