என்னுள்ளே

என்னுள்ளே என்னுள்ளே
ஏக்கங்கள் பலநூறு
ஏக்கங்கள் தீர்ந்திடவே
எழுதுகிறேன் கதை நூறு

பார்ப்பவர் கண்களுக்கு
பாவைநான் மின்மினியே
ஆனாலும் இருளினிலே
அழுகின்றேன் கண்மணியே

பேதையாய் பிறந்ததனால்
இழந்தவைகள் ஏராளம்
அழக்கொண்ட வெல்லாம்
அழுதுவிட்டேன் தாராளம்

இழப்பதற்கு இனிமேலும்
காலமில்லை என்னிடமே
இருந்தாலும் இழந்திடும்
எண்ணமில்லை வரும்நாளில்

பொறுத்தது போதுமென
மனதினில் திடமானேன்
மங்கையிடம் மதியில்லை
என்றவர்க்கு கிலியானேன்

மற்றவர்க்காய் வாழ்ந்தது
போதுமென்ற நினைப்பினிலே
எனக்காய் வாழவேனும்
என்றெண்ணுதே பேதைமனம்...

காலையில் மலர்த்தோட்டம்
காணவேணும் நாளும்
நாள்முழுதும் என்தோட்டம்
பேணவேணும் நானும்

நினைத்தப் பொழுதினிலே
தூங்கவேணும் நானும்
நிறைவான வாழ்வினையே
காணவேணும் நாளும்

அன்பதனை அள்ளியே
தரவேணும் நாளும்
அழகழகாய் உயிரினங்கள்
வளர்க்கவேணும் நானும்

சுயநலமாய் வாழ்பவரை
ஒதுக்க வேணும் நானும்
சொல்லாடல் செய்பவரை
செதுக்கவேணும் நாளும்

பொய்யுரைப்போர் அருகாமை
அகற்றவேணும் நானும்
போதும்மனம் கொண்டவரை
வாழ்த்தவேணும் நாளும்

பணம்மட்டும் மதிப்போரை
மறக்கவேணும் நானும்
மனம் மட்டும் காண்போரை
மதிக்கவேணும் நாளும்

நட்புக்குத் துணையாக
இருக்கவேணும் நானும்
நல்லோர்த் துணைகொண்டு
வாழவேணும் நாளும்

புத்தகங்கள் வாசித்து
கழிக்கவேணும் நாளும்
புதுமைகளை நாடிநிதம்
கற்கவேணும் நானும்

சுதந்திரமாய் இவ்வுலகில்
சுழலவேணும் நானும்
சுகமான வாழ்வதனை
சுவைக்கவேணும் நாளும்

எழுதியவர் : திருமகள் (26-Feb-20, 10:08 pm)
சேர்த்தது : திருமகள்
Tanglish : ennulle
பார்வை : 121

மேலே