பாம்புக்கும் எள்ளுக்கும்

நேரிசை வெண்பா

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளனவே யோது. 51

- கவி காளமேகம்

பொருளுரை:

பாம்பு:

படமெடுத்து ஆடியபின் குடத்திலே சென்று அடைந்திருக்கும்; ஆடுகின்ற போதிலேயே சீத்துப் பூத்தென்று இரைச்சலிடும்; குடத்தை மூடித் திறந்தால் தன் தலையை வெளியே உயர்த்தி முகத்தைக் காட்டும்; விரைந்து அதன் தலையைப் பற்றிக் கொண்டாற் பரபரென்று சுற்றிக் கொள்ளும்; பார்த்தால் பிளவு பட்ட நாக்கும் அதற்கு உண்டாயிருக்கும்.

எள்:

செக்கிலே ஆடி எண்ணெயாகிக் குடத்திலே அடைந்திருக்கும்; செக்கிலே ஆடும் பொழுதிலேயே இரைச்சல் செய்யும்; குடத்து எண்ணெயை மூடி வைத்திருந்து பின் திறந்து பார்த்தால் பார்ப்பவரின் முகத்தைத் தெளிவாகக் காட்டும்; விரைய மண்டை யிலே தேய்த்துக் கொண்டால் பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக் கும்; பார்த்தால் எள்ளிலிருந்து பிண்ணாக்கும் அதனிடத்தே உண்டாகும்.

இதனால், அடைந்திடும் பாம்பும் எள்ளும் சமமாகும் என்று சொல்லுக என்கிறார் கவி காளமேகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Mar-20, 12:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே