வித்தை சிறிதாயின் வீண்செருக்கு மேற்கொள்ளும் - கல்விச் செருக்கு, தருமதீபிகை 586

நேரிசை வெண்பா

வித்தை சிறிதாயின் வீண்செருக்கு மேற்கொள்ளும்;
புத்திமிகின் அச்செருக்கு போயொழியும்; - தத்துமொளி
தேயின் இருள்சேரும்; தேறி ஒளிமீறின்
மாயும் உடனே மறைந்து. 586

- கல்விச் செருக்கு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வித்தை சிறிதாய பொழுது வீணச் செருக்குப் பெரிதாய் எழுகின்றது. நல்ல புத்தி மிகுந்துவரின் பொல்லாச் செருக்குப் போயொழிகின்றது. ஒளி குறைய இருள் நிறைகின்றது; அது தெளிவாய் ஒளி வீசி எழின், இருள் அடியோடு ஒழிந்து போகின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடலில் மனத்தருக்கு மருள் எனப்பட்டது.

உள்ளத்தின் பண்பாடுகளுக்குத் தக்கபடியே மனிதன் உயர்ந்து விளங்குகிறான். குண நீர்மைகளால் மேன்மைகள் விளைகின்றன. குற்றத் தீமைகளால் கீழ்மைகள் வருகின்றன.

அறிவு நல்லது; உயர்ந்தது. செருக்கு பொல்லாதது; இழிந்தது. மாறுபாடுடைய இந்த இரண்டும் ஒருங்கே கூடி யிராது.

கல்வியறிவு வித்தை என வந்தது. இது வடமொழிச் சொல். வித் என்றால் அறிதல் என்பது பொருள். பல நூல்களையும் படித்திருக்கிறோம்; பெரிய பண்டிதன், அரிய புலவன்; தேர்ந்த வித்துவான் என இன்னவாறான தடிப்புகளும் முனைப்புகளும் கற்றவன் உள்ளத்தில் கிளைத்து எழுகின்றன. புலமை வீறு, கல்விச் செருக்கு, வித்தியா கருவம் என வழங்கப்படுதலால் கல்வியறிவில் பெருமித நிலைகள் பெருகியுள்ளமை அறியலாகும்.

கலையறிவில் விளைந்து வருகிற தலைமையுணர்வு தகுதியும் பெருந்தன்மையும் தழுவிவரின், அது பெருமிதம், கம்பீரம், வீறு, வீரம் என்னும் பெயர்களால் உயர் மகிமை பெறுகின்றது.

தகுதியின்றிச் சிறுமையும் பிலுக்கும் மருவிவரின் அது செருக்கு, கருவம், மமதை என இழிக்கப் படுகின்றது.

கம்பீரம் உயர்ந்த தன்மையுடையது; அது அழகும் ஆண்மையும் அமைந்தது; அதனை எவரும் புகழ்ந்து போற்றுவர்.

செருக்கு இழிந்த புன்மையது; இது இழிவும் கீழ்மையும் இயைந்தது; இதனை யாவரும் இகழ்ந்து தூற்றுவர்.

சிறிய நிலைமையில் இருந்து கொண்டே பெரிய தலைமையாய்ப் பிலுக்கி வருவது செருக்காதலால் அது எங்கும் வெறுக்கப் படுகிறது. பொல்லாத தருக்கு புலை ஆகின்றது.

வித்தை சுருங்கிய இடத்தில் வீண் செருக்கு விரிந்து நிற்கிறது. கல்வியறிவு நிறைந்திருந்தால் அங்கே பெருந்தன்மை சுரந்திருக்கிறது. அமைதி அரிய நீர்மையாய் மகிமையுறுகின்றது.

'குறை குடம் கூத்தாடும்; நிறை குடம் நீர் தளும்பாது’ என்னும் பழமொழி சிறிய கல்வியாரது சிலுசிலுப்பையும், பெரிய அறிவாளிகளது அடக்கத்தையும் குறிப்பாக விளக்கியுள்ளது.

கலிநிலைத் துறை
(மா விளம் விளம் விளம் மா)

மறையின் அந்தமும் தொடாததாள் நிலம்தொட வந்த
நிறைப ரஞ்சுடர் நிராமய நிருத்தற்குப் பிழைத்தேன்;
சிறிய கேள்வியோர் கழியவும் செருக்குடை யோரென்(று)
அறிஞர் கூறிய பழஞ்சொலென் அளவிற்றே அம்ம! - திருவிளையாடல்

இறைவனோடு எதிர்த்து வாதாடிய நக்கீரர் பின்பு உறுதியுண்மை தெரிந்து இங்ஙனம் பரிந்து இரங்கியிருக்கிறார். ’சிறிய கேள்வியர் கழியவும் செருக்குவர்’ என்றது பண்டைப் பழமொழி வாசகமாய் ஈண்டு வெளிவந்துள்ளது.

நிறைந்த கல்வியும் விரிந்த கேள்வியுமுடையவர் பரந்த நோக்கமுடையவராய் அடங்கி இருக்கின்றார், குறைந்த படிப்பாளர் மிகுந்த செருக்குடையராய் நிமிர்ந்து திரிகின்றார்.

உலகிலுள்ள கலைகளையும், உறுதியுண்மைகளையும் உணர்ந்து கொள்ளாமையால் புல்லறிவாளர் உள்ளஞ் செருக்கி எள்ளல் இழிவுகள் புரிந்து துள்ளி உழல்கின்றார்.

நேரிசை வெண்பா

சிற்றறிவோர் தம்மைச் செருக்கெனும்பேய் பற்றிநின்று
முற்றறிவேம் என்று மொழிவிக்கும்; - மற்றவரை
எள்ளி மதியா(து) இகழ்வித்(து) இழிநிலைக்கே
தள்ளுமவர் என்செய்வார் தாம். – கவிராஜ பண்டிதர்

சின்ன அறிவினர் செயல் இன்னவாறு இரங்கி வருந்தும்படி இழிந்து வளர்ந்துள்ளது. செருக்கு என்னும் பேய் வாய்ப்பட்டுச் சிற்றறிவாளர் சீரழிந்து படுகின்றார். துடுக்காய்த் துயர் தருதல் கருதி செருக்கைப் பேய் என்றது. அடக்கம் தெய்வத் தன்மையாய் இன்பம் அருளுகிறது. செருக்கு பேய்த் தன்மையாய்த் துன்பம் புரிகிறது.

செருக்கு உன் உள்ளம் புகின் நீ பேய் வாய்ப் புகுந்தவனாய் நோய்வாய்ப் படுகின்றாய்! எனத் தன் பிள்ளைக்கு ஓர் தந்தை அறிவூட்டியுள்ளது இங்கே அறிய வுரியது.

புல்லிய கல்வியர் புலை நிலையில் இழிந்து பொல்லாங்கு புரிதலால் யாதும் கல்லாதவரினும் அவர் பொல்லாதவராகின்றார்.

A little learning is a dangerous thing. - Pope

அற்பக் கல்வி ஆபத்துடையது” என போப் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்ஙனம் கூறியிருக்கிறார்,

சிறிது கற்றவர் வீண் பெருமை கொண்டு மேட்டிமை புரிதலால் அவர் யாண்டும் அபாயமுடையராய் அவமதிக்கப் படுகின்றார். சின்னப் புத்தி இன்னல் நிலையமாகிறது.

’ஒளி தேயின் இருள் சேரும்’ என்றது அறிவு மங்கிய பொழுது அகந்தை பொங்கி எழுந்து கவிந்து கொள்ளும் என்பதை உணர்ந்து கொள்ள வந்தது. இருள் சேராதபடி தெருள் சேர்ந்து உயர்க.

செருக்கு மடமை மயக்கங்களால் எழுதலால் அது இருள் என நேர்ந்தது. ஒளி புகுந்த பொழுது இருள் ஒழிந்து போதல் போல், நல்ல அறிவு எழுந்த போது செருக்கு அழிந்து போகிறது.

இனிய கல்வி இன்னாச் செருக்காய் எழுந்தது; ஏனென்றால், சேர்ந்த இனத்தின் தீமையால் விளைந்தது. நல்லவர் கற்ற கல்வி இனிமை சுரந்து நன்மையாய் வருகிறது; தீயவர் கற்றது கொடுமை நிறைந்து தீமையாய் விரிகிறது.

நேரிசை வெண்பா

பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட
தேம்படு தெண்ணீர் அமுதமாம் - ஓம்பற்(கு)
ஒளியாம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற்
களியாம் கடையாயார் மாட்டு. அறநெறிச்சாரம்

பசு அருந்திய நீர் பாலாய் வருகிறது; பாம்பு குடித்த நீர் நஞ்சாய் மாறுகிறது. உயர்ந்தோர் பயின்ற கல்வி ஞானமாய் ஒளி விசி உயர்கின்றது; இழிந்தோர் பயின்றது களி செருக்காய் இழிவுறுகின்றது என முனைப்பாடியார் இங்வனம் பாடியிருக்கிறார். மருண்ட மயக்கம் இருண்ட இயக்கமாகின்றது

தெருண்ட மேலவர் நல்ல நீர்மையோடு அடங்கியிருக்கின்றார்.
மருண்ட கீழவர் பொல்லாச் செருக்கராய்ப் பொங்கி நிற்கிறார்.

செருக்கு சின்னத்தனமானது; அதனையுடையவர் சிறியராய் இழிகின்றார், அந்தச் சிறுமையை மருவிச் சீரழியாதே; எவ்வழியும் பெரிய நீர்மைகளை உரிமையோடு பேணி ஒழுகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நேரிசை வெண்பா

சின்ன இயல்பே செருக்காய் எழுதலால்
அன்ன மயலை அறிந்துமே - மன்னிய
மேலான நீர்மையை மேவி ஒழுகினுன்
பாலாகும் மேன்மை படிந்து.

இதனை நெஞ்சில் நினைத்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Feb-20, 4:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

சிறந்த கட்டுரைகள்

மேலே