பஃறாழிசைக் கலிப்பா

திங்களொளிர் மலர்முகத்தில் குங்குமத்தில் பொட்டிட்டுச்
சங்கனைய கழுத்தினிலே தங்கமணிச்
சரமணிந்து
மங்கையவள் பட்டுடுத்தி மங்கலமாய் வருகின்றாள் !

செங்கனிவாய் இதழ்தவழும் சிங்காரக் குமிட்சிரிப்பால்
அங்கிருக்கு முறவுகளின் அன்புளத்தை யீர்க்கின்றாள்!

பின்னலிட்ட கூந்தலிலே பிறைகளுடன் பூச்சூடித்
தென்றலிலே அசைந்துவரும் தேவதையாய்த் தெரிகின்றாள்!

சிற்றிடையில் மேகலையும் சிணுங்கலுடன் வளைகொஞ்சப்
பொற்சிலையா யடியெடுத்துப் பொலிவோடு வைக்கின்றாள்!

விழியிரண்டும் தரைநோக்க வெட்கத்தை யணியாக்கி
அழகுமகள் கொலுசொலிக்க அன்னநடை பயில்கின்றாள்!

கன்னியர்கள் புடைசூழ்ந்து காதோரம் கிசுகிசுக்கக்
கன்னிமயில் குழிவிழுந்த கன்னங்கள் சிவக்கின்றாள்!

பூமிக்கே வலிக்காமல் பூம்பாதம் பையவைத்து
மாமனுடன் மணமுடிக்க மணமேடை அடைகின்றாள்!

ஆங்கே

காதலுடன் காத்திருந்த கண்ணாளன் பார்த்திட
மாதவள் மையலில் நாணினாள் - வேத
மொலிக்கத் திருப்பூட்டில் உள்ளங் குளிர்ந்து
மலராய்ச் சிரித்தாள் மகிழ்ந்து.

சியாமளா ராஜசேகர்

( பைந்தமிழ்ச் சோலையில் கற்றது)

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 1:37 am)
பார்வை : 5

மேலே