வானவில் விஷ்ணு வெற்றிலை

நேரிசை வெண்பா

நீரி லுளதா னிறம்பச்சை யாற்றிருவால்
பாரிற் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனுப்
பல்வினையை மாற்றுதலால் பாரீர் பெருவான
வில்விண்டு நேர்வெற் றிலை. 67

- கவி காளமேகம்

பொருளுரை:

பெரிதான வானவில்லும் விட்டுணுவும் வெற்றிலையும் தம்முள் சமமா யிருப்பதனைக் காணுங்கள், எங்ஙனமெனில்,

வானவில்லானது:

நீரினிடத்தேயிருந்து உளதானபடியினாலும், நிறத்திலே பசுமை உடைத்தாய் இருப்பதனாலும், அழகாயிருப்பதனாலும், உலகில் வறட்சியினாலே எழும் பகைமையினை வளம் பெருக்க மழை வருகிறதென அறிவித்துத் தீர்த்து வைக்கின்ற தன்மையினாலும், உலகிற் பொருந்திய மக்களின் பல்வகைத் துயரங்களையும் போக்குவதனாலும்,

விஷ்ணுவானவர்:

பிரளய காலத்தே நீரின் மேற் பள்ளிகொண்டிருந்தலினாலும், பச்சைத் திருமேனியினை உடைமையினாலும், திருமகளை மார்பிடத்தே கொண்டிருத்தலாலும், உலகிடத்தே அறநெறிப் பகைஞரை அழித்துக் காக்கும் தன்மையினாலும், தன்னைச் சரணடையும் மனிதர்களின் பல்வேறு வினைகளையும் மாற்றி அவர்க்கு நற்கதி அருளுதலினாலும்,

வெற்றிலையானது:

நீர்க்கால்களிலேயே உண்டாவதனாலும், பச்சை நிறத்தினை உடையதாயிருந்தலாலும், மங்கலப் பொருளாக இருந்ததலாலும், உலகிற் பகை தீர்க்கும் இடத்து நட்புக்கு அடையாளப் பொருளாக அமைகின்ற தன்மையினாலும் தன்னைப் பொருந்திய மக்களுடைய பல வியாதிகளைப் போக்குவதனாலும் என்கிறார் கவி காளமேகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Mar-20, 8:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே