கண்களிலே காதலோடு

கண்களிலே காதலோடு
காத்திருக்கிறாள் - அவள்
கண்ணன்வரும் திசைநோக்கிக்
கனிந்து நிற்கிறாள் !!

பண்ணிசைத்துப் பரவசத்தில்
பாடி மகிழ்கிறாள் - வரும்
பாதையிலே கவனமாகப்
பார்வை பதிக்கிறாள்!

வெண்ணிலவைத் தூதுசெல்ல
வேண்டிக் கொள்கிறாள் - தன்
வெட்கத்தை விட்டுவிட்டு
விடயம் சொல்கிறாள் !!

கெண்டைவிழி படபடக்கக்
கெஞ்சிக் கேட்கிறாள் - நிலா
கேலிசெய்தும் தளராமல்
கிளம்பச் சொல்கிறாள் !!

தென்றலுடன் மௌனமாகச்
சிறகு விரிக்கிறாள் - தன்
செங்கனிவாய் திறந்துமெல்லச்
சிரிப்புதிர்க்கிறாள் !!

அன்றலர்ந்த மலர்போலும்
அழகில் மிளிர்பவள் - இன்று
அன்பொளிரும் முகத்தினிலே
அமைதி இழந்தனள் !!

பொன்னிலவைக் காணாமல்
பொறுமை இழந்தனள் - அவள்
பொங்கிவந்த கண்ணீரைப்
பொத்தி மறைத்தனள்!!

கன்னிமனம் படும்பாடு
கண்ணன் அறிவனோ - அந்தக்
கட்டழகன் கால்கடுக்கக்
காக்க வைப்பனோ ?

முகில்திரையைத் தான்விலக்கி
முல்லைச் சிரிப்புடன் - வான்
முத்துநிலா அவன்வரவை
முந்திச் செப்பினள் !!

சகியவளின் சொற்கேட்டுச்
சாந்த மானவள் - தன்
தங்கநிலாப் பெண்ணைப்பைந்
தமிழில் வாழ்த்தினள் !

மகிழ்ச்சிவெள்ளம் பெருக்கெடுக்க
மங்கை மிதந்தனள் - கை
வளைகுலுங்க மயில்போலும்
மயங்கி யாடினள்!

அகங்குளிர வைத்தவனின்
அணைப்பி லுருகினள்! - அங்கு
ஆனந்த மீட்டலிலே
அன்பைப் பொழிந்தனள்!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 1:44 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 15

மேலே