குமரேச சதகம் - அறிமுகம்

குமரேச சதகம் - அறிமுகம்

நம் செந்தமிழ்மொழி யில்எழுந்த இலக்கியச் செல்வங்கள் பலவற்றுள் ‘சதகம்' என்னும் வகையும் ஒன்று. சதம் என்னும் சொல் வடசொல். அது ககரம் பெற்றுச் சதகம் என்றாயிற்று. சதகம் என்பது நூறு என்னும் பொருளது ஆகும். குமரேச சதகம் என்பது குமரனாகிய முருகப்பெருமான் மீது பாடப்பட்ட சதகம் ஆகும்.

புதுக்கோட்டை மாவட்டத்திலே உள்ள திருப்புல்வயல் என்னும் தலத்தில், மலையின் மீது குமரக்கடவுள் திருக்கோயில் உள்ளது.
.
பிற்காலப் புலவர்கள் சதக வகை நூல்கள் யாத்து அவற்றில் மக்ளனைவரும் வாழவேண்டிய உலகியல் நெறி அறம் முதலியவற்றை எளிய இனிய தொடர்களைக் கொண்டமைத்து விளக்கி வருவாராயினார்.

அதுபோன்றே இந்நூலும் திருப்புல்வயலில் எழுந்தருளியிருக்கின்ற குமரேசர் மீது வாழ்த்தாகப் பாடி இறுதியடிகளில் இறைவன் பெயரை ஒரே மகுடமாக அமைத்து மேல் அடிகளிலெல்லாம் அறனும் மறனும் பண்பும் பழக்க வழக்க ஒழுக்க முறைகளும் அமைத்துப் பாடப் பெற்றிலகுறுகின்றது.

புல்வயல் ஊராட்சி தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். அங்கே ஒரு மலையின் மீது குமரக்கடவுள் திருக்கோயிலுள்ளது.

குமரேச சதகம் என்பது மூன்று சொற்களாலும் இரண்டு சந்திகளாலும் ஆன தொடர். (குமரனாகிய ஈசன், குமரேசனது சதகம்).

விளையு மொருபொருள் மேலொரு நூறு
தழைய உரைத்தல் சதகம் என்ப, - இலக்கண விளக்கம்

ஒரு பொருளென்பது அகம், புறம் என்னும் இருவகைகளில் ஒன்றைப் பற்றியது. இந்நூல் புறப்பொருள் பற்றியது. குமரேசனைத் தலைவனாக அமைத்து இந்நூலைச் செய்திருப்பதாற் குமரேச சதகம் எனப்பட்டது. அஃதாவது குமரக் கடவுளை வாழ்த்தும் முறையிலே எழுதப் பெற்றதாகும்.

இச் சதகத்தின் இறுதியிலே, ‘பன்னிய புல்வயலில் வால குமரேசர் மேற் பரிந்த குருபாத தாசன்' என வருவதால் இந் நூலாசிரியர் பெயர் குருபாததாசர் என அறியலாம். இவரது இயற் பெயர் முத்துமீனாட்சிக் கவிராயர் என்றும், இவர் வேளாளர் குலத்தவர் என்றும் கூறுகின்றார்கள்.

குமரேச சதகம் - அறிமுகம் முதலாக காப்புச் செய்யுள் தொடங்கி, அவையடக்கம், பாடல்கள் 1 - 100 வரையில் அளிக்க முயற்சிக்கிறேன். புல்வயல் முருகக் கடவுள் அருள வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Mar-20, 12:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 250

மேலே