வெற்றி தெரியுது

உள்ள மெங்கு முன்றன் நாமம்
ஓங்கி ஒலிக்குது !
கள்ள மெல்லாம் சிறுக சிறுகக்
கரைந்து போகுது !
துள்ளி வந்த சந்தப் பாட்டு
சொக்க வைக்குது !
தெள்ளு தமிழைக் கேட்டு மயங்கித்
தென்ற லாடுது !!

தந்தம் கொண்டோன் தம்பி யுன்றன்
சரணம் கேட்குது !
கந்த வேளுன் சந்நி திக்குள்
கவலை மறக்குது !
புந்தி தெளிந்து புனித மாகிப்
பொலிவும் கூடுது !
முந்திக் கொண்டு மூண்ட வினைகள்
முடிவை யெட்டுது !!

எண்ண மெல்லாம் வேலன் நினைவே
இன்ப மளிக்குது !
வண்ண மயிலில் வந்த கோலம்
மனத்தை அள்ளுது !
கொண்டை கொண்ட சேவற் கொடியும்
கொஞ்சி அழைக்குது !
கண்ணைக் கவரும் வேலின் அழகில்
கவிதை பிறக்குது !!

படிக ளேறிப் பரமன் மகனைப்
பார்க்கத் தோணுது !
பிடித்த பாக்கள் காதி லுரசப்
பித்த னாக்குது !
வடிவே லழகன் வடிவு கண்டு
மனங்கு ளிர்ந்தது !
விடியு மென்ற நம்பிக் கையில்
வெற்றி தெரியுது !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 1:42 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
Tanglish : vettri theriyuthu
பார்வை : 9

மேலே