மடமை இருளில் மனச் செருக்கென்னும் நெடியபேய் – செல்வத் திமிர், தருமதீபிகை 596

நேரிசை வெண்பா

மடமை இருளில் மனச்செருக்(கு) என்னும்
நெடியபேய் நின்று நிமிர்ந்து – கொடிய
பழியுரைகள் ஆடியே பல்லுயிரும் அஞ்ச
அழிதுயர்கள் செய்யும் அடர்ந்து. 596

- செல்வத் திமிர், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனச்செருக்கு என்னும் பெரும் பேய் மடமையிருளில் தலை நிமிர்ந்து திரிந்து பலரையும் இகழ்ந்து பழிமொழிகள் சொல்லிப் பல உயிரினங்களும் அஞ்ச அழிதுயர்கள் செய்யும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அறிவு இனிய ஒளியாய் நின்று பல அரிய உறுதி நலங்களை மனிதனுக்கு அருளி வருகின்றது. அந்த அறிவு ஒளி குறைந்த பொழுது, வாழ்வில் இருள் சூழ்ந்து மருள்கள் பல மண்டி மனித வாழ்வு பாழ்படுகின்றது.

அறிய வேண்டியதை அறியாமல் இருப்பது அறியாமையில் முடிந்து கொடிய அவலங்கள் விளைகின்றன, உண்மை நெறிகளை உணராமல் புன்மை படிந்து உழலும் புலைநிலை கருதி மடமையை இருள் எனப்பட்டது. அஞ்ஞானம், மூடம், அறிவின்மை, பேதைமை என்பன எல்லாம் ஆன்ம வுரிமைகளை இழந்து நிற்கும் இழிவுகளை விளக்கி நிற்கின்றன.

உணர்வின் அளவே உயர்வு விளைந்து வருகிறது. குண நீர்மைகளால் மனிதன் மகிமை பெற்று வருகிறான். மனச் செருக்கு குணக்கேடு ஆதலால் அதனை யுடையவன் இழிக்கப் படுகிறான். இழிவும் உயர்வும் வெளியிலிருந்து வருவன வல்ல. மனிதனுடைய செயல் இயல்களால் அவை மருவி நிற்கின்றன. நல்ல தன்மையால் எல்லா நன்மைகளுமாகின்றன.

பண்பு படிந்த மனிதன் இன்பநிலையில் உயர்ந்து வருகிறான். அது படியாதவன் துன்ப நிலையால் இழிந்து நிற்கின்றான்.

எவ்வளவு செல்வங்கள் எய்தியிருந்தாலும் மேலோர் அமைதியாக அடங்கியிருப்பர். சிறிது கிடைத்தாலும் கீழோர் செருக்கு மிகுந்து நிற்கின்றார்,

நேரிசை வெண்பா

சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேற் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும். 346 கீழ்மை, நாலடியார்

மேன்மக்களுடைய நிலையையும், கீழ்மக்களது இயல்பையும் இப்பாடல் விளக்குகிறது. உலகமுழுதும் ஆளும்படியான அரச செல்வம் பெற்றாலும் மேலோர் அமைதியாக இருப்பர்; சிறிது பொருட் கிடைத்தாலும் கீழோர் களி மிகுந்து தருக்கித் திரிவர்.

இன்னிசை வெண்பா

வெள்ளென்பு பெற்றநாய் துண்ட விடக்குறின்
கொள்ளு நனிகளி கோடியும் வேண்டுமோ
உள்ளதுடன் இம்மி மிகினும் உறுபகீழ்
வெள்ளத் தனைய வியப்பு. 182 கீழோரியல்பு, இன்னிசை இருநூறு, அரசஞ் சண்முகனார்

எலும்பைக் கடித்துக் கொண்டிருந்த நாய்க்கு சிறு கறித்துண்டு கிடைத்தது போல், கீழ்மக்கள் சிறிது பொருள் கிடைத்தாலும் பெரிதும் களித்து நிற்பர் எனக் கீழின் இழிநிலையை நாய் உவமை தெளிவாய் விளக்குகிறது.

நல்ல அறிவையும், பண்பையும் இழந்த போது மனிதன் இழிந்து படுகிறான். எவ்வளவு அறிவற்றவனானாலும் பொருள் வந்தால் பெரிய மனிதனாக ஆரவாரமாகத் திரிகிறான். இருள் மண்டியுள்ள மருளனையும் பொருள் பெருமைப்படுத்தி விடுகிறது.

Fortune favours the fools.

'செல்வம் மூடரை மேன்மைப் படுத்துகிறது’ என்னும் இது இங்கே அறியவுரியது. அறிவிலிகளை எந்த நாடும் அவமதிக்கிறது. அவர் செல்வம் பெற்றிருந்தாலும் புல்லியராகவே கருதப்படுகின்றார். அவரது புலை நாற்றம் நிலை மீறி வெளி வருதலால் எவரும் இளிவாகவே அவரை எண்ணி ஒதுங்குகின்றனர்.

நேரிசை வெண்பா

கிளர்ந்த பொருள்களால் கீழோர் உயர்ந்து
வளர்ந்து வரினும் வழுவை - அளந்துலகம்
கண்டு தெளியக் களிப்பும் செருக்குமே
விண்டு விளக்கும் விரைந்து

தமது இளி நிலைகளைக் களி செருக்கால் வெளியறியக் கீழோர் விளக்கி விடுவர் என இது விளக்கியுள்ளது. ’செருக்கு என்னும் நெடிய பேய்’ என்றது அதன் கொடிய தீமை தெரிய வந்தது.

இருள் நிறைந்த இரவிலேதான் பேய் வெளியேறி வெந்துயர் செய்யும். மடமை நிறைந்த இடத்திலேதான் செருக்கு நெடிது ஓங்கி நிமிர்ந்து கொடுமைகள் புரியும். அறிவொளி பரவிய பொழுது அது அகன்று போய் விடும். செருக்கித் திரிவது அறிவு கெட்ட மூடர் இயல்பாம் என்பது பெறப்பட்டது

நேரிசை வெண்பா

அறியாமை யோ(டு)இளமை ஆவதாம்; ஆங்கே,
செறியப் பெறுவதாம் செல்வம்; - சிறிய
பிறைபெற்ற வாணுதலாய்! தானேஆ டும்பேய்,
பறைபெற்றால் ஆடாதோ, பாய்ந்து?

- பழமொழி நானூறு - மிகைப் பாடல், புறத்திரட்டு-1139

அறிவில்லாதவனிடம் பொருள் சேர்ந்தால் பறை அடிக்கப் பேயாடுவது போல் அவன் களிப்பு மிகுந்து தருக்கித் திரிவான் என இப்பாடல் உணர்த்துகிறது. மடமையும், சிறுமையும் மறுவியுள்ள இடத்தில் செருக்கு பெருகி நிற்கும் என்றதனால் அதன் இருப்பும் இயல்பும் அறிய வருகிறது. செருக்குடையார் சிறியர் என இளிக்கப்படுவதால், அந்த இளிவு நிலை ஏறாமல் இனியனாய் ஒழுகி எவ்வழியும் விழுமியனாக வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Feb-20, 10:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 73

சிறந்த கட்டுரைகள்

மேலே